டிக்கெட்டே எடுக்க முடியாதவன் வீட்டு வாசலில் பஸ்!
நல்லாயிருக்குய்யா உங்க சட்டம்!
சில நேரங்களில் நம்ம ஊர் நீதி பரிபாலனத்தை நினைத்தால், அடி வயிறே கலங்குகிற அளவுக்கு சிரிப்பு வரும். இயலாதவனுக்குதான் இந்த சிரிப்பு. இயன்றவனுக்கு கோபம் வருமல்லவா? அப்படி வந்த கோபத்தைதான் ஒரு முழு நீள படமாக்கிவிட்டார் இயக்குனர் மகாசிவன்.
‘தோழர் வெங்கடேசன்’ என்ற பெயரில் தயாராகி வரும் அந்த படம் வெளிவருகிற நேரத்தில் ஒட்டுமொத்த தமிழ் சனமும் நம்ம ஊர் சட்ட திட்டம் குறித்து ஆவி தீர பேசக்கூடும். இந்தப்படத்தின் கதை அப்படி.
ஊரில் சோடா பேக்டரி நடத்தி வரும் அரிசங்கர் மீது அரசு பஸ் மோதிவிடும். அதில் தன் இரண்டு கைகளையும் இழந்துவிடும் அவர், நீதிமன்றத்தில் முறையிட… குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக தரச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிடும். ஆனால் அரசு போக்கு வரத்துக் கழகம் அந்த தொகையை தராமல் இழுத்தடிக்கும். ஒரு கட்டத்தில் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடும் அரிசங்கருக்கு ஒரு வியத்தகு தீர்ப்பை வழங்குவார் நீதிபதி. யெஸ்… அரசு பஸ் ஒன்றை பறிமுதல் செய்து அரிசங்கர் வீட்டு வாசலில் நிறுத்த உத்தரவு.
பசிக்கு சாப்பாடு போடுவான் என்று மன்னன் முன் பாடப் போன ஏழைப் புலவனுக்கு யானையை பரிசாக தரும் இருட்டு மந்திரிகள் வாழ்ந்த ஊரல்லவா? இந்த பஸ்சையும் பராமரிக்க வேண்டிய துர்கதிக்கு ஆளாகிறான் ஹீரோ. இந்த அதிர்ச்சிக்குப் பின் அவன் எடுக்கும் முடிவென்ன? இதுதான் முழு படமும். வெற்றிப்பட வரிசையில் இப்பவே சேர்ந்துவிட்ட ‘தோழர் வெங்கடேசன்’ படத்தை, அப்படத்தின் உள்ளடக்கம், தரம் பார்த்து வியந்து போய் தானே முன் வந்து வெளியிடுகிறார் இயக்குனர் சுசீந்திரன்.
நாடே தண்ணீருக்காக தவிக்கும் போது, ஹெல்மெட் பிரச்சனையை ஏதோ தேச பிரச்சனையாக்கும் ஊரில் அவனவன் எவ்வளவு எரிச்சலில் இருப்பான்?
அப்ப… தோழர் வெங்கடேசன் ஹிட்டுதான்!