சட்டசபைக்கு வராத எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உண்டா? கமல் கேள்விக்கு பதில் உண்டா?
நாடு எக்கேடு கெட்டால் எனக்கென்ன? தானுண்டு, தன் மாலைநேர மயக்கம் உண்டு என்று இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், ட்விட்டரையே ஆயுதமாக்கி தினந்தோறும் வாள் வீசி வருகிறார் கமல். இந்தாளு இன்னைக்கு என்னத்தை போட்டுருக்காரோ என்று திகிலோடு கவனிக்கிறது அரசியல் வட்டாரமும்.
விரைவில் தனிக்கட்சி துவங்கி, தமிழக அரசியலில் புயல் கிளப்பப் போகும் கமல் இன்று பதிவு செய்திருக்கும் கருத்து மிக மிக முக்கியமானது. கவனிக்க வேண்டியதும் கூட.
ஒருங்கிணைந்த அதிமுக இரண்டாக உடைந்து அதற்கப்புறம் மூன்றாக சிதறிவிட்டது. ஒருவழியாக ஒன்றிணைந்துவிட்டாலும் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இடையே அவ்வளவு இணக்கம் இல்லை என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். இந்த நிலையில் தனக்கு ஆதரவான 21 எம்.எல்.ஏ க்களுடன் கிளம்பி, எல்லா ஊரையும் கூவத்தூர் ஆக்கிக் கொண்டிருக்கிறார் தினகரன். கடந்த பல மாதங்களாகவே தொகுதி பிரச்சனை எதையும் கண்டு கொள்ளாமல் பட்டியில் அடைபட்ட ஆடு போல ஊர் சுற்றி வருகிறார்கள் அந்த 21 சட்ட மன்ற உறுப்பினர்கள். (அதிலேயும் ஒருவர் தற்போது இல்லை என்கிறார்கள்)
இவர்கள் குறித்துதான் சட்டமன்றத்திற்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் கமல். வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் கட் என்றால், ரிசார்ட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள குதிரைகளுக்கு என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அவர்.
கமல் போடுகிற ட்விட்டுகளுக்கு வழக்கம் போல கோபப்படும் ஆட்சியாளர்கள் இந்த முறையும் அதைதான் செய்யப் போகிறார்கள். வேறென்ன நடக்கும்?
https://youtu.be/Jvt4U0REi6Q