எனக்கு வாய்த்த அடிமைகள் – விமர்சனம்
‘நண்பேன்டா’ என்று நெஞ்சை நிமிர்த்துகிற பிரண்ட்ஷிப், அதே நண்பனால் ‘செத்தேன்டா’ என்று தெறித்து ஓடினால் அதுதான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்துவிட்டு பதுங்கிவிடுகிற ஜெய்யை மீட்க, தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிற அவரது மூன்று நண்பர்களுக்கு ஏற்படுகிற படு பயங்கர எக்ஸ்பீரியன்ஸ்தான் இரண்டரை மணி நேர படம். படு பயங்கரம் அவர்களுக்குதானே ஒழிய, தியேட்டருக்கு இல்லை என்பது ‘நமக்கு வாய்த்த நல்ல நேரம்!’ நிமிஷத்துக்கு ஒரு ஜோக் என்று படம் முழுக்க தெளித்துக் கொண்டேயிருக்கிறார்களா… சிரித்து மகிழ்கிற ரசிகனால் சாரல் மழையாகிறது முன் சீட்டில் அமர்ந்திருப்பவரின் பின் பக்கம்! இந்தப்படத்தின் டயலாக் ரைட்டருக்கு மட்டும் டிக்கெட் காசில் பாதி போய் சேர்ந்தால், அதுதான் வாய் விட்டு சிரித்தவர்களின் நோய் விட்ட புண்ணியம்!
ஜெய்யின் குளோஸ் பிரண்ட்ஸ் கருணாகரன், காளி வெங்கட், நவீன் மூவரும்! ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஜெய் தன்னுடன் வொர்க் பண்ணும் பிரணீதாவை காதலிக்கிறார். காதல் ஒரு கட்டத்தில் கசமுசா வரைக்கும் கொண்டு போய்விடுகிறது. அதற்கப்புறம் பார்த்தால்…? பிரணீதா ஜெய் கட்டுப்பாட்டில் இல்லை. இவருக்கு டாடா காட்டிவிட்டு இன்னொருவனுடன் செட்டில் ஆகிவிடுகிறார். மனம் கோணும் ஜெய், மருந்தே உதவி என்று தற்கொலை முடிவெடுத்து லாட்ஜில் ரூம் போடுகிறார். சும்மா இல்லாமல் நண்பர்கள் மூவருக்கும் போன் போட்டு விஷயத்தை சொல்லிவிட்டு ஆஃப் ஆகிவிட, தேடக் கிளம்புகிறார்கள் நண்பர்கள்.
விஷம் குடித்தவரை தேடப் போன இவர்களில் ஒருவரே விஷம் குடிக்கிற அளவுக்கு நிலைமை முற்றுகிறது. கடைசியில் ஜெய் பிழைத்தாரா? பிரணீதா யாருக்கு? நடுவில் ஒரு சீனில் வரும் அஞ்சலியால் இந்தப்படம் அடைந்த பெருமை என்ன? பேக்கேஜ் என்ன? என்பதெல்லாம்தான் இரண்டரை மணி நேர எ.வா.அ!
படத்தில் பாதி நேரம் ஜெய்யே இல்லை. அது ஒரு நிம்மதி என்றால், அந்த நேரத்தில் பிரண்ட்ஸ்களுக்கு நேரும் அபாயங்களை அந்தல சிந்தல காமெடியோடு பிரசன்ட் பண்ணுகிறார்களே, அது இன்னொரு நிம்மதி. மொட்டை ராஜேந்திரன் போர்ஷனில் இஷ்டத்துக்கு கை வைத்திருந்தால் சிரிப்பு இன்னும் ஷார்ப் சிரிப்பாக இருந்திருக்கக் கூடும்.
படத்தில் காளியின் நடிப்பு அட்சர சுத்தம். வார்த்தைக்கு வார்த்தை சர்வ அலட்சியமாக இவர் கொடுக்கும் கவுன்ட்டரை பார்த்தால், அந்த கவுண்டரே கட்டிப் பிடித்து பாராட்டினாலும் ஆச்சர்யமில்லை. அப்படியொரு அசால்ட். அவருக்கே தெரியாமல் கொலை பழியில் சிக்கும் அந்த காட்சியும், அதை யோசித்த விதமும் பலே பலே!
தற்கொலை பண்ணுகிறேன் பேர்வழி என்று பேசியே கொல்கிறார் ஜெய். படம் பார்க்கும் ரசிகனே திரைக்குள் நுழையும் டெக்னாலஜி என ஒன்று இருந்திருந்தால், அவர்களே விஷத்தை ஜெய் வாயில் ஊற்றி கதையை முடித்திருப்பார்கள். பார்க்க, கேட்க, பரவசப்பட, என்று மூன்றுக்குமாக சேர்த்து பிரணிதா இருக்கிறார். இவரது கேரக்டர் படு பயங்கர டேமேஜ் என்றாலும், இதில் நடிக்க ஒப்புக் கொண்ட அவரது தாராள மனசுக்கு ஒரு தங்க சல்யூட்ம்மா!
கருணாகரனை விட, அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அந்த பெண் சிரிக்க வைக்கிறார். எதிர்காலம் இருக்கு பொண்ணு.
மற்றொரு நண்பராக வரும் நவீன், செம பல்க் ஆக இருக்கிறார். இவருக்கே ஒரு சீனில் ரோப் கட்டி பறக்க விடுகிறார்கள். அவ்வளவு அடிபாடுகளுக்கு மத்தியிலும், தன் நண்பன் ஜெய் உசிரோடு இருக்கிறான் என்று சந்தோஷப்படும் அவர், கேரக்டராக மனதில் இடம் பிடிக்கிறார்.
ஜெய்யின் மனசை மாற்ற ஒரு சீனில் வந்துவிட்டு போகிறார் சந்தானம். தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்க காதல் தோல்வியால் தற்கொலைக்கு தள்ளப்படும் அத்தனை பேருக்குமான டானிக் அவர் கொடுக்கும் அந்த லெச்சர். அதுவும் சந்தானம் வாயால் கேட்பதில் தனி சுகம் கூட!
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு அவ்வளவு லைவ்! சந்தோஷ் தயாநிதி இசையில் மண்ணெண்ணை வேப்பெண்ணை பாடல் கொல குத்து.
“இந்தியாவே கவலையில் இருக்கு. ஏதோ என்னால முடிஞ்சது… சிரிங்கப்பா” என்று முயற்சி எடுத்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன் ராஜாமணி. அவரது நம்பிக்கைக்கு அடிமையாகியிருக்கிறது தியேட்டர்!
-ஆர்.எஸ்.அந்தணன்