பிக் பாஸ் 2 நடக்குமா? பிரச்சனை ஸ்டார்ட்டிங்! நான்கு நாள் கெடுவில் கமல்?
ஈ புகும் இடத்தில் கூட பெப்ஸி ஆட்கள் புகுந்துவிடுவார்கள் என்பதற்கு இதுதான் உதாரணம். “எங்களை வச்சுதான் வேலை செய்யணும், இல்லேன்னா நடக்கறதே வேற…” என்று சினிமாவை மிரட்டி வந்த பெப்ஸி நிர்வாகம், இப்போது பிக் பாஸ்2 நடைபெறும் அரங்கத்தில் புகுந்துவிட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நடக்குமா, நடக்காதா? என்கிற பெரும் சந்தேகம் சூழ ஆரம்பித்திருக்கிறது சின்னத்திரை ஏரியாவில்.
இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், விஜய் டிவிக்கு நான்கு நாட்கள் கெடு கொடுத்திருக்கிறார் பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி. என்னதான் பிரச்சனை?
பிக் பாஸ் சீசன் ஒன்று நடக்கும் போதே இங்கேயிருக்கும் பெப்ஸி ஆட்களை வேலைக்கு பயன்படுத்தாமல் மும்பையிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்தது விஜய் தொலைக்காட்சி. ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்ல… நிறைய டெக்னிக் சமாச்சாரங்களை பின்பற்ற வேண்டியிருந்ததால் இங்கிருக்கும் தொழிலாளர்கள் வேண்டாம் என்று முடிவெடுத்தார்களாம். ஆனால் ‘அப்படி செய்வதை ஒப்புக் கொள்ள முடியாது. எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஐம்பது சதவீதம் பேரையாவது பயன்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டது பெப்ஸி நிர்வாகம். அதை கமல்ஹாசனும் ஒப்புக் கொண்டார்.
ஆனால் பிக் பாஸ் சீசன் 2 லும் பெப்ஸி ஆட்கள் பயன்படுத்தப்படவில்லை. இதனால் செட் ஆட்களை தவிர்த்து அங்கு வேலை பார்த்து வந்த தன் அமைப்பை சேர்ந்த டெக்னீஷியன்களை வேலை நிறுத்தம் செய்ய சொல்லி உத்தரவிடப் போகிறது பெப்ஸி. சுமார் 42 பேர் அவ்வாறு வேலை செய்து வருகிறார்களாம்.
இந்த விஷயம் கமல்ஹாசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பெப்ஸி அமைப்பிலும் ஒரு உறுப்பினாராக இருக்கும் கமல், இந்த பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால், அவரையே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவு போடும் மன நிலையில் இருக்கிறது பெப்ஸி. ஒருவேளை உத்தரவை மீறினால், கமல் படங்களுக்கு ஒத்துழைப்பு இல்லை என்றும் அவர் மிரட்டப்படலாம்.
இதற்கிடையில் சின்னத்திரை சங்கத்தின் பொது செயலாளரான குஷ்பு, பெப்ஸி தலைவர் செல்வமணியை தொடர்பு கொண்டு இரண்டு பொறுங்க. நல்ல முடிவை ஏற்படுத்தித் தருகிறோம் என்று கூறியிருக்கிறாராம்.
பிக்பாஸ் வீட்டுக்குள்தான் பெரிய பஞ்சாயத்து என்றால், வெளியிலேயுமா? வௌங்கிரும்…