கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டமாக வருகிறது போகன்
‘ஏதேன் தோட்டம்’ உருவான காலக்கட்டம் முதல் இன்றைய 4 ஜி காலம் வரை, இந்த உலகம் இரண்டு குணாதிசயங்களை கொண்டு தான் சுழன்று கொண்டிருக்கிறது….. ஒன்று நன்மை, மற்றொன்று தீமை. அத்தகைய குணங்களை மையமாக கொண்டு, முற்றிலும் புதுமையான கதைக்களத்தோடு உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘போகன்’. ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கி வரும் ‘போகன்’ திரைப்படத்தை ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் இணைந்து தயாரித்து வருகின்றனர் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்களின் வரவேற்பை அதிகளவில் பெற்று வரும் ‘போகன்’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி உள்ளது. படத்தின் கடைசி பாடலை வெளிநாட்டில் படமாக்கி வரும் ‘போகன்’ படக்குழுவினர் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி ‘போகன்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். ரஷ்யா நாட்டை சார்ந்த ஐம்பது நடன கலைஞர்கள் பணியாற்றி வரும் இந்த அரவிந்த் சுவாமிக்கான பிரத்தியேகமான பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் ஷெரிப்.
“நாங்கள் தற்போது அரவிந்த் சுவாமி பாடியிருக்கும் ‘போகன்’ படத்தின் இறுதி பாடலை படமாக்கி கொண்டிருக்கிறோம்… இந்த பாடலை முழுக்க முழுக்க அரவிந்த் சுவாமிக்காக உருவாக்கி வருகிறோம். நிச்சயமாக இந்த பாடல் அவரை ஆஜானுபாகுவான ஆணழகனாக பிரதிபலிக்கும். நடன இயக்குனர் ஷெரிப்பிற்கு இது நூறுவது பாடல். “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியின் மூலம் திரையுலகிற்கு வந்த அவர், தற்போது தன்னுடைய நூறாவது பாடலை பிரபுதேவாவின் தயாரிப்பிலேயே உருவாகும் படத்தில் நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதேபோல், எங்களின் போகன் படத்தை, குறிப்பாக இந்த பாடலை தன்னுடைய தத்ரூபமான காட்சிகளால் மேலும் மெருகேற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சௌந்தர் ராஜன். ஒரு சில தினங்களில் நாங்கள் எங்கள் படத்தின் டீசரை வெளியிட இருக்கிறோம்.
இன்னும் மூன்று தினங்களில் நாங்கள் இந்த பாடலின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒரு சில மெருகேற்றும் பணிகளோடு எங்கள் ‘போகன்’ படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்ய இருக்கிறோம். தற்போது ஒட்டுமொத்த உலகமும் வருகின்ற டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட ஆயத்தமாகி கொண்டிருக்க, அந்த திருவிழாவின் ஆரம்ப கட்டமாக நாங்கள் எங்களின் ‘போகன்’ படத்தை வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்….” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘போகன்’ படத்தின் இயக்குனர் லக்ஷ்மன்.