ஆண்டவன் கட்டளை விமர்சனம்

நம்மை சுற்றியே நாலாயிரம் கதைகள் இருக்கும் போது, அண்டை மாநிலத்தில் துண்டை விரிப்பானேன்? காக்காமுட்டை மணிகண்டனின் கண்ணில் விழுந்த இந்தக் ஒரிஜனல் கதை, லட்சோப லட்சம் பேருக்கு அட்வைஸ்! நல்ல பட ரசிகர்களுக்கு கும்மாளம்! இதற்கப்புறம் மணிகண்டனின் வேல்யூ மார்க்கெட்டில் உயர்ந்து, Money ‘கண்டேன்’ ஆவார்! அப்பவும் மாறாமல் இதே மாதிரி படங்கள் எடுக்க, ஆயிரமாயிரம் வேண்டுதல்கள்! ‘ஆண்டவனின் கட்டளை’யும் அதுவாகவே இருக்கட்டும்…

ஊரில் கடன். லண்டனில் போய் வேலை செய்யலாம் என்று கிளம்பும் விஜய் சேதுபதியும், யோகிபாபுவும் சென்னை வருகிறார்கள். வந்த இடத்தில் கோக்கு மாக்கு தரகரின் அட்வைஸ்களை ஏற்றுக் கொண்டு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். டூரிஸ்ட் விசாவுக்கு அப்ளை செய்யும்போது, மனைவி இருப்பதாக சொன்னால் விசா ஈசியாக கிடைக்கும் என்ற அறிவுறுத்தலின்படி, பொய்யாக ஒரு பெயரை குறிப்பிடுகிறார் விஜய் சேதுபதி. அவர் குறிப்பிடும் கார்மேகக்குழலி, நிஜ வாழ்விலும் இவரை ‘கிராஸ்’ செய்கிறார்.

நடந்தேயிராத கல்யாணத்திற்காக ‘விவாகரத்து’ கோரும் விஜய் சேதுபதி, அதே கார்மேகக்குழலியின் மனசில் இடம் பிடிப்பதுதான் மேலோட்டமான கதை. இந்தக் கதைக்குள் டைரக்டர் மணிகண்டனும், கதையாசிரியர் அருள்செழியனும் வைத்திருக்கும் பண்டமும், அதன் ருசியும் சொல்லி மாளாது. சுவைத்தால்தான் புரியும். ஒருமுறை தியேட்டருக்கு செல்பவர்களுக்கு பேரானந்தம் காத்திருக்கிறது. அப்படியொரு லைவ்வான திரைக்கதை! ரசனையான வசனங்கள்!!

‘இவர் மட்டும் இல்லேன்னா இந்தப்படம் என்னாகியிருக்கும்?’ என்கிற சிந்தனையை தன் ஒவ்வொரு படத்திலும் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார் விஜய் சேதுபதி. ‘மனுஷன் என்னமா நடிக்கிறான்’ என்று ஒற்றை வரியில் கடந்துவிட முடியாத நடிப்பு. பொய் சொல்லக்கூடாது என்று நினைக்கும் இவரை சுற்றிதான் எத்தனை பொய்கள்? திடுக் திடுக்கென சந்தர்ப்பங்கள் இவரையும் பொய்க்குள் தள்ளிவிடுவதும், அதற்கேற்ப இவர் அடாப்ட் ஆவதும் அற்புதம். போகிற போக்கில் இவரை விட்டு பலமாக பேச வைத்திருக்கிறார் டைரக்டர். “இப்படி அடுத்தவங்க பேசும்போது ஒட்டுக் கேட்கக் கூடாது”வில் ஆரம்பித்து, சென்னையின் ஹவுஸ் ஓனர்களின் அட்டகாசங்களை பொறி கலங்க போட்டுத் தாக்குகிற வரைக்கும், ஒவ்வொன்றும் சுளீர் சுளீர்!

இறுதியில் தன் லவ்வை ரித்திகாசிங்கிடம் அவர் சொல்கிற அந்த ஒரு காட்சியையும், அதற்கு அவர் கொடுக்கும் ரியாக்ஷனையும் ரசிப்பதற்காகவே இன்னும் நாலு முறை தியேட்டருக்கு ஓடலாம்!

‘இறுதி சுற்று’ படத்தில் சண்டைக் கோழியாக வந்த ரித்திகாசிங், இந்தப்படத்திலும் கிட்டதட்ட அப்படியொரு கோபக்கோழிதான்! முகத்தில் என்னவொரு அலட்சியம்! அவரையே அறியாமல் ஒரு பொறிக்குள் சிக்கிக் கொண்டாலும், ஒரு ரிப்போர்ட்டரின் தைரியத்துடன் அதை அணுகுகிற கெத்து, அப்படியே வந்து உட்கார்ந்து கொள்கிறது அவரது பாடி லாங்குவேஜில். (மரத்தை சுற்றி டூயட் ஆடுற படமெல்லாம் வேணாம்மா… இதே ரூட்ல போங்க)

விஜய் சேதுபதிக்கு இணையாக ரசிக்க வைக்கிற இன்னொரு நபர் யோகிபாபு. சும்மா நேருக்கு நேர் பார்த்தால் கூட, தியேட்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறது. டயலாக் டெலிவரியும், அந்த லுக்கும், மவுனமான நேரத்தில் கூட அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களும், யோகிபாபுவுக்கு ஏராளமான கைதட்டல்களை குவிக்கிறது. பாதியிலேயே இவரை பேக்கப் பண்ணி அனுப்பி விடுகிறார்களா… ஐயோ என்றாகிறது ரசிகர் கூட்டம்! இன்னும் கொஞ்ச நேரம் நம்மூர்லேயே வைத்திருந்திருக்கலாமே மணிகண்டன்!

இந்தப்படத்தின் மொத்த கவுரவத்தையும் ‘காஸ்ட்டிங் டைரக்டர்’ என்று யாராவது தனியாக இருந்தால் அவருக்கு கொடுத்துவிடலாம். ஒவ்வொரு கேரக்டருக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முகங்கள் அப்படி! ரித்திகா சிங் அம்மாவில் ஆரம்பித்து, அந்த இலங்கைத் தமிழர்… அப்புறம், அந்த விஜிலென்ஸ் அதிகாரி, கூத்துப்பட்டறை நாசர், நீதிபதியம்மா, சீனியர் லாயர் ஜேம்ஸ், விநோதினி, என அத்தனை பேரும் ஆஹா ஓஹோ! முக்கியமாக போலி பாஸ்போர்ட் ஆசாமி எஸ்.எஸ்.ஸ்டான்லி. மிக இயல்பான நடிப்பு. அந்த சபாரியும், அந்த பொத்தல் சிரிப்பும், பிரச்சனை வரப்போகிறது என்று தெரிந்ததும், சொல்லாமல் கொள்ளாமல் நழுவும் எச்சரிக்கையுமாக ‘பான் வித் கிரிமினலாக’ பிரமாதப்படுத்திவிட்டார்.

ஈழத்தமிழரின் துயரத்தை அப்படியே மெல்லிய கோடு போல போட்டுக் கொண்டே போகிறது படம். ஆங்காங்கே சமூகத்திற்கு சங்கதி சொல்வதிலும் பெரிதாக மெனக்கெட்டிருக்கிறது மணிகண்டனின் பேனா. ஆரம்பத்திலேயே புரோக்கர்களை நம்பி ஏமாறுகிறவர்களுக்கான விழிப்புணர்வு படம் என்று தெரிவித்திருக்கிற நேர்மைக்கு, ஒரு சிரம் தாழ் வணக்கம்!

ஒரு வில்லேஜ். மிக நீண்ட சாலை. அதில் புள்ளியாய் துவங்கி சைக்கிளில் டபுள்ஸ் வரும் ஆத்மார்த்த நண்பர்கள் என, முதல் ஷாட்டிலேயே நிமிர வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷண்முக சுந்தரம்.

பாடல்களை படமாக்குவதில் கூட, தத்துபித்து சமாச்சாரங்கள் இல்லை. எல்லாமே மாண்டேஜ் பாடல்கள்தான். கே வின் இசை உறுத்தவில்லை. அநாவசியமாக ஒரு பிரேம் கூட வந்துவிடக் கூடாது என்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்ட எடிட்டர் அனுசரணுக்கும் தனி பாராட்டுகள்.

உள்ளூர் கலெக்ஷன் மட்டுமல்ல, உலக படவிழாக்களிலும் கலந்து கொண்டு ஈரோ, டாலர்களாக குவிக்க வேண்டும் என்பதுதான் ‘ஆண்டவன் கட்டளை’ போலிருக்கிறது. அள்ளுங்க அள்ளுங்க!

-ஆர்.எஸ்.அந்தணன்

To listen audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
M.S.DHONI WITH SUPERSTAR-Promotion Event Stills Gallery

Close