கீறல் போடும் கில்டு! சினிமா ஸ்டிரைக்கை உடைக்க சதி?

‘கல்லெறிந்தால் ஓடிவிட நாங்கள் ஒன்றும் காக்கா கூட்டமல்ல, புலிக்கூட்டம்’ என்று சினிமாவில் வேண்டுமானால் டயலாக் எழுதலாம். நிஜத்தில்? ஒருவரின் பாக்கெட்டுக்குள் இன்னொருவர் தேளையும் பூரானையும் பிடித்துவிட்டாலும் ஆச்சர்யமில்லை. காலை வாருவதும், அசந்தால் ஆளையே குளோஸ் பண்ணி அநாதையாக விடுவதும் கோடம்பாக்க குழிபறிப்பர்களின் பிறப்புரிமை.

எப்படியாவது சீர் கெட்டு கிடக்கும் சினிமா வியாபாரத்தை தூக்கி நிறுத்திவிடலாம் என்ற பிடிவாதத்தில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்தனைக்கும் அறிவிக்கப்பட்ட நேரத்தில் விஷால் ஊரிலேயே இல்லை. அவருக்கு இணையான பொறுப்பில் இருப்பவர்கள் எடுத்த முடிவு, சரியாக இருப்பதால் சரி ஆமோதிக்கிறோம் என்று கூறிய பல தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டை நிறுத்தி வைக்க ஒத்துழைத்து வருகிறார்கள். சினிமா ஷுட்டிங்குகளும் இல்லை என்று அறிவித்துவிட்டது தயாரிப்பாளர் சங்கம். உள்ளூரில் மட்டுமல்ல, வெளியூர், வெளிநாட்டில் கூட தமிழ்ப்பட ஷுட்டிங்குகளை நடத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.

அடித்து தின்ற கும்பலுக்கு இதனால் அலர்ஜி ஏற்பட்டு, இறங்கி வருகிற சூழல் இப்போது. சும்மாயிருப்பார்களா? யாரை யார் தூண்டிவிட்டார்களோ?

தயாரிப்பாளர் சங்கம் போல இயங்கி வரும் இன்னொரு அமைப்பான கில்டு, தனது சங்கத்தில் உறுப்பினாராக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஷுட்டிங் எடுக்க பர்மிஷன் கொடுத்துவிட்டது. பெப்ஸி என்கிற தொழிலாளர் அமைப்பும் வேலை நிறுத்தம் செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி சொல்லியிருக்கிறார். அப்படியிருந்தும் சில பெப்ஸி தொழிலாளர்கள் உதவியுடன், சென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக படப்பிடிப்புகள் நடந்திருக்கிறது.

‘தியேட்டர்கள் சம்மதித்தால் எங்க படத்தையும் ரிலீஸ் செய்வோம்’ என்கிறார்களாம் கில்டு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள்.

கோடம்பாக்கம் உருப்படுவதற்கு இன்னும் ஐம்பது வருஷமானாலும் சான்ஸ் இல்லை!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஷாலுக்கு சிம்பு பாராட்டு!

Close