ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் -விமர்சனம்
கே.பி.சுந்தராம்பாள் நடிக்கிற படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கிறது ஜெ.க.சு.ரா! சுமார் பத்து பனிரெண்டு வருஷங்களுக்கு முன் வந்து இளசுகளின் இதயத்தில் குலவை போட்டுவிட்டுப் போன சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்திற்கு சேதமில்லாமல் பெயின்ட் அடித்திருக்கிறார் ஓடம் இளவரசு. அந்தகாலத்து காதல் மன்னன் ஜெமினியின் டூப்பாக இந்த காலத்து கன்னிப் பையன் அதர்வாவை ஜாயின்ட் அடித்திருக்கிறார்கள். இந்த ‘லாஜிக்’ இல்லாத லவ்வில் ‘லவுக்கை’யில்லாத ராதாவாக பொருந்தி விடுகிறார் இவரும்!
தன் கல்யாண இன்விடேஷனை பழைய காதலியை பார்த்துக் கொடுப்பதற்காக மதுரைக்கு வருகிறார் அதர்வா. அவர் காதலிக்கிற காலத்தில் குடியிருந்த வீட்டின் மாடியில், சுருளிராஜன் (சூரி) குடியிருக்க, “அக்காவுக்கு இன்விடேஷன் வைக்கணும். அவங்க இல்லியா?” என்று அப்பாவியாக கேட்கும் அதர்வாவை நம்பி, அந்த அக்காவின்(?) புது வீட்டை காண்பிக்க கிளம்புகிறார் சூரி. போகிற வழியில் அதர்வாவின் லவ் எபிசோட் விரிகிறது. அடப்பாவி… மனுஷனுக்கு லட்டு லட்டாக நாலு பிகர் தேறிய கதையை சூரி அறிந்து கொதிக்கும்போது படத்தின் க்ளைமாக்சே வந்துவிடுகிறது. அங்குதான் வழி கொடுத்தவனுக்கே, ‘நோ என்ட்ரி’ போட்டு நோகடிக்கிறார் அதர்வா. அதென்ன…? செம ஜாலியான அந்த கடைசி முக்கால் மணி நேரத்திற்காகவே முதல் ஒண்ணேகால் மணி நேரத்தை பொறுத்துக்கொள்ளலாம்.
அதர்வாவுக்கு துறுதுறு லவ் பொருந்துகிறதோ, இல்லையோ? இந்த கதை அவரை தனக்குள் அப்படியே ‘ஜப்பக்’கென்று பொருத்திக் கொள்கிறது. ஒரே போர்ஷனில் குடியிருக்கும் ரெஜினாவை கவிழ்த்து அவரை காதலிக்கும் போதே, அதே வீட்டின் இன்னொரு போர்ஷனிலிருக்கும் அதிதியை கரெக்ட் பண்ணுகிற காட்சிகள் விரிகிறது. அடங்கொப்புறானே என்று வெப்பம் அடங்குவதற்குள், வீட்டை காலி பண்ணிக் கொண்டு ஊட்டியில் போய் இறங்குகிறது அதர்வா குடும்பம். கண்ணை விழிக்கும்போதே பிரணிதா. அங்கும் ஒரு டபுள் செஞ்சுரி.
இப்படி அதர்வாவுக்கு தரப்பட்ட காதல் பஞ்சுகளையெல்லாம் சேர்த்து அழகான தலையணையாக்கி நம்ம நெஞ்சில் வைத்து ஒத்தடம் கொடுக்கிறார் டைரக்டர் ஓடம் இளவரசு. ஒரே ஒரு சங்கடம். இந்த கேரக்டரில் அதர்வாவை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் லேசாக தோன்றி மறைவதுதான் துரதிருஷ்டம்.
ரெஜினா மெல்ல இளைஞர் மன்றத்தின் இளவரசியாகிக் கொண்டிருக்கிறார். “என்னடா… என்னை பார்த்தா அக்கா மாதிரியா இருக்கு?” என்று அதட்டிக் கொண்டே அதர்வாவை வளைக்கும் லவ் லாவகம், கொஞ்சநேரத்தில் பிசுபிசுத்துப் போவதை கைதட்டி ரசிக்கிறது தியேட்டர்.
பிரணதியை இறக்கியதே ரசிகர்களை கிறுகிறுக்க விடதான் என்பதை அவர் திரையில் வரும்போதெல்லாம் தெரியவிடுகிறார் ஒளிப்பதிவாளர். கோணத்திற்கு ஒரு அழகாக இருந்தாலும், கோக்குமாக்கு அழகால் திணறடித்திருக்கிறார் அவரும். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் கண்ணியத்திற்கு இழுக்கில்லாமல் கை பிடிக்கிறார் அதர்வாவை. அப்புறம்…? அதிதி. லாயக்கில்லாத அழகு. எப்படியோ? அதிர்ஷ்ட மழையில் இவரும் ஹீரோயினி அந்தஸ்து பெற்றிருக்கிறார்.
அதர்வா ஒரு பக்கம் தவறவிட்டாலும், ஆஞ்சநேயர் மலையை தாங்கியது போல மொத்த படத்தையும் தாங்குகிறார் சூரி. அதிலும் அங்க சுற்றி இங்க சுற்றி நம்ம தலையில கைய வச்சுப்புட்டானே என்பதை உணர்ந்து சூரி கொடுக்கும் எக்ஸ்பிரஷன்…. சூப்பரோ சூப்பர். எடுத்த எடுப்பிலேயே இவரை ரவுடி ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பதும், அதற்கப்புறம் சொல்லப்படும் காரணங்களும் ரொம்ப சப்பண்ணே…
ஐ ஆம் வெயிட்டிங்… என்ற வசனத்தை இனிமேலும் சொன்னால் சம்பளம் கட் என்று மொட்டை ராஜேந்திரனுக்கு உத்தரவு போட்டாலொழிய அவர் காமெடியில் ஒரு மலர்ச்சியும் நேரப்போவதில்லை. மகனுக்கும் அப்பாவுக்குமான ரிலேஷன்ஷிப், பிரண்ட்ஷிப் போல இருக்கணும் என்று உணர்த்துகிறார் டி.சிவா.
டி.இமானின் இசையில் ஒரு பாடலாவது தேறிவிடும் என்று காத்திருக்க வைக்கிறார். அந்த காத்திருப்புக்கு பலன், ‘அம்முக்குட்டியே’ பாடல். (உடம்பு இளைக்கலாம். திறமை இளைக்கக் கூடாது சார்…)
ஜெமினிகணேசனாகவே நடித்து பெயர் வாங்கிவிட்டபடியால், அதர்வா இனிமேல் ‘அம்மணி’ கணேசன் என்றே அழைக்கப்படுவாராக!
-ஆர்.எஸ்.அந்தணன்
https://youtu.be/ilSnAr-MSiY