அதிமுக எம்.எல்.ஏ நடித்த படத்திற்கு திமுக எம்.எல்.ஏ சப்போர்ட்!
“அரசியல் வானத்தில் திடீர் விடிவெள்ளி முளைத்துவிட்டதா? அல்லது உலகம் தட்டையாகிவிட்டதா? ஒண்ணுமே புரியல சாமி”யாகிக் கிடக்கிறது தமிழ்நாடு. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அவருக்கு தூரத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டாலும், ‘இருக்கட்டும் விடுப்பா’வாகி இளகிய மனசோடு விழா முடியும் வரைக்கும் அங்கிருக்கிறார். மறுநாளே இன்னொரு ஆச்சர்யமாக ஜெ.வும் இவரும் முகத்திற்கு நேரே முறைக்காமல் புன்னகை சிந்தி பரஸ்பர வணக்கமே வைத்துக் கொள்கிறார்கள். இப்படி நாகரீக அரசியலை நோக்கி தமிழகம் திரும்பிக் கொண்டிருக்க, மற்றொரு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ ஆகியிருக்கும் கருணாஸ் நடித்த படம் ககபோ! பிரபல விநியோகஸ்தராக இருந்து மறைந்த அய்யப்பனின் ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார் அவரது மகன் பாரதி அய்யப்பன். இவருக்குதான் தனது பரிபூரண ஆசியை வழங்கியிருக்கிறார் ஜெ. அன்பழகன். இப்படத்தில் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிந்தும் இருவரும் சேர்ந்து படம் வெளிவர முன் வந்திருப்பது அரசியலை தாண்டிய அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே விஜய் படங்களுக்கு பிரச்சனை வரும்போதெல்லாம் ஓரமாக யாருக்கும் தெரியாமல் கை கொடுத்து வந்தவர்தான் ஜெ.அன்பழகன்.
சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தை விஜய் என்பவர் இயக்கியிருக்கிறார். படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கும் ஒரு முக்கிய ரோல் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பவர் பேசியது நிஜதமாகவே செம தமாஷ்.
ஒருநாள் டைரக்டர் விஜய் எனக்கு போன் பண்ணினார். அண்ணே எங்க இருந்தாலும் வாங்க ஒரு படத்துல நடிக்கணும்னு சொன்னார். இல்ல தம்பி நான் பாண்டிச்சேரியில இருக்கேன்னு பொய் சொன்னேன், பரவாயில்ல எங்க இருந்தாலும் வாங்கன்னு சொன்னார். உடனே கிளம்பி போனேன். அப்போ நைட்டு மணி ரெண்டு இருக்கும். போன உடனே எனக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்தாங்க. என்ன தம்பி மிட்நைட்ல அட்வான்ஸ் பணம் கொடுக்குறீங்க..? இது உண்மையிலேயே தமிழ்ப்படம் தானா? இல்லேன்னா வேற மாதிரியான படமா?ன்னு கேட்டேன். இல்லேன்னே தமிழ்ப்படம் தான்னு சொன்னார். படத்துல எனக்காகவே ஒரு பாடல் காட்சி கொடுக்கப்பட்டது. அது எனது நிஜ கேரக்டரை சொல்லும் விதமாக இருந்தது. எனக்கு இந்த படத்தில் நடித்த காட்சிகளும் கோர்ட்டை மையப்படுத்தியே அமைந்தது, ஒரு கோர்ட் காட்சியில் நடிக்க போன போது அங்கு மூன்று மனைவிகள் இருந்தார்கள். என்னப்பா இங்க வந்தாலும் ஒரே கோர்ட்டு, கேஸ், போலீஸ் தானான்னு கேட்டேன். அண்ணே நீங்க பார்த்தது நிஜ கோர்ட்டு, இது மொபைல் கோர்ட்டு என்றார் இயக்குநர். என்னோட பொறப்போ என்னன்னு தெரியல படமா இருந்தாலும், நிஜ வாழ்க்கையா இருந்தாலும் போலீஸ் கோர்ட், கேஸ்ன்னு தான் அமையுது. அந்த வகையில இந்தப்படம் உண்மையில் என் நிஜ வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தது. அதே போல் இந்த காட்சி மூன்று பெண்களுக்கு கணவன் என்று, என் நிஜ வாழ்க்கையோடு நினைவு செய்து விட்டார் இயக்குநர் என்றார்.
மூணு பொண்டாட்டிக் காரர்… சொல்வதெல்லாம் உண்மையாதான் இருக்கும்!