நிறைவேறிய பிரார்த்தனை! நெப்போலியன் கட்டிய கோவில்!
அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார் நடிகர் நெப்போலியன். கோவணத்தை உருவி கொடுஞ்சிறையில் அடைத்தாலும், “யாரங்கே…?” என்று மிடுக்கு குலையாமல் அழைப்பதுதானே மன்னவர்களின் வழக்கம்? அப்படி அமெரிக்காவிலேயே தங்கிவிட்ட நெப்சுக்கு, சினிமா கம்பீரம் மட்டும் விட்டபாடில்லை. டெவில் நைட்ஸ், கிறிஸ்துமஸ் கூப்பான் ஆகிய இரண்டு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் அவர்.
வருஷத்துக்கு ஒருமுறையாவது சென்னைக்கு வந்து தான் நடிக்கும் படங்களின் முன்னோட்டத்தை திரையிட்டு பிரஸ்சோடு மகிழ்வது அவரது பொழுதுபோக்கு. அப்படி சென்னை வந்த நெப்ஸ், கூடவே தன் பட ஹாலிவுட் நடிகர் நடிகைகளையும் அழைத்து வந்தது சிறப்பு. (நம்ம ஊரு டிராபிக் ஜாமுக்கு செட் ஆகிட்டீங்களா மக்கா?)
நிருபர்களிடம் பேசும்போது ஒரு விஷயத்தை குறிப்பிட்டார் நெப்போலியன். அமெரிக்காவிலேயே தன் செலவில் ஒரு அம்மன் கோவில் கட்டியிருக்கிறாராம். நோயுற்ற மகனுக்காக உருவாக்கப்பட்ட பரிகாரக் கோவில் என்றாலும், பக்தர்களின் வருகைக்கும் பஞ்சமில்லையாம்.
கடல் கடந்து போயும் உடல் நலம் காப்பாள் மாரியாத்தா!