முதல்வர் ஜெ. உடல் நலம்! ரஜினி, கமல், பாரதிராஜா, வைரமுத்து, விஷால் உள்ளிட்ட திரையுலகம் பிரார்த்தனை!
கடந்த சில தினங்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர் உடல் நலம் பெற வேண்டி எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதுவித நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் ஜெயலலிதாவின் நேரடி எதிரியாக திகழ்ந்து வரும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, ‘கொள்கை அளவில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும், முதல்வர் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டிருப்பது நாகரீக அரசியலின் நம்பிக்கை விதை.
அவர் மட்டுமல்ல, மு.க.ஸ்டாலின் உட்பட திமுக வினர் சிலரின் வாழ்த்துக்கள் விசேஷமானவை. திமுக அனுதாபியான கவிப்பேரரசு வைரமுத்துவும் கூட ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். “தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும். இந்தப் பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்” இவ்வாறு கூறியிருக்கிறார் வைரமுத்து.
அன்புள்ள சி.எம். நீங்கள் விரைவில் குணம் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கமல்ஹாசனும் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.
தேர்ந்த நிர்வாகம், துணிச்சல், ஒளிவு மறைவு இல்லாத பட்டவர்த்தனம், பாரதியின் சொல்லுக்கு ஏற்ப நிமிர்ந்த நன்நடை. நேர்கொண்ட பார்வை. நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறி கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீண்டும் புதுப்பொலிவுடனும், புத்துணர்ச்சியுடனும், முழு ஆரோக்கியத்துடனும் வெளிவந்து ஆட்சிப்பணிகளை சிறப்புற ஆற்ற, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியிருக்கிறார்.
நடிகர் சங்க செயலாளர் விஷால், மற்றும் திரையுலக அமைப்புகள் பலவும் முதல்வர் நலம் பெற தொடர்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பி வருகிறார்கள்.
To listen audio click below :-
Yov where is vijayakanth message?
Ennaiya media neenga?