எச்.ராஜா மன்னிப்புக் கேட்டாலும் ஏற்கக் கூடாது! கமல் ஆவேசம்!

ஜோதிடத்தில் அனுகூல சத்ரு என்றொரு பலன் சொல்வார்கள். நல்லது செய்வதற்காக உள்ளே வரும் கிரகம், இருந்த கோவணத்தையும் பிடுங்கிக் கொண்டு கிளம்புவதுதான் அது. அப்படி தமிழக பி.ஜே.பியின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை கோவணத்தோடு பிடுங்கிவிட்டார் எச். ராஜா. தேர்தல் நேரத்தில் ஓட்டுகேட்க வந்தால் சவுரியப்படுமே என்று பி.ஜே.பி பிஸ்கோத்துகளுக்காக ஒளித்து வைத்த ஐட்டத்தையெல்லாம் இப்பவே எடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது மக்கள்.

பெரியார் பற்றி எச்.ராஜா சொன்ன கருத்துக்களால், நாடே ஆத்திரத்திற்கு ஆளாகியிருக்கிறது. அவ்வளவு ஏன்? பிராமணர் சங்கமே, எச்.ராஜா இப்படி பேசியிருக்கக் கூடாது என்று அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் இன்று பிரஸ்சை சந்தித்து தனது ஆத்திரத்தையும் ஆரவாரமில்லாமல் வெளிப்படுத்தினார் கமல்ஹாசன்.

பெரியார் பற்றிய ஹெச்.ராஜாவின் கூற்று கீழ்த்தரமானது. அவரை சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டும். பெரியாரை ஒன்றும் செய்திட முடியாது அவரது உயரம் அவ்வளவு அதிகம். பெரியார் சிலைக்கு பாதுகாப்பு தேவை இல்லை. அவரைப் பற்றி பேசுபவர்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்பு தேவைப்படலாம்.

இது காவிரி மேலாண்மை அமைப்பதை திசை திருப்பும் செயல். நாம் திரும்பிடாமல் பாதுகாக்க வேண்டும். நமக்கு கலகங்கள் தேவை இல்லை, தீர்வுகள்தான் தேவை.

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பதுதான் நேர்மையான கட்சி செய்யக் கூடிய வேலை. எச் ராஜா வருத்தம் தெரிவித்தது போதாது.மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதையும் யோசிக்க வேண்டும். அட்மின் போஸ்ட் செய்ததாக கூறுவது நொண்டிச் சாக்கு. அதை ஏற்க முடியாது என்று செய்தியாளர்களுக்கு பதில் அளித்தவரிடம், விதி மீறி வீடு கட்டியதாக உங்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளதே? என்ற கேள்விக்கும் பதிலளித்தார்.

அரசு அனுப்பி இருக்கும் நோட்டீஸில் என் மீது குற்றம் இருக்குமானால் சட்டத்திற்கு கட்டுப்படுவேன். நான் மட்டுமல்ல அப்பகுதியில் 7ஆயிரம் வீடுகள் கட்டி உள்ளனர் என்று கூறினார் கமல்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, எச் ராஜா, பெரியார் விவகாரத்தில் இதுவரை வாயையே திறக்கவில்லை ரஜினி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி காலில் விழுந்த எஸ்.ஏ.சி! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு

Close