என் இனிய டமில் பீப்பிள்ஸ்! உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா இப்போ என்ன செய்யுறேன்?
தண்ணியே வராத குழாயடியில் ஒரே சண்டை! ஒரு ஓட்டை பானையை நிரப்புவதற்குதான் அவ்வளவு களேபரமும்! சண்டை யார் யாருக்கு? ஓட்டைப்பானை உதாரணம் எந்த படத்திற்கு? என்பதெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறிந்ததுதான்!
இருந்தாலும் சொல்வது நம் கடமையாச்சே? குற்றப்பரம்பரை கதையை நான்தான் எடுப்பேன் என்று பாலாவும் பாரதிராஜாவும் ஒற்றைக்காலில் நிற்க, சம்பந்தப்பட்ட படம் ஒரு இஞ்ச் கூட இன்னும் நகரவில்லை என்பதுதான் உண்மை. பெரிய பட்ஜெட், பெரிய செய்கூலி, பெரிய சேதாரத்திற்கும் வாய்ப்பு என்கிற பெரும் சிக்கலில் இருக்கிறது அப்படத்தின் வளர்ச்சி. ஹீரோவாக நடிப்பதாக தினத்தந்தியில் ஒரு விளம்பரம் கொடுத்து ஜனங்களை பீதியடைய வைத்த பாரதிராஜா, இப்போது அது குறித்த வேலைகளை அப்படியே தள்ளி வைத்திருக்கிறாராம். பாலாவும் கிட்டதட்ட அந்த மூடில்தான் இருக்கிறார். நடுவில் ஒரு படத்தை இயக்கிவிட்டு அப்புறம் இந்த படத்திற்கு வரலாம் என்பதுதான் இருவரது திட்டமும். (பாலா கணக்குப்படி ஒரு படம் என்றால்தான் குறைந்தது இரண்டே முக்கால் வருஷமாச்சே?)
இந்த நிலையில்தான் “என் இனிய டமில் பீப்பிள்… டோன்ட் ஃபீலிங்ஸ்” என்று மாற்று ஏற்பாடு செய்யக் கிளம்பியிருக்கிறார் பாரதிராஜா. பிரபல இயக்குனர் வசந்த்தின் மகனை ஹீரோவாக்கி, அலைகள் ஓய்வதில்லை பார்ட்2 எடுக்கப் போகிறாராம். இந்த முறை அவரது கதைக்களம் அல்லிநகரமோ, தேனியோ அல்ல. கோயமுத்தூர் பக்கம் ஒதுங்கிவிட்டார்.
அந்த படத்தில் ராதா கிடைச்ச மாதிரி இந்த படத்தில் ஒரு ரதி கிடைக்க மாட்டாரா என்ன! தண்ணிக்குள்ள தாமரை பூவோட சுத்தி வர்றதுக்கு ஆள் இருந்தாலும், தண்ணி இருக்கணுமேய்யா குளத்துல?