4 ந் தேதி சினிமா பேரணி! ஓ.பி.எஸ்- எடப்பாடி மனநிலை என்ன?

நுனி மரத்துக்கு நோவு எடுத்தாலும், அடி மரத்தை காவு கொடுத்துவிடக் கூடாது என்பதுதான் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரே கவலை. கடந்த ஒரு மாதத்திற்கு முன் விஷால் தலைமையிலான சங்கம் அறிவித்த ஸ்டிரைக், கட்டுக் கோப்பாக நடந்து கொண்டிருப்பதால் பலருக்கும் சேதாரம். தியேட்டர் காரர்களுக்கு கோடி கோடியாக நஷ்டம். தொழிலாளர்களுக்கு அடி வயிற்றில் அமிலம். இருந்தாலும், உங்க அழிச்சாட்டியதுக்கு ஒரு முடிவு கட்டாமல் இஞ்ச் கூட நகர மாட்டோம் என்கிற விஷாலின் பிடிவாதத்திற்கு கோடம்பாக்கம் தழுவிய ஆதரவு கொடி கட்டி பறக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களும் கலந்துகொண்ட கூட்டுக் கூட்டத்தில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை. திரையரங்க உரிமையாளர் சங்க பிரமுகர் ரோகிணி பன்னீர் செல்வம் ஒரு ஆடியோ பதிவை தனது சங்கத்தினருக்கு அனுப்பியிருக்கிறார். ‘விபிஎப் கட்டணத்தை நம்மள ஏத்துக்க சொல்றாங்க. அது முடியவே முடியாது. அவங்களும் பிடிவாதமா இருக்காங்க. நாம சொல்றதை அவங்க கேட்கல. அவங்க சொல்றது நமக்கு ஒத்து வரல. அதனால் என்ன நடந்தாலும் சரி. பார்த்துக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.

சினிமா சங்கங்களே இதனால் உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்த விவகாரத்தில் ஒரு மத்தியஸ்தர் வேண்டும் என்று நினைக்கிறது சங்கங்கள். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ஏப்ரல் 4 ந் தேதி திரையுலகத்தை அனைத்து சங்கத்தினரும் பேரணியாக சென்று கோட்டையில் முதல்வரை சந்திக்க இருப்பதாக கூறினார். இப்படியொரு தகவலை அவர் கூறியவுடனேயே ரஜினி, கமல், அஜீத், விஜய் அந்த பேரணியில் கலந்துப்பாங்களா? என்று கேள்வி கேட்டது மீடியா.

விக்கலெடுத்தவன் வாயில விளாம்பழ ஓட்டை திணிச்ச மாதிரி கோபம் வரவழைக்கிற கேள்விதான். என்ன செய்வது? பொறுத்துக் கொண்டார் விஷால். இவர்கள் கேட்ட ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்ளிட்ட சில பெரிய நடிகர்களும் சினிமா என்கிற ஒரு கூட்டு பறவைகள்தானே? தானே முன் வந்து பேரணியில் கலந்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.

இதெல்லாம் ஒரு புறமிருக்க…. கடந்த சில மாதங்களாகவே சினிமாக்காரர்கள் மீது கடும் கோபத்திலிருக்கும் எடப்பாடி, ஓ.பி.எஸ் அண் கோ, தன் மனதில் என்ன மாதிரி திட்டம் போட்டு வைத்திருக்கிறார்களோ?

Read previous post:
தமிழ் ராக்கர்ஸ் சினிமா ரசிகர்களுக்கு நல்லது செய்கிறதா?

https://www.youtube.com/watch?v=0yqs4MGZ4pY&t=238s

Close