யானை முட்டையில்தான் ஆம்லெட் போடுவேன் என்று அடம் பிடிக்கும் இயக்குனர்களின் கவனத்துக்கு…

இரண்டேகால் லட்சத்தில் ஒரு நல்ல தரமான குறும்படம் எடுப்பதே சிரமம். ஆனால் ஒரு படமே எடுத்து அதனை வெற்றி படமாக்கியும் காட்டியிருக்கிறார் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. 2,11,832 ரூபாய் தான் படத்தின் மொத்த பட்ஜெட்டே… ஆனால் படம் தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகி அள்ளியது ஐந்து கோடிகள். இதனால் தான் ராம்கோபால் வர்மாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். பாலிவுட் ஜாம்பவான் அனுராக் காஷ்யப்பின் குரு,அவ்வப்போது ட்விட்டர் சர்ச்சைகளில் சிக்கினாலும் ராம்கோபால் வர்மாவின் படங்கள் சக்கை போடு போடுபவை. தேசிய விருது உள்பட ராம்கோபால் வர்மாவுக்கு கிடைத்த அங்கீகாரம் ஏராளம்.

தன்னை விமர்சித்த சிலருக்கு சவால் விடும் வகையில் தான் இரண்டேகால் லட்சத்தில் படம் எடுத்தார் ராம்கோபால்வர்மா. நடிகர்கள் நவ்தீப்பும், தேஜஸ்வனியும் அதற்கு சரியான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தெலுங்கில் வெளியாகி சில கோடிகளை அள்ள, பாலிவுட்டுக்கும் போய் பல கோடிகளை அள்ளியது இப்படம். இப்படி கோடிகளை அள்ளிய படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட் அடிக்க இப்போது மூன்றாம் பாகம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். அவரது இந்த முயற்சி தமிழுக்கு வருவது என்பது வணிக நோக்கத்தை தாண்டி இப்படியும் ஒரு படம் எடுத்து தங்கள் திறமையை நிரூபிக்க முடியும் என்று தமிழ் சினிமாவுக்கு வர துடிக்கும் இளைஞர்களுக்கு உணர்த்துவதற்காக தான்.

தமிழில் சாக்கோபார் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் நவ்தீப், தேஜஸ்வனி நடித்திருக்கிறார்கள். ஏடிஎம் புரடக்‌ஷன் சார்பில் T.மதுராஜ் வாங்கி மொழிமாற்றம் செய்திருக்கிறார். படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி வெளியிடுகிறது ஹாக்ஸ் ஐ ஸ்டுடியோ. சைக்காலஜிகல் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என சினிமா பிரபலங்கள் கணித்திருக்கிறார்கள்.

யானை முட்டையிலதான் ஆம்லெட் போடுவேன் என்று அடம் பிடிக்கும் இயக்குனர்கள், ராம்கோபால் வர்மா குருவி முட்டையில் ஆம்லெட் போட்டு ஊருக்கே பரிமாறிய ரகசியத்தை அறிந்து கொள்ளவாவது முயற்சிப்பார்களா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
NAC Jewellers – Petite Princess Chennai, Season 2

Close