என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

காவேரி, நீட் , மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என்று அடுக்கடுக்கான எரிச்சலில் அவிந்து கிடக்கிறான் தமிழன். ‘இந்தியாவுலதான் இருக்கா தமிழ்நாடு?’ என்று ஜனங்கள் வெறுத்துக் கிடக்கிற இந்த நேரத்தில், ‘என் மூச்சும் பேச்சும் தேசப்பற்றுதான்’ என்று சொல்லிக் கொண்டு ஒரு சோல்ஜர் தோளை குலுக்கினால், குலுக்கிய தோளை வெளுக்கத் தோணும்தானே? அப்படியொரு நினைப்புக்கு துளியும் இடம் தராமல் நம்மை இழுத்து மடியில் வைத்துக் கொள்கிறது இந்தப்படம்.

டைனிங் டேபிளில் உட்கார்ந்தால் கூட, தட்டில் கிடப்பது ‘நாட்டு’க் கோழியென்றால் எழுந்து நின்று சல்யூட் அடிப்பார் போலிருக்கிறது இப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன். அவருக்கு நேர்கிற சங்கடங்களும் சவால்களும்தான் எ.பெ.சூ.எ.வீ.இ. இன்னொருபக்கம் கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களை கண்டு இவர் கோபப்பட்டால் அவ்வளவுதான். ரத்தகளறியாக்கிவிடுகிறார் ஏரியாவை.

இவரிடம் அடிபட்டு கை முறிந்த ஏசிபி, கமிஷனரிடம் சம்பவத்தை விவரிப்பதில் தொடங்குகிறது படம். அதற்கப்புறம் படம் முழுக்க அல்லு அர்ஜுனின் அலப்பறைதான். ‘கோவம் வந்திச்சு. அடிச்சேன்’ என்று இரண்டே வார்த்தைகளில் விளக்கம் கொடுத்துவிட்டு, அதற்கப்புறம் அதே ஏசிபியை பொளந்து கட்டுகிறாரல்லவா? பைட் பிடிக்காத ஆட்கள் கூட, இமைக்காமல் ரசிக்கிற இடம் அது. பிறகு அல்லு அர்ஜுன் யாரை அடிப்பார்? எப்படி அடிப்பார்? என்று ஏங்கவே ஆரம்பித்துவிடுகிறது மனசு.

படத்தில் அர்ஜுன், சரத்குமார், போன்ற படா படா நடிகர்கள் இருந்தாலும், ஒன் மேன் ஆர்மியாக நின்று ஒட்டுமொத்த படத்தையும் சுமக்கிறார் அல்லு. (ஒங்க தில்லுக்கு தமிழ்சினிமா ரசிகக் கூட்டமே சரண்டர் சாரே!) இந்தப்படத்திற்கு ஹீரோயினோ, அல்லது காதல் காட்சிகளோ தேவைதானா? இரண்டும் இல்லாவிட்டால் கூட நாங்க ரசித்திருப்போமே.

இருந்தாலும் அந்த குண்டு கண்ணழகிஅனு இம்மானுவேலுக்கு ஒரு எலுமிச்சம்பழ அர்ச்சனை!

‘என் ஒரே ஆசை பார்ட்டர்ல நின்று காவல் காக்கணும். என் ஒருத்தனை மட்டும் நம்பி இந்தியாவுல இருக்கிற 125 கோடி பேரும் நிம்மதியா தூங்கணும்’ என்று ஆசைப்படும் சோல்ஜர் அல்லு அர்ஜுனுக்கு, அவரது கோபமே முட்டுக்கட்டையாக நிற்பதும்,‘ 21 நாள் கோபப்படாம இரு’ என்று அவருக்கு கெடு விதிப்பதும்தான் இந்த படத்தின் ட்விஸ்ட். அல்லு அர்ஜுன் அப்படி இருந்தாரா என்பது ஆஃப்டர் இன்டர்வெல்.

அல்லு அர்ஜுனின் ஆக்ஷன் சூட்டை ரசிக்கிற அதே அளவுக்கு படத்தின் வசனங்களையும் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். பெட்டி செய்தியிலோ, கொட்டை எழுத்திலோ குறிப்பிட்டு வாழ்த்தப்பட வேண்டியவர் இப்படத்தின் தமிழ் வசனக்காரர் விஜய் பாலாஜி. உதட்டசைவுக்கு ஏற்ப வசனங்களை அளவுபடுத்தி, இது டப்பிங் படம் என்கிற உணர்வே வராமல் துல்லியமாக செதுக்கி பிரமாதமாக ஒரு மேஜிக் செய்திருக்கிறார். மிரட்டல்!

தெலுங்கு வசனக்காரர் வம்சிக்கும், தமிழ் வசனக்காரர் விஜய் பாலாஜிக்கும் ஆத்மார்த்தமான ஒரு மொழிப்பாலம் அமைந்ததுதான் இப்படத்தின் கூடுதல் விசேஷம்.

சண்டை பயிற்சியாளர்கள் கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்ஷமண் ஆகிய நால்வருக்கும் ஆளுயர அருவாளே கொடுத்து கவுரவிக்கலாம். தெறிக்கிறது வெப்பம்.

இடைவேளைக்குப் பின் அமைதியாக இருக்கும் அல்லு அர்ஜுன் எப்போது மீண்டும் அடிக்கக் கிளம்புவார் என்று நாம் காத்துக்கிடக்க, தேவையில்லாமல் பாடல்களை போட்டு இழுவை பண்ணுகிறார்கள். தயவு தாட்சண்யமில்லாமல் நறுக்கித் தள்ளியிருக்கலாம். இருந்தாலும் விஷால் சேகர் இசையில் பாடல்களில் கிறக்கம்.

140 கிலோ மீட்டர் வேகத்தில் பைட் நடந்தாலும், நடுவில் புகுந்து நாலா புறமும் சுற்றி கேமிராவில் ஜெகஜ்ஜால வித்தையே காட்டிவிட்டார் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி.

‘என் பேரு அல்லு அர்ஜுன். என் வீடு தமிழ்நாடு’ என்று இங்கேயும் ஒரு கர்சீப்பை போட்டு கபளீகரத்தை ஆரம்பித்திருக்கிறார் அல்லு அர்ஜுன். தமிழ்ப்பட ஹீரோக்கள் உஷாரா இருக்கப்பா…!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நயன்தாராவை அறைந்தாரா சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி!

https://www.youtube.com/watch?v=C30g6NyjA2o&t=1s

Close