சரியா தூங்கறதில்ல போலிருக்கு! கவுதம் கார்த்திக்கை கடுப்பேற்றிய இயக்குனர்!
கார்த்திக்கின் பன்ஞ்சுவாலிடி கலிபோர்னியா வரைக்கும் பேமஸ்! அந்தகால தயாரிப்பாளர்களை அழ விட்ட ஹீரோக்களில் அவரைப்போல ஒருவரும் இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை. அப்பா பண்ணிய தப்புக்கு மகனின் மீது சந்தேகப்பட்டால் என்னாகும்? அப்படியொரு இம்சையை இன்று அனுபவித்தார் பழைய கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்திக்.
‘இவன் தந்திரன்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. கே.கண்ணன் இயக்கி, யுடிவி தனஞ்செயன் வெளியிடவிருக்கும் இப்படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட, தாணு பெற்றுக் கொண்டார். டி.சிவா, பசங்க பாண்டிராஜ், உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். அங்குதான் மைக்கை பிடித்த பாண்டிராஜ், “கவுதம்… உங்க கண்ணுல தூக்கம் தெரியுது. சரியா தூங்கறதில்லேன்னு நினைக்கிறேன். உங்களை மாதிரி ஹீரோக்கள் சரியான நேரத்துக்கு ஷுட்டிங் வரணும். சரியான நேரத்திற்கு உறங்கி உடம்பை சரியா வச்சுக்கணும். ஏனென்றால் இன்று தமிழ்சினிமாவில் ஹீரோக்களுக்குதான் பஞ்சம். அதனால் சொல்றேன்” என்றார்.
நல்லவேளை… கவுதமை காப்பாற்றினார்கள் அவரை வைத்து சமீபத்தில் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமியும், கவுதமுடன் இவன் தந்திரன் படத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜியும். “எல்லாருக்கும் முன்னாடி ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து எல்லாரும் கிளம்பிய பிறகு போவதை வழக்கமாக வச்சுருக்கார் கவுதம். ஏன்னா… அவங்க அப்பா சரியா படப்பிடிப்புக்கு வர மாட்டார்னு அவர் கேள்விப்பட்டிருக்கிறாராம். அது மாதிரி நாம இருந்திடக் கூடாதுன்னு அவ்வளவு சரியா இருப்பவர் கவுதம்” என்று போற்றினார் ராஜ்குமார்.
“இவன் தந்திரன் படத்திற்காக பல நாட்கள் ராப்பகல் பாராமல் உழைச்சுக் கொடுத்துருக்கார் கவுதம். அதனால்தான் அவர் கண்கள் சோர்வா இருக்கு” என்றார் ஆர்.ஜே.பாலாஜி.
எப்படியோ? கவுதமின் இமேஜை காற்றில் பறக்கவிடாமல் காப்பாற்றினார்கள் இருவரும். இவன் தந்திரன் படம், என்ஜினியரிங் படித்துவிட்டு குறைவான சம்பளத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களை பற்றியதாம். அதே நேரத்தில் புரோட்டா மாஸ்டருக்கு தினம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. படிச்சவனுக்கு இல்லையே என்றும் கவலைப்படுகிறதாம்.
படம் திரைக்கு வரும்போது புரட்சியா, புரோட்டாவா? என்று ரசிகர்கள் குழம்புவது நிச்சயம்!