விஜய் ஆன்ட்டனி ஆசையில் தனுஷ் எறியும் கல்?
தீபாவளிக்கு தியேட்டர் ஒதுக்குவதற்குள் மெயின் வியாபாரிகளின் தொண்டையே பாப்கார்ன் வறுக்கிற மெஷின் போல சூடாகிவிடும் போலிருக்கிறது. விஜய்யின் சர்கார் வருகிறது. கோடம்பாக்கத்தில் கணிசமான தியேட்டர்களை அந்த ஒரு படமே பிடித்துக் கொள்ளும். அப்படியிருக்க… “நானும் வர்றேன். ஒரு முன்னூறு தியேட்டராவது கொடுங்கப்பா…” என்று துண்டு போட ஆரம்பித்திருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. இவர் நடித்த திமிரு புடிச்சவன் படத்திற்குதான் இந்த முன்னேற்பாடு.
நம்பி போடலாமா? இல்ல நட்டாத்துல விட்டுடலாமா? என்கிற டிஸ்கஷன் போகிறதாம். ஏன்? அதே நாளில் தனுஷ் கவுதம்மேனன் கூட்டணியில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வருவதாக தகவல். அந்தப்படமும் வந்தால், விஜய் ஆன்ட்டனி தாங்க மாட்டாரல்லவா?
அதே நேரத்தில் கவுதம்மேனனை சுற்றியிருக்கிற பண விவகாரங்களும் பஞ்சாயத்து செட்டில்மென்டுகளும் ரிசர்வ் பேங்க் உண்டியலை தலை கீழாக கவிழ்த்தால் கூட தாங்காது என்பதால், வரட்டும் பார்க்கலாம்யா என்கிற மனநிலைக்கும் ஆளாகியிருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல, வெறும் ஆயிரத்து சொச்சத்து தியேட்டர்களை வைத்துக் கொண்டு விஜய் மாதிரி மாஸ் ஹீரோ படங்கள் வருகிற நேரத்தில் யாருக்கு கொடுப்பது? யாருக்கு மறுப்பது? என்கிற குழப்பமும் தலைகாட்டும் அல்லவா?
அதனால் ‘ரெண்டு படங்களுக்கு மேல வராதீங்க’ என்ற கூக்குரலும் கேட்க ஆரம்பித்திருக்கிறது. இந்த கொடுமை போதாது என்று இன்னும் ஒரு ஹாலிவுட் படமும் வரப்போகிறதாம். ஜனங்க எடுக்கப் போற முடிவுலதான் இருக்கு எல்லாம்!