ஏ.ஆர்.ரஹ்மான் மனசுக்குள் இல்லாமல் போனாரா ஜி.வி.பிரகாஷ்?
வளர்போ, வார்ப்போ? மாமா ஏ.ஆர்.ரஹ்மானின் புகழில்தான் வளர்ந்தார் மாப்ளே ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் சொந்த திறமை அவரை எங்கேயோ கொண்டு போய்விட்டதை மறுக்க முடியாது. ரஹ்மானின் ஸ்டைல் இன்டர்நேஷனல் தரம் என்றால், ஜிவி.யின் மெலடிகள் தமிழனின் உரமாகவும் இருந்தது. அதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் மாமன் மருமகன் உறவு எப்படியிருக்கிறது? மச்சானுக்கு மாமனின் ஆசிர்வாதங்கள் உண்டா? இப்படி எண்ணற்ற கேள்விகள் அப்பாவி பாமர மக்களை சுற்றி சுற்றி வருவதை மறுக்கவே முடியாது.
இந்த கிரிட்டிக்கலான நேரத்தில்தான் கிரீஸ் வழுக்கிய மாதிரி வழுக்காமல், கிரிஸ்ப்பாக ஒரு பதிலை சொல்லி பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அதிர்ச்சியா? அது யாருக்கு? நம்ம ஜி.வி.க்குதான்!
பிபிசி தமிழ் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்தார் இசைப்புயல். அவரிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்த நிருபர், இப்ப வர்ற இளம் இசையமைப்பாளர்கடிளில் உங்களை கவர்ந்தவர் யார்? என்று கேட்க, அவர் சொன்ன பதிலில் ஜி.வி.பிரகாஷ் பெயர் இல்லவே இல்லை.
ஐயய்யோ… அப்படின்னா அவர் மனசுல இருந்தது யார் யாராம்?
சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், அனிருத். மூவரும்தான். இந்த மூவரின் பெயரை அவர் சொல்லி முடித்ததும், சற்று இடைவெளி விட்டு அடுத்த கேள்விக்கு போக காத்திருந்தார் நிருபர். அந்த இடைவெளியை அவர் கொடுத்ததே ஜி.வி.பிரகாஷின் பெயரை அவர் உச்சரிப்பார் என்பதற்காகதான்! (அதெப்படி உனக்கு தெரியும்னு கேட்கக் கூடாது. ஒரு யூகம்தான்) ஆனால் மிக தெளிவாக அடுத்த கேள்வியை எதிர்கொள்ள தயாராகிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அந்த பேட்டியில் ரஹ்மான் பகிர்ந்து கொண்ட மிக முக்கியமான மேட்டர் ஒன்று. இலங்கையில் அவர் இசைக்கச்சேரி நடத்துவதற்கு எதிர்ப்பு வந்தது அல்லவா? அந்த கச்சேரியை கால வரையறையில்லாமல் தள்ளி வைத்துவிட்டாராம். “அந்த அரசியல்ல நம்ம மாட்டிக்க கூடாது. முதல்ல அவங்க மனசுல இருக்கிற வலி போகட்டும். அப்புறம் பார்க்கலாம்” என்றார் ஒரேயடியாக!