அப்பா – விமர்சனம்

சுண்டைக்காய் செடியில் பூசணிக்காய் விளையுமா என்று பேராசையோடு திரியும் ஜனங்களின் மனசில், குழந்தைகள் என்பது யார்? மெஷினா, உயிரா? அவர்களை கைக்குட்டை போல கசக்கி, பிடித்துணி போல சுருட்டித்தள்ளும் பெற்றோர்களே… உங்கள் புத்தியை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வந்திருக்கிறார் சமுத்திரக்கனி. இப்படியொரு கதையை எடுக்கத் துணிந்ததற்காகவே முதல் வணக்கம். அதையும் ஓரிடத்தில் கூட அலுத்துப் போகா வண்ணம் சுவாரஸ்யமான திரைக்கதையால் அழகூட்டியிருக்கிறாரே… அதற்கு தனியாக ஒரு போனஸ் வணக்கம்! படம் முடிந்து வெளியே வரும்போது ஹிட்லர் அப்பனாக இருந்தாலும், பிள்ளைகளின் தோளில் கைபோட்டுக் கொள்வான்! இது சத்தியம்… நிச்சயம்!

நான்கு விதமான அப்பாக்கள். தத்தமது பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதுதான் கதை. அல்ஜிப்ரா கணக்கை ஆனந்த விகடனுக்குள் இணைத்தது மாதிரி அப்படியொரு சுவாரஸ்யத்தோடு பின்னி பிணைய விட்டிருக்கிறார் சமுத்திரக்கனி. போதனைதான். ஆனால் பொழுதுபோக்குக்கு குறைவில்லை. முக்கியமான கேரக்டரில் அவரே நடித்திருப்பது மேலும் சிறப்பு. (அவர் ஏற்கனவே பல படங்களில் சேர்த்து வைத்த ‘நல்ல மனுஷன்’ இமேஜ் இந்த படத்தில் வட்டியும் முதலுமாக வாரிக் கொடுத்திருக்கிறது)

தடால் புடாலென கோபத்தில் பாத்திரங்களை உடைத்துத்தள்ளும் மனைவி, மகனை இங்கிலீஷ் ப்ளே ஸ்கூலில் சேர்க்க வேண்டுமென்று ஆசைப்பட, “அவன் ஸ்கூலுக்கு போக இப்போ என்ன அவசரம்? நானெல்லாம் எட்டு வயசுலதான் ஸ்கூலுக்கே போனேன்” என்கிறார் அப்பா சமுத்திரக்கனி. பட்டு பாத்திரமெல்லாம் படீர் திடீராகிறது வீட்டில். வேறு வழியில்லாமல் அதே பள்ளியில் சேர்த்தால், அவர்களும் அவர்களின் கல்வி முறையும் சமுத்திரக்கனியை வெறிகொள்ள வைக்கிறது. அப்புறமென்ன… மகனை ஸ்கூலிலிருந்தே மீட்டு அழைத்து வருகிறார். பள்ளி போச்சு. மரியாதை போச்சு என்று கருதும் மனைவி கோபித்துக் கொண்டு அப்பா வீட்டுக்கு போய்விட, தனி மனிதனாக மகனை வளர்க்கும் கனி, அவனை உலகமே வியக்கும் நீச்சல் வீரனாக்குகிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தையை மச்சான்கள் பிரிக்க முயல, மகனை மார்போடு அணைத்துக் கொண்டு அத்தனை அடியையும் தாங்கிக்கொள்ளும் காட்சியில், கண்கலங்க விடுகிறார் அந்த அன்பான அப்பா சமுத்திரக்கனி.

மகன் பிறக்கும் போதே அவன் சீக்கிரம் டாக்டராகி அமெரிக்காவில் ஆஸ்பிடல் கட்டணும் என்கிற ஆசையோடு திரிகிறார் இன்னொரு அப்பாவான தம்பி ராமய்யா. எந்நேரமும் மகனை படி படி என்று வற்புறுத்தும் அவர், குழந்தைப்பருத்தின் குதூகலங்கள் எதையும் அவனை அண்டவிடாமல் அட்டகாசம் செய்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயில் போன்ற ஒரு ஆஸ்டலில் மகனை சேர்க்க, அங்கே படிக்கும் அவன் மனம் புழுங்கி எடுக்கும் முடிவு…? பயங்கரம்!

‘நாலு பேருக்கு தெரியாம இருந்துட்டு வந்துடணும்டா’ என்று சொல்லி சொல்லியே மகனை வளர்க்கிற இன்னொரு அப்பாவாக நமோ நாராயணன். மகனும் வளராமலேயே போய் விடுகிறான். ஒன்றரை அடி உயரம் கூட தாண்டாத அந்த வளர்ந்த சிறுவனின் தன்னம்பிக்கையை தட்டி எழுப்பி, சமுதாயத்தில் அவனையும் நிமிர வைக்கிறார் சமுத்திரக்கனி.

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பெரிய காக்கா முட்டை விக்னேஷ், இவனுடன் ராகவ், யுவலட்சுமி, கேபிரில்லா, நசத் என்று படத்தில் நடித்திருக்கும் ஐந்து குழந்தைகளும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் இனக்கவர்ச்சி மலரும் ஆரம்ப கட்டத்தில் விக்னேஷுக்கு ஏற்படும் தடதடப்பை மிக நாசுக்காக டீல் பண்ணும் சமுத்திரக்கனியும், அந்த காட்சிகளில் உணர்ந்து நடித்த விக்னேஷ் மற்றும் கேபிரில்லாவும் பாராட்டுக்குரியவர்கள். குழந்தைகள் அந்த வயதில் என்ன பேசுவார்களோ, அந்த வயதிற்கே போய் வசனங்களை எழுதியிருக்கிறார் கனி. “எங்க வீட்டுக்கு அடிக்கடி வா. ஆனால் உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு வா…” என்கிற டயலாக்கில்தான் எவ்வளவு அர்த்தங்கள்!

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதை, அந்த குட்டிப்பையன் நசத் மூலம் நச்சென்று புரிய வைக்கிறது படம். ‘நாயை நாம் பாதுகாத்தால் அது கிராமம். நாய் நம்மை பாதுகாத்தால் அது நகரம்’ என்று இரண்டே வரிகளில் கைதட்டல் வாங்குகிறான்(ர்) நசத்! பொறுத்தமான இடங்களில் எல்லாம், ‘வளர்ப்பு சரியில்லைப்பா’ என்று விக்னேஷ் அலுத்துக் கொண்டால், விலாநோக சிரிக்கிறது தியேட்டர்.

பல படங்களில் அசால்ட்டாக கடந்து போன கேரக்டரைதான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் தம்பி ராமய்யா. ஆனால், அவர் மீது வருகிற அத்தனை எரிச்சலையும், அந்த கடைசி நிமிஷங்கள் கரைந்து காணாமல் போக வைக்கின்றன. இவரது கேரக்டர் ஒன்று போதும். சமுதாயத்தில் அடித்து திருத்த வேண்டிய ஜென்மங்கள் பல, தானாகவே திருந்தும்!

நட்புக்காக சில காட்சிகளில் வந்து போகிறார்கள் கவிஞர்கள் யுகபாரதி, பா.விஜய், கலைக்குமார் மற்றும் சசிகுமார். பொறுத்தமான தேர்வு. பொறுத்தமான இடம்!

படத்தில் பல காட்சிகள் வசனங்களே இல்லாமல் நீள்கின்றன. அவற்றையெல்லாம் தன் இசையால் நிரப்பி உயிர் சேர்த்திருக்கிறார் இளையராஜா. அதுவும் குழந்தைக்கு ஆபத்து என்று தெரிந்து ஓடிவரும் ராகவ் குடும்பமும், சமுத்திரக்கனியும் ஆஸ்பிடல் ஆஸ்பிடலாக தேடி, இறுதியில் அவன் சிகிச்சை பெறும் ஆஸ்பிடலுக்கு வந்து சேர…. அங்கு ஆரம்பிக்கிறது ராஜாவின் வித்தை. இதயத்தின் லப் டப் தாறுமாறாக எகிற வைக்கும் அந்த காட்சியை இன்னும் இன்னும் திகிலாக்குகிறது பின்னணி இசை!

ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு, இது படமா? கண்ணெதிரே நாம் பார்க்கும் வாழ்க்கையா? என்று நெக்குருக வைக்கிறது.

சிறுவன் காணாமல் போகிற அந்த காட்சிக்கு பிறகு வரும் பதற்றம் ஓ.கே. ஆனால் அவன் எங்கு போனான்? எப்படி போனான்? ஏன் போனான்? என்ற முடிச்சு கடைசி வரை அவிழாதது ஏமாற்றம்தான்.

உறவோடு வாழும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் அப்பா! அதற்கப்புறம் சொல்வீர்கள்… ‘அப்பப்பா’!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாதி கதை சூரி மேல்! பரவாயில்லையாம் ஹீரோவுக்கு!

லெக் பீஸ் உனக்கு, நெஞ்செலும்பு எனக்கு என்ற கோட்பாடு வராத வரைக்கும் வயிறு நிறையப் போவதில்லை என்பதை ஓவர் நைட்டில் உணர்ந்துவிட்டார் உதயநிதி. ஒரு கல் ஒரு...

Close