சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது- விமர்சனம்

பாக்கெட் வற்றிப்போன பேச்சுலர்களையெல்லாம் சென்னை, ‘பேச்சு’ இலர் ஆக்கி வேடிக்கை பார்க்கும்! அதுவும் உதவி இயக்குனர்களின் பாடு, செத்த எலிக்கு சீமந்தம் பண்ணுகிற கதைதான்! விக்ரமாதித்யனின் ‘வீடு திரும்பல்’ என்ற கவிதையை ஒரு கதையாக சொன்னால் எப்படியிருக்கும்? (அந்த கவிதையை படத்தில் ஓரிடத்தில் அழகாக சொல்லியும் இருக்கிறார்கள்) அதுதான் இந்த ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. எவ்வித சமரசங்களுக்கும் இடமில்லாமல் இந்த கதையை மனசு வலிக்கவும், வாய்விட்டு சிரிக்கவுமான ஃபார்முலாவில் வார்த்தெடுத்து கவிதையாக வடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன். பாரதிராஜா போன்ற பெருமை வாய்ந்த இயக்குனர்கள் பலர் இந்த படத்தை சிலாகித்ததில் சிறிதும் முரணில்லை!

ஒருதலைராகம், பாலைவனச்சோலை, போன்ற படங்களில் எப்படி முகம் தெரியாத நடிகர்களும், நடிகைகளும் அந்தந்த கேரக்டர்களாக வாழ்ந்து காலத்தை கடந்து பெருமை சேர்க்கிறார்களோ, அப்படி ஒரு நடிகர் கூட்டம்தான் இந்த படத்திலும். யாரும் எதற்காகவும் நடித்ததாக தெரியவில்லை. இயல்பான நக்கல், இயல்பான சோகம், இயல்பான வெறுப்பு, இயல்பான வலி என்று எல்லா உணர்ச்சிகளையும் கண்ணாடியாக காட்டுகிறார்கள். யாரை பாராட்டுவது? யாரை விடுவது?

பாபிசிம்ஹா, லிங்கா, பிரபஞ்சயான், சரண்யா, பனிமலர், நிஷா, அல்போன்ஸ் புத்திரன், கார்த்திக், உள்ளிட்ட மேலும் ஒரு டசன் நடிகர் நடிகைகளுக்கு நல்ல சினிமா ரசிகர்கள் நிற்க வைத்து நமஸ்காரம் பண்ணிவிடலாம். படத்தில் மனைவியிடம் விளக்குமாறால் அடிவாங்கும் இயக்குனர் மருதுபாண்டியனுக்கு மேலும் ஒரு ஸ்பெஷல் நமஸ்காரம்!

கதை? எப்படியாவது மனசுக்கு திருப்தியாக ஒரு ரூம் அமைந்துவிட்டால் போதும். ஆற அமர உட்கார்ந்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதி விடலாம் என்று துடிக்கிறார் பாபி சிம்ஹா. ஆனால் அவர் போகிற ரூமிற்கெல்லாம் பிரச்சனை கூடவே வருகிறது நண்பர்கள் ரூபத்தில். நண்பர்களின் ‘கூட்டு’ இல்லாமல் தனியாக வாடகை கொடுக்க முடியாத நிலைமை. இந்த ஒற்றை லைனை கடந்து போகிற மனிதர்களும், காதல்களும்தான் படம். வெறும் உடல்மொழியாலேயே அசரடிக்கிறார் பாபி சிம்ஹா. (இந்தப்படம் தனது கேரியரில் அசைக்க முடியாத பாராட்டுகளை தரும் என்பதே புரியாமல் இயக்குனர் தரப்புக்கு அவர் நிஜத்தில் கொடுக்கும் அட்டகாசங்கள் ஏனோ?) அதிலும் குறிப்பாக ஒரு காட்சி.

ஹவுஸ் ஓனர் அட்வான்ஸ் பணத்தை கேட்டுவிடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அவர் தனது ரூமிற்கு வரும் அந்த ஏரியா! கொட்டும் மழையில் சட்டையெல்லாம் நனைந்து திரும்பும் அவர், அந்த ஈர சட்டையுடனேயே மாடிப்படி ஓரத்தில் பம்மி பதுங்கி அப்படியே உட்கார்ந்து உறங்கி உறங்கி விழிக்கிற காட்சியில் கண் கலங்காமலிருக்கவே முடியாது. அதுவும் எவ்வித டயலாக்கும் இல்லாமல் 60 களில் வந்த பாடல்களையும் 70 களில் வந்த பாடல்களையும் கொண்டே பின்னணி வாசிக்கிறார் இயக்குனர். பாடல்களின் தேர்வும், அதற்கான சுச்சுவேஷனும் பிரம்ம்ம்ம்ம்மாதம்! முதல் பாதியில் ஆங்காங்கே தலைகாட்டும் சிம்ஹா, இந்த இரண்டாம் பாதியில்தான் நின்று விளையாடுகிறார்.

இடைவேளை வரைக்கும் லிங்கா, சரண்யாவை எப்படி பிக்கப் பண்ணுகிறார் என்பதிலேயே கழிகிறது. ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணை, ஒரு சிட்டி இளைஞன் எப்படியெல்லாம் கவிழ்க்கிறான் என்பதை பதற பதற காண்பித்தாலும், கடைசியில் ஜோடிகளை சேர்த்து வைத்து சுபம் போடுகையில் ‘அப்பாடா நிம்மதி’யாகிறது மனசு. சரண்யாவெல்லாம் சினிமாவை விட்டே ஏன் போனார் என்பதுதான் புரியவில்லை. என்னவொரு பர்பாமென்ஸ்! (புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தாரே, அவரேதான்!)

கண்கள் பெரிசாக, அது சொல்லும் கதையாக வரும் ஹவுஸ் ஓனர் பொண்ணு பனிமலர், அப்படியே போகிற போக்கில் மனசை அள்ளிக் கொண்டு போகிறார். அவரது அம்மாவாக வருகிற அந்த பெண்மணியும், ‘அதுக்கென்னப்பா… நாங்களும் வாடகை வீட்ல குடியிருந்துட்டுதான் வந்துருக்கோம். நாலு பசங்களை சேர்த்துகிட்டு முடிஞ்சதை கொடு’ என்கிறாரே… இயல்பான நடிப்பு மட்டுமல்ல, ஈரமான வசனங்களும் கூட. ஒரு வழக்கமான படமாக இருந்தாலும், கனவில் ஹவுஸ் ஓனர் பொண்ணுடன் ஒரு குத்தாட்டம் போட்டிருப்பார் சிம்ஹா. இது இயல்பை மீறாத படமாச்சே! காதல் போல வந்து, மேகம் போல கலைந்துவிடுகிறார் பனிமலர். கிரேட்!

‘ஏன் பாஸ் உங்க படம் நின்னு போச்சு?’ என்கிறபோது, ‘மருதநாயகம் படமே நின்று போச்சு. வாரத்துக்கு இருபது செக்ஸ் படம் வந்து நல்லா ஓடுது’ என்று மற்றொரு டைரக்டர் அலுத்துக் கொள்ளும் போது, யதார்த்தத்தின் மீது செருப்பால் அடிக்கிறார் இயக்குனர். அதுமட்டுமல்ல, சென்னையில் ஒரு இரவை தள்ளுவதற்குள் ஒவ்வொரு உதவி இயக்குனர்களும் படுகிற பாட்டை இவ்வளவு துல்லியமாகவும் துயரமாகவும் ஹாஸ்யமாகவும் சொன்ன படங்கள் இதற்கு முன்பு வந்ததாக நினைவில்லை. அவ்வளவு துயரங்களுக்கும் பண கஷ்டங்களுக்கும் நடுவே இவர்களுக்கு ‘தாக’ சாந்தி மட்டும் தெளிவாக நடந்துவிடுகிறதே, அது எப்படி என்பதுதான் ஒரு சின்ன எரிச்சல்.

சைக்கிள் கேட்கும் அண்ணன் மகனுக்கு பயந்தே ஊருக்கு போகாமலிருக்கும் பிரபஞ்சயானும் அந்த அண்ணன் மகனும் தனியாக கவனிக்கப்பட வேண்டிய சிறுகதை. அவ்வளவு சோகத்திற்கு இடையிலும் சாமர்த்தியமாக வாழும் அந்த கேரக்டர் அசத்தல்.

ஒரே நேரத்தில் நாலைந்து பேருக்கு நூல் விட்டு எல்லாரையும் போனில் மெயின்டெயின் செய்யும் நிஷா கேரக்டர் எவ்விதத்திலும் சுவாரஸ்யப்படாவிட்டாலும், ஒரு ரூமை காலி பண்ண உதவியிருப்பதால் ஓ.கே.

வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவுக்கு லைட்டுகள் அதிகம் தேவைப்படவில்லை. ‘இல்லாத’ குறை தெரியாமல் எடுத்திருப்பது அவர் சாமர்த்தியம். கேம்லின் ராஜா இசையில் சில பாடல்கள் மட்டுமே. அதைவிட பின்னணி இசை அழகு.

டைரக்டோரியல் டச் என்பார்களே… அது படம் முழுக்க விரவிக் கிடக்கிறது. கோடம்பாக்கம் முழுக்க அல்லிப்பூக்கள் நிறைந்து கிடக்கின்றன. அல்லிக்குளத்தில் பூத்த அற்புதம் போல வந்திருக்கிறார் இந்த அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன். அவரை வாழ வைக்கிற ரசிகர்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும், எதிர்கால தமிழ்சினிமாவுக்கு போடுகிற உரம்! அதற்கப்புறம் உங்கள் இஷ்டம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
பாபி சிம்ஹா  நடிக்கும் ‘மசாலா படம்’ இசை உரிமையை வாங்கியது லஹரி மியுசிக்

பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் 'ஆல் இன் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிக்கும் 'மசாலா படம்' வேகமாக தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான...

Close