ஹரியுடன் இணையும் தேவிஸ்ரீபிரசாத்
சாமி 2க்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீபிரசாத். புலி , இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போத சீயான் விக்ரம் நடிப்பில் சாமி 2 படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடிக்க நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஜுலை மாதத்தில் இதன் முதற்கட்ட படபிடிப்பு தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் ஏற்கனவே ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்திருக்கிறார். அந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருந்தது. அதே போல் விக்ரம் நடித்த கந்தசாமி படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.
மீண்டும் சாமி 2 வில் விக்ரம்+ ஹரி+ தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி இணையவிருக்கிறது.
ஜுனியர் என்டிஆர், மோகன்லால் நடித்த ஜனதா கரேஜ் , சீரஞ்சிவி நடித்த கைதி நம்பர் 150 என வரிசையாக பல தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து, இளைஞர்கள் கொண்டாடும் பாடல்களை வழங்கி முன்னணியில் இருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத். இவர் இசையமைப்பதுடன் பாடலாசிரியராகவும், பாடகராகவும், ராக் ஸ்டாராகவும் இருப்பதால் இப்படத்தின் பாடல்கள் துள்ளலாக இருக்கும் என்றும், அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கும். அத்துடன் ஒரு படத்தின் பாடல்களை விளம்பரப்படுத்துவதில் தனக்கென தனி பாணியை இவர் பின்பற்றி வருவதும் படத்தின் கூடுதல் பலம் சேர்க்கும். இன்று வரை தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் டாடிமம்மி வீட்டில் இல்லே.. என்ற வில்லு படத்தில் இடம்பெறும் பாடலுக்கு இசையமைத்ததும் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஹரியின் படம் என்றாலே விறுவிறு திரைக்கதை என்பது அனைவரும் அறிந்ததே. இவ்விருவரும் இணையவிருக்கும் இந்த சாமி 2 படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று இப்போதே உறுதியாகச் சொல்லலாம்.