‘அர்ஜூன்ரெட்டி ’ என்கிற அப்பாடக்கரும் ‘அந்த ஏழு நாட்களும் ’ -முருகன் மந்திரம்
கடந்த ஆகஸ்டு மாதம் ‘அர்ஜூன்ரெட்டி’ என்றொரு தெலுங்கு திரைப்படம் வெளியானது. இந்த பெயரை பார்த்த உடனே நம்ம ஊர் அப்பாடக்கர்ஸ் நினைவு தான் எனக்கு வந்தது. வம்புக்குன்னு தேவர்மகன், சின்னக்கவுண்டர், சபாஷ் நாயுடுன்னு படங்களுக்கு பெயர் வைப்பாங்களே நம்ம பயபுள்ளைக. நம்ம பயபுள்ளைக மாதிரியே சிந்தனை உள்ள பயபுள்ளைக தெலுங்கு தேசத்துலயும் இருக்கு போலன்னு நெனைச்சிக்கிட்டேன். அதுசரி… ஒரே இந்தியா தானப்பா. மொழிகள் தானே பலப்பல. சிந்தனை ஒன்றுடையாள் தானே. பாரதியே சொல்லிருக்காப்லயே.
அர்ஜூன்ரெட்டி படத்தோட டைரடக்கரும் ரெட்டி, சந்தீப் ரெட்டி வங்கா, தயாரிப்பாளரும் ரெட்டி, ப்ரனாய் ரெட்டி வங்கா… சரிதான்… அப்பாவும் மகனுமா இருப்பாங்க போல.
கதாநாயகன் விஜய் தேவேர கொண்டா, கதாநாயகி ஷாலினி பாண்டே. இவங்க பேர்லயும் கொண்டா பாண்டேல்லாம் இருக்கே. அதென்னமோ ஏதோ… கிடக்கட்டும்.
நம்ம கதைக்கு வருவோம்.
கதாநாயகன் அர்ஜூன்ரெட்டி அவர் படிக்கிற மெடிக்கல் காலேஜ்ல ஃபைனல் இயர் ஸ்டுடண்ட். பிரில்லியண்ட். பட் காலேஜ்க்கே “தல” மாதிரி. ஸ்போர்ட்ஸ் ப்ளேயர். வாலிபால் கிங். அதோட பெரிய வீட்டுப்பிள்ளை. அதைவிட முக்கியமா ரொம்ப பெரிய கோவக்காரர். அவர் கோவம் அந்த காலேஜ்ல ரொம்ப பிரசித்தம். எவர் சொன்னாலும் கேட்க மாட்டாரு. எவரும் நம்மாளை கண்ட்ரோல் பண்ணவும் முடியாது. ஒன் மேன் ஆர்மி. ஒன் மேன் அரசாங்கம். அவர் படிக்கிற காலேஜ்ல புதுசா வந்து சேருகிற கதாநாயகியை அவர்க்கு ரொம்ப பிடிச்சுப்போக, லவ் பண்றாரு. லவ் பண்ணத் தொடங்குறார். இவர் வேற காலேஜ் “தல” அப்டிங்கிறதுனால அந்த புள்ளையும் இவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகுது. எப்டின்னா, நம்ம ஏழாம் அறிவு படத்துல டாங்லீ பாத்த உடனேயே அவர் கண்களை பாக்கிறவங்க அத்தனை பேரும் அவர் நெனைக்கிறதை செய்வாங்களே… சேம்… சேம். அப்டி போகுது அந்த புள்ள.
முழுக்கதையும் சொல்ல விருப்பம் இல்ல. நான் அடுத்த விசயத்துக்கு வரேன். லவ் பண்ணுவாங்க. செமயா லவ் பண்ணுவாங்க. சூப்பரா லவ் பண்ணுவாங்க. அட காதலன், காதலிக்கு அடுத்த லெவலுக்கு போய் லவ் பண்ணுவாங்க… (புரிஞ்சுருச்சா?) அப்போ அடுத்து என்ன நடக்கும்? வில்லன் வரணும்ல. ஆமா… வில்லன் யாரு? யாருமில்ல சாதி. சாதீ தான் வில்லன். கதாநாயகியோட அப்பாவும் குடும்பமும் இந்த செம யூத் லவ்வர்ஸை சாதிய காரணம் காட்டி பிரிச்சு விட்டுர்றாங்க… அந்த புள்ளைய உருட்டி மெரட்டி வேற ஒருத்தனுக்கு…. இல்ல இல்ல.. வீட்டுக்குள்ளயே நாக்க தொங்க போட்டுக்கிட்டு திரியிற ஒரு சொந்தக்கார பயபுள்ளைக்கு அந்த பொண்ணை கட்டி வச்சிர்ர்ராங்க. (இடையில அந்தபுள்ள இவரைத்தேடி வரப்போ… இவர் அவசரப்பட்டு அவருக்கும் அவங்க காதல் நிறைவேறாம போறதுக்கும் ஆப்பு வச்சிக்கிற உபகதையும் உண்டு.)
காதல் போச். காதலியும் போச்.
கதைநாயகன் தேவதாஸ் மாதிரி தாடி வளர்த்துட்டு இஷ்டத்துக்கு வாழ்றாரு. இஷ்டத்துக்கு… புட்டி… குட்டி…. இப்பவும் எப்பவும்… பட் ஹி இஸ் அ வெரி ப்ரில்லியண்ட் டாக்டர் இன் அ பிக் ஹாஸ்பிட்டல், யூ நோ.
ஒருவழியாக கொஞ்ச காலம் கழிச்சி… தன்னோட பழைய காதலியை சந்திக்கும் தருணம் அமையுது கதைநாயகனுக்கு. பழைய காதலி கர்ப்பமா இருக்காங்க. இன்னொருத்தர் மனைவி, கர்ப்பமா வேற இருக்காங்க… அவங்கவிட்ட போய் எப்டி பேசுறதுன்னு கதாநாயகன் ரொம்ப ரொம்ப யோசிக்கிறார். பாக்காமலே திரும்பிரலாம்னு நெனைக்கிறார். பட் பேசாம இருக்க முடியலையே. நேரா பாக்கிறார். கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அவங்க போடான்னு துரத்தி விடுறாங்க. இப்ப எதுக்கு வந்தேன்னு காண்டாகுறாங்க. சரி அப்டி இப்டியுமா ரெண்டு பேரும் சமாதானமாகுறாங்க… அங்க தான் இருக்கு ட்விஸ்ட்.
வயித்துல இருக்கிற புள்ளைக்கு… சாரி… வயித்துல இருக்கிற புள்ள… இவர் புள்ளை தானாம். இவர் தான் அந்த புள்ளைக்கு அப்பாவாம். 9 மாசம்.
ஆஹா… அப்போ கல்யாணம்…. ?
கல்யாணம் நடந்துச்சுங்க. அதிலென்ன டவுட்டு. அதான் ஊருக்கே தெரியுமே.
அப்போ பர்ஸ்ட் நைட்டு?
அது நடக்கலங்க… அது மட்டும் நடக்கலங்க.
எப்டி? அப்டித்தாங்க.
நம்ம லேட்டஸ்ட்டா பார்த்த கருப்பன் படத்துல பாபி சிம்ஹா, மாதிரி அந்த சொந்தக்கார பயபுள்ளை அலையோ அலைன்னு அலையுது. எப்ப பொண்டாட்டியா கிடைப்பாங்கிறதை விட, எப்போ பெட்ல கிடைப்பாங்கிற மாதிரியே ஒரு சபலிஸ்ட் லுக்கு… கிக்கு எல்லாம்.
ஆனாலும் கல்யாணம்… நடந்தது… ஆனா, பர்ஸ்ட் நைட் நடக்கல… அதுக்கப்புறம் ஒரு நைட்டும் நடக்கல. அவ்ளோ தான். ஸோ… பழைய காதலர்கள் தாங்கள் திருமணத்திற்கு முன் கொண்ட அன்பினால் உருவாக்கிய குழந்தைக்கு அப்பா, அம்மாவாக இனிய வாழ்வைத் தொடங்கினார்கள்.
சுபம்.
“என்ற காதலி நின்றே மனைவி ஆகலாம், பற்றே நின்றே மனைவி என்ற காதலியாக முடியாது சாரே”-ன்னு பாக்யராஜ், கற்புக்கே கற்பூரம் காட்டுன “அந்த ஏழு நாட்கள்” படம் தான் என் ஞாபகத்துக்கு வந்தது.
படம் முடிவதற்கு சில நிமிடங்கள் முன்னால் வரை… ஆஹா செம படம் என்று மனசுக்குள் கொண்டாடியவன் நான்…. அட்டகாசமான கிளாஸிக் லவ். ப்ச். சான்ஸே இல்லேன்னு தான் நெனைச்சேன். சும்மா சொல்லக்கூடாது பையன் செமயா நடிச்சிருக்காப்ல. அசால்ட் பண்ணிருக்காப்ல. பொண்ணு…. அது வேற லெவல். இந்த பொண்ணு தான் ஹீரோயினா… சுமாராத்தான் இருக்குன்னு தோணும்… அதுக்கப்புறம் வரும் பாருங்க… சூப்பர் லவ்வு. காதலிச்சவங்களா இருந்தாலோ, அல்லது யூத்தா இருந்தாலோ மெய் சிலிர்த்திருவீங்க… அப்டி ஒரு லவ்வு. ஐ ரியலி லவ்டு தட் போத் பீப்பிள் அண்ட் ஹிஸ் ப்ரெண்ட்ஸ் ஆல்ஸோ. ஆனா, இது வேறாரும் பறிக்காத மல்லிகைத்தோட்டமே-ன்னு போட்டாங்க பாரு ஒரு பிட்டு. அது வச்சது மண்டையில ஒரு கொட்டு.
சரி…. இப்போ எதுக்கு இந்த கட்டுரைன்னு கேக்கிறவங்களுக்காக…
இந்த படம் இப்போது நேரடியாக தமிழில் தயாராகப்போகிறது.
அங்கே தெலுங்குல அர்ஜூன்ரெட்டின்னு பெயர் வச்சதுக்காக நீங்களும் தமிழ்ல அப்டியே என்ன சாதிப்பேரு போடலாம்னு யோசிச்சிராதீங்கப்பு.
அப்புறம், அந்த ஏழு நாட்கள்… என்ற காதலி, நின்ற மனைவி… கற்பு… சென்டிமீட்டர்மென்ட் பத்தி நல்லா யோசிச்சு க்ளைமாக்ஸ் வைங்க.
தமிழ் சினிமா அந்த விசயத்துல “என்னை அறிந்தால்” லெவலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சப்பு.
மத்தபடி ஒசத்தப்பட்ட சாதி பெரிய வீட்டுப்பிள்ளை காலேஜ்ல “தல”யா ராஜாங்கம் நடத்துறதை எல்லாம் மாத்த சொல்ல முடியாதே, அது தப்பாவே இருந்தாலும்.
ஆனா, அந்த ஆட்டோ ஐஸ் கட்டி சீனை மட்டும் அப்டியே வச்சிருங்கப்பு. ஏன்னா, ஐ லைக் தட் வே த டைரக்டர் பிரசன்டட் தட் கான்செப்ட். அல்ட்டிமேட். மறக்காம வச்சிருங்கப்பு.
நன்றி.
– முருகன் மந்திரம்