என்னை பற்றி என்ன நினைச்சீங்க? உரு தயாரிப்பாளரை உண்டு இல்லை என்றாக்கிய தன்ஷிகா!
“தயாரிப்பாளர் என்பவர் ரப்பர் மரம் போல கொட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். உலர உலர வெட்டிக் கொண்டேயிருப்போம் நாங்கள்” என்று நடிகர் நடிகைகள் மார்தட்டாத குறைதான் இப்போது. அவரவர் தகுதிக்கேற்ப சம்பளம் கேட்ட காலமெல்லாம் மலையேறி அநேக வருஷங்களாச்சு. ஒரு படம் ஹிட்டானால் கூட ஓ.கே. இங்கு தலையை காட்டினாலே தாறுமாறான சம்பளம் கேட்போம் என்று கிறுகிறுக்க விடுகிறார்கள். அப்படிதான் உரு படத்திற்காக முப்பது லட்சம் சம்பளத்தை கறந்தாராம் தன்ஷிகா.
கபாலியில் ரஜினியோடு நடித்த ஒரே பெருமையை வைத்துக் கொண்டுதான் இப்படி கல்லா கட்டியிருக்கிறார் தன்ஷிகா. இதை கூட பொருத்துக் கொள்ளலாம். ஷுட்டிங் ஸ்பாட்டில் உரு தயாரிப்பாளர் வி.பி.விஜியை அவர் படுத்திய பாடு…? இன்னும் சில தினங்களில் படம் திரைக்கு வரப்போகிறது. இந்த நேரத்தில்தான் தன்ஷிகாவின் தாராள(?)மனசு பற்றியும் வெளியே கசிய ஆரம்பித்திருக்கிறது.
படப்பிடிப்பு நடந்த இடத்திற்கும் தன்ஷிகா தங்கியிருந்த ஓட்டலுக்கும் சரியாக 100 அடி தூரம்தான். சற்றே எளிமையான ஆட்களாக இருந்தால், நடந்தே போயிடலாம் என்று கூறி நடந்திருப்பார்கள். ஆனால் இந்த தன்ஷிகா? கொடுமையிலும் கொடுமை. அந்த நாலு தப்படி தொலைவுக்கு ஒரு சிறிய ரக காரை கொண்டு வந்து நிறுத்தினார்களாம். என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க? நான் என்ன அவ்வளவு சின்ன லெவலுக்கு போயிட்டேனா என்று குதித்த தன்ஷிகா, இன்னோவோ அல்லது அதற்கு நிகரான வேறொரு கார் வந்தால்தான் ஏறுவேன் என்று கூற… அதற்கப்புறம் கேப்ஸ்சுக்கு சொல்லி இன்னோவாவை வரவழைத்தாராம் தயாரிப்பாளர் வி.பி.விஜி.
இந்த மாதிரி நடிகைகள்தான் நடிக்க வாய்ப்பு தேடிய காலத்தையெல்லாம் மறந்துவிட்டு ஆட்டம் போடுகிறார்கள். உலகம் ஆலம் பழம் மாதிரி ரொம்ப சின்னது. தற்பெருமையும் தலைகனமும் ஆலமரத்தின் அடி பகுதி மாதிரி ரொம்ப பெருசு. இந்த முரண்பாட்டை எந்த சமன்பாட்டை வைத்து சரி செய்வது?
கலி காலம்டா கிருஷ்ணா…