நாயை கூட நடிக்க வைக்கலாம் இவனை நடிக்க வைக்காதீங்க! இதென்னடா ஹீரோவுக்கு வந்த சாபக்கேடு?
“ஒங்களுக்கென்ன சார்… ஹீரோ? எங்க பாடுதான் இம்சை” என்று முன்னணி பின்னணி நடுவணி ஹீரோக்களை பார்த்து நாக்கு மீது பல்ல்ல்லு போட்டு பேசும் பலருக்கும் சந்தீப்கிஷனின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்திருக்கும். மாநகரம் படம் மூலம் நம்மை கவனிக்க வைத்த சந்தீப், தெலுங்கு ஃபீல்டிலும் கெட்டி ஹீரோ! ஒரு மொழிக்கே நாக்கு தள்ளும் ஹீரோக்களுக்கு மத்தியில் இருமொழி ஹிட்டுகளை பார்த்தவரும் கூட.
அப்படியிருந்தும் அவருக்கு சொல்லொணா துயரம். ஏன்? அவர் படங்களில் நடித்து அது திரைக்கு வந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டதாம். அதுவா பிரச்சனை? அதுவும் இல்லை. இவர் நடித்து தமிழில் வந்த சுமார் படம் ஒன்றை ஆந்திராவில் டப்பிங் செய்து வெளியிட்டார்களாம். அங்கே அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர், நாயை வச்சுக் கூட படம் எடுக்கலாம். சந்தீப்பை வச்சு படம் எடுக்கக்கூடாது என்று ஓப்பன் மேடையில் பேசினாராம்.
தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘கண்ணாடி’ படத்தின் பிரஸ்மீட்டில் இந்த தகவலை மனம் நொந்து வெளிப்படுத்தினார் சந்தீப். கொடுத்தா ஒரு பேய் ஹிட் கொடுக்கணும்னு காத்துகிட்டு இருந்தேன். அப்பதான் இந்த கதையை சொன்னாங்க. நானே தயாரிக்கிறேன்னு இறங்கிட்டேன். இந்த படத்தோட தெலுங்கு வெர்ஷன் என்னோட தயாரிப்புதான் என்றார்.
ட்ரெய்லரை பார்த்தால் பேய் படம் போலிருக்கே என்று சந்தீப்பிடம் கேட்டால், “படம் முடிஞ்சு வெளியில் வந்து இது பேய் படம்னு சொல்லுங்க. நான் ஃபீல்டை விட்டே போயிடுறேன்” என்றார்.
கூல் தம்பி கூல்! எதுக்கு பெரிய பெரிய சபதமெல்லாம்?
பின்குறிப்பு- திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் ராஜுதான் இப்படத்திற்கும் இயக்குனர்.