தன்ஷிகா விவகாரம்! நாலாபுறத்திலிருந்தும் மொத்து வாங்கும் டி.ஆர்!
மீரா கதிரவன் இயக்கத்தில் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரப்போகும் படம் ‘விழித்திரு’. இதில் டி.ராஜேந்தர் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். ஆடிய பாவத்துக்காக இவரையும் இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு அழைத்திருந்தார் மீரா கதிரவன். இதே நிகழ்வுக்கு படத்தின் நாயகி தன்ஷிகாவும் வர…. அங்கு வைத்து ஒரே களேபரம்!
பேசும்போது டி.ஆரின் பெயரை சொல்ல மறந்துவிட்டார் தன்ஷிகா. அவ்வளவுதான். தன்மான சிங்கத்தின் ஒவ்வொரு முடியும் அவமானத்தால் நட்டுக் கொண்டது! பிரித்து மேய்ந்துவிட்டார் தன்ஷிகாவை. உனக்கெல்லாம் சீனியர்ங்கிற மரியாதை இருக்கா? என்று ஆரம்பித்து வெளுத்து வாங்க, பதறிப்போன தன்ஷிகா மன்னிப்பு கேட்டதுடன் அவர் காலிலும் விழுந்தே விட்டார். அப்புறமும் வெறியடங்காத டி.ஆர், ஸாரி கேட்கிற நீ ஸாரி கட்டலையே என்று அபத்த ஜோக் அடித்தபடி நரிச் சிரிப்பு சிரித்தது கேவலத்தின் உச்சம்!
‘தன்மானம்’ என்பதே தனக்கும் தன் மகன்கள் சிம்பு, குறளரசன்களுக்கு மட்டும்தான் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் நிரூபித்து வருபவர் டி.ஆர் என்பதை, அவரோடு பழகிய பலரும் அறிவர். (ஐயோ சாமீய்… அது மற்றவங்களுக்கும் நிறைய இருக்கு) நிஜம் அப்படியிருக்க… இவர் இப்படி பேயாட்டம் போட்டதை ஒருவரும் ரசித்தபாடில்லை.
நடிகர் சங்கத் தலைவர் விஷால், பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கவின்மலர் ஆகியோர் டி.ஆரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
கவின் மலரின் கண்டனம் கீழே-
உங்க பெயரை எதற்கு தன்ஷிகா சொல்லணும் டி.ராஜேந்தர் அவர்களே? ‘ விழித்திரு’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதைத் தவிர உங்கள் பங்கு ஒன்றுமில்லை. நான் படம் பார்த்துவிட்டேன். உங்கள் நினைவு அவருக்கு வராமல் போனது இயல்புதான். இதற்குக் கொஞ்சம்.கூட நாகரிகம் இல்லாத உடல்மொழியோடும், வாய்மொழியோடும் நீங்கள் பேசிய பேச்சு அருவருப்பின் உச்சம். தன்ஷிகா பணிவோடு சீனியர் என்கிற மரியாதையோடு பேசுகிறார். ஒருமுறை கிட்டத்தட்ட குனிந்து கால்களைத் தொட்டு கேட்பதுபோல் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் திமிர் உங்களுக்கு அடங்கவில்லை. ‘சாரி கட்டிக்கொண்டு வராமல் ஸாரி கேட்கிறாய்’ என்று சொல்கிறீர்கள். உங்க அடுக்குமொழியில் தீய வைக்க…அவங்க என்ன உடையில் வந்தால் உங்களுக்கு என்ன?
கேட்டு வாங்குவதா மரியாதை..? தன்ஷிகா கண்கலங்கும் அளவுக்கு தரந்தாழ்ந்து பேசுகிறீர்கள். இப்படி மேடைக்கு மேடை உளறிவருவதால் தான் உங்கள் மேலிருந்த மரியாதை மக்கள் மத்தியில் போனது. சக கலைஞரை மதிக்கத் தெரியாத, நாகரிகம் அற்ற உங்கள் பெயரை உச்சரிக்காத தன்ஷிகாவுக்கு வாழ்த்துகள்.
உங்களுக்குப் பின்னால் அந்தக் காணொளியில் சில முகங்கள் தெரிந்தன. அம்முகங்களின் சிரிப்பும் கைத்தட்டலும் உங்கள் பேச்சின் அருவருப்புக்கு சற்றும் சளைத்ததல்ல.