என்னை படிச்ச வச்சே… பெயிலாப் போய்டுவேன்! எச்சரித்த இளைஞர் ஹீரோவானார்!


சிற்பி இசையமைத்தது சில சில படங்களுக்குதான் என்றாலும், அந்த சிலவற்றில் வந்த பல பாடல்கள் ஹிட்! (நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, வருஷமெல்லாம் வசந்தம் இவையெல்லாம்தான் சிற்பியின் பெருமைப்பட வைக்கும் சிறுகுறிப்புகள்) அப்படிப்பட்ட சிற்பிக்கு அழகான ஒரு மகன். பெயர் நந்தன் ராம். “தம்பி…நீயும் மியூசிக் கத்துக்கோ, நீயும் பி.காம் படி” என்றெல்லாம் நச்சரித்த அப்பாவிடம், “என்னைய நான் நினைக்கிற மாதிரி படிக்க வைக்கலேன்னா பெயிலாயிடுவேன். ஓகேவா?” என்றாராம் நந்தன். அப்புறம்?

“மகன் நினைத்த மாதிரியே விஸ்காம் படிக்க வைச்சேன்” என்கிறார் சிற்பி.

வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நடிக்க ஹீரோயின் ரெடி. கற்றது தமிழ் படத்தில் சிறுவயது அஞ்சலியாக நடித்த வெண்பாவை ஹீரோயினாக்கிவிட்டார். நல்ல அழகான ஹீரோ தேடி அலைந்தவர் கண்களில் நந்தன் பட, அடுத்த நொடியே உற்சாகமாகிவிட்டாராம் வாசுதேவ் பாஸ்கர்.

“அலைகள் ஓய்வதில்லை மாதிரி, பல வருஷங்களுக்கு பிறகு ஒரு பொருத்தமான ஜோடியுடன், பொருத்தமான காதல் கதையை பார்க்கப் போறீங்க” என்கிறார் உற்சாகமாக. பார்க்க அந்த காலத்து அஜீத் போல இருக்கும் நந்தன், இப்படத்திற்காக மொட்டையும் அடித்திருக்கிறார்.

ஒரு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். நடித்து முடித்தபின், “இவ்வளவு நல்ல கதையில் நடிக்க வச்ச உனக்கு நான்தான்யா சம்பளம் கொடுக்கணும்” என்று கூறியவர், வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாராம் வாசுதேவ் பாஸ்கரிடம்.

படத்தின் ஹீரோயின் வெண்பா, அஞ்சல் வழி மூலம் சட்டம் படித்து வருகிறார். “வழக்கமா லாயருங்க வாயாடுவாங்க. நான் இந்தப்படத்தில் அவ்வளவு வாய் பேசாம நடிச்சுருக்கேன். பர்பாமென்சுக்கு நிறைய ஹோப் கொடுத்திருக்கிறார் டைரக்டர்” என்றார்.

மிகப்பெரிய நிறுவனம் ஒன்று, படத்தை மொத்தமாக கொள்முதல் பண்ணுவதற்கு ஆர்வமாக இருக்கிறதாம்.

பள்ளியை வச்சு படம் எடுத்து காலேஜ் கட்ற அளவுக்கு சம்பாதிங்க வாசுதேவ் பாஸ்கர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சட்டசபைக்கு வராத எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உண்டா? கமல் கேள்விக்கு பதில் உண்டா?

நாடு எக்கேடு கெட்டால் எனக்கென்ன? தானுண்டு, தன் மாலைநேர மயக்கம் உண்டு என்று இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், ட்விட்டரையே ஆயுதமாக்கி தினந்தோறும் வாள் வீசி வருகிறார் கமல்....

Close