தனுஷின் பீட்டா பனியன்! டென்ஷனில் ஜல்லிக்கட்டு பிரியர்கள்?
பொங்கல் முடியும் வரைக்கும் தமிழ்நாட்டில் எண்ணை சட்டியில் போட்டு வறுத்தெடுக்கப்படுகிற ஒரே சொல்… பீட்டா! People for the Ethical Treatment of Animals என்கிற இந்த அமைப்புதான் தமிழகத்தில் நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டுக்கு லகான் போட்டு தடுத்து நிறுத்தியிருக்கிற அமைப்பு.
இந்த பீட்டாவுக்கு ஆதரவாக யார் பேசினாலும், “இருக்குடீய் உனக்கு” என்று கொலவெறியோடு துரத்தத் தயாராகும் இளைஞர் கூட்டத்திற்கு வசமாக ஒரு புகைப்படம் சிக்கினால் சும்மாயிருக்குமா? விட்டு வெளுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த காமென்ட் கலவரத்தில் சிக்கி, அப்பளமாக நொறுங்கிக் கொண்டிருக்கிறது தனுஷின் இமேஜ். இந்த பீட்டா அமைப்பு நடத்திய நிகழ்ச்சிகளுக்கும் பிரமோஷன்களுக்கும் தமிழ் சினிமா ஹீரோக்களை பலரையும் அழைத்து அவர்களுக்கு பீட்டா பெயர் பொறித்த பனியனை மாட்டிவிட்டிருந்தது அது. அந்த ஸ்டில்தான் இப்போது தனுஷ் உட்பல பல ஹீரோக்களை ‘மாட்டியும்’ விட்டிருக்கிறது.
பீட்டா ஆதரவாளர்கள் என விஷால், ஆர்யா, தனுஷ், த்ரிஷா, என்று பெரிய லிஸ்ட் போடும் சோஷியல் மீடியா குழுவினர், மேற்படி ஹீரோக்களின் படங்களை தவிருங்கள் என்று கேட்டுக் கொள்ள ஆரம்பித்திருப்பதுதான் இன்னும் ஆபத்து. போன வாரம் வரைக்கும் கூட, இவர்களின் பேச்சு எடுபடாது என்று நினைத்திருந்தவர்களுக்கு சரியான சம்மட்டி அடியை கொடுத்தார்கள் இளைஞர்கள். சமூக வலைதள அழைப்பை மட்டுமே ஏற்றுக் கொண்டு மெரீனாவில் திரண்ட இளைஞர் கூட்டம், கட்சி மாநாடுகளுக்கு சற்றும் சளைத்ததல்ல என்கிற பெருமையை பெற்றுவிட்டது.
இளைஞர் சக்தி இப்படி ஒற்றுமையாக கிளம்பினால், பீட்டா பனியன் நடிகர்கள் கலவரப்பட்டே ஆக வேண்டும் அல்லவா?
இனிமேலாச்சும் கூப்பிடுற இடத்துக்கெல்லாம் போகாம, கொடுக்கறதையெல்லாம் எடுத்து மாட்டாம இருக்க பழகுங்க பிரதர்ஸ்…
https://youtu.be/So5dg69EcdI