அடுத்த பிறவியில ஆர்யா யாருங்க?
‘போதும்டா பிறவிப்பயன்’ என்கிற அளவுக்கு வெள்ளம் தலைக்கு ஏறிக் கிடக்கிறது. இருந்தாலும் மழையே…கொஞ்சம் நிக்கிறீயா? மத்தியான ஷோ பார்த்துட்டு வந்துர்றேன் என்கிற அளவுக்கு வளர்ந்து வாட்டமாக நிற்கிறது ரசிகர்களின் சினிமா ரசனை! படத்தை ரிலீஸ் பண்ணியிருக்கோம். பாருங்க… என்றால் அதற்கு ஏது மரியாதை? மக்களை தியேட்டரை நோக்கி திருப்புகிற வேலையை கனக்கச்சிதமாக செய்தாலொழிய அப்படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வராதே?
புலி கேம், மாஸ் கேம், வேதாளம் கேம் என்று டாப்போ டாப் ஹீரோக்கள் கூட அது இது என்று அவரவர் பட விளம்பரங்களுக்கு நேரம் செலவழிப்பதால், அடுத்த கட்ட நடிகர்களுக்கும் அந்த வியாதி தொற்றிக் கொள்ளும் அல்லவா? தற்போது பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்க, சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கும் உறுமீன் படத்திற்கும் அப்படியொரு விளம்பரத்தை தயாரித்துவிட்டது. வருகிற டிசம்பர் 4 ந் தேதி திரைக்கு வருகிறது உறுமீன். இது ஒரு கேம்! எதிர்காலத்தை கடந்த காலத்தை கணிக்கக் கூடிய பிரிடிக்ஷன் கேம்.
இதை ஆர்யா வெளியிட்டிருக்கிறார். இந்த கேமில் இப்படியொரு விஷயம் இருக்கு என்று சொன்னதுமே, “போன பிறவியில் நான் என்னவா இருந்தேன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசையா இருக்கேன். அப்படியே அடுத்த பிறவியையும் காட்டுங்க” என்று கேட்டு தெரிந்து கொண்டாராம். என்னவா இருந்தார் ஆர்யா? என்ற கேள்விக்கு கேம் என்ன சொல்லுச்சோ தெரியாது. படத்தின் டைரக்டரும் ஹீரோவும் “அவரோட பர்சனல் நமக்கு எதுக்குங்க?” என்கிறார்கள்.
ஒருவேளை போன பிறவியில் நயன்தாராவும், அடுத்த பிறவியில் அனுஷ்காவும் இருக்காங்களோ என்னவோ?
என்னமோ போடா மாதவா!