படப்பிடிப்பில் தாக்குதல்! மர்ம நபர்கள் கையில் சிக்கிய ஹீரோ! பிரச்சனையை கையில் எடுக்குமா நடிகர் சங்கம்?
ஓடு ஒண்ணுதான். உள்ளேயிருக்கிற மஞ்சள் கருவுக்கும் வெள்ளைக் கருவுக்கும்தான் விவகாரம் என்று பீடிகையோடு சொல்ல ஆரம்பிக்கிறது கிசுகிசு வட்டாரம். பொதுவாகவே ஒரு படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கும், அப்படத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் ஒரு ஏழரையோ எட்டரையோ இருந்து கொண்டே இருக்கும். நான் ஹீரோ என்ற பந்தாவோடு நடந்து கொள்வார் கதாநாயகன். பணம் போட்டவன் நானாச்சே என்ற பந்தாவோடு நடப்பார் தயாரிப்பாளர். கேப்டன் ஆப் த ஷிப் நான்தானே, நியாயமா நானல்லவா திமிரை காட்டணும் என்பார் இயக்குனர். படத்தில் நடிக்கும் ஹீரோயின்? கேட்கவே வேண்டாம். அது தனி அழுகாச்சி காவியம். (இதெல்லாம் இல்லாமல் ஒரு படம் வந்தால் அதை கின்னஸ்சில்தான் சேர்க்கணும்) இப்படி ஒண்ணுக்குள் நாலாகவும் ஆறாகவும் பிரிந்து நிற்கும் சிலரால்தான், சந்தோஷமாக இயங்கிக் கொண்டிருக்கிறது ரசனை உலகம்.
சரி விஷயத்துக்கு நேரடியாக வருவோம். ‘பட்டதாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அபி சரவணன். சங்கரபாண்டி என்பவர் இயக்க, அபிக்கு ஜோடியாக அதிதி, ரசிகா என்று இரு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். படம் துவங்கிய நாளில் இருந்தே தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ மூவருக்கும் நடுவில் ஒரு ஈகோ பூதம் உட்கார்ந்து கொண்டு ஆட்டமாய் ஆடிக் கொண்டிருந்ததாம். ஹீரோ மீது செம கடுப்பில் இருந்த யாரோ, (அது தயாரிப்பாளராகவும் இருக்கலாம், இயக்குனராகவும் இருக்கலாம்) ஷுட்டிங் ஸ்பாட்டில் வைத்து பிரிச்சு மேய்ந்துவிட்டார்களாம் அவரை.
மதுரையில் ஷுட்டிங். காட்சிப்படி பைட் சீன். பொதுவாக கம்பியாலோ, பாட்டிலாலோ ஹீரோவை தாக்கும் காட்சிகளில், நிஜம் போன்ற மெழுகு ஐட்டங்களை பயன்படுத்துவார்கள். அடிக்கும் போது ஒரு அடிக்கு தாங்காமல் அதுவே பிய்ந்து விழுந்து விடும். ஆனால் ரிகர்சலில் மெழுகு ஐட்டங்களை பயன்படுத்தியவர்கள் ஷாட் என்று வரும்போது நிஜமான கட்டைகளையும், பாட்டில்களையும் பயன்படுத்தினார்களாம். முதல் அடி விழுந்தவுடனே ‘ஹோ’வென அலறிவிட்டாராம் ஹீரோ அபி சரவணன். காலையிலிருந்தே மேக மூட்டம் சரியில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தவர் மூன்றாவது நான்காவது அடியில் சுதாரித்துக் கொண்டாராம். “நம்மள வச்சு செய்யுறானுங்க… விடக்கூடாது” என்று.
அப்புறமென்ன. … “நான் மதுரைக்காரண்டா… எங்கிட்டயேவா?” என்று ஆவேசக் கூச்சலுடன் அதே கட்டையை பிடுங்கி ஸ்டன்ட் மேன்களை போட்டு புரட்டி எடுக்க, படப்பிடிப்பு நிலவரம் படபடப்பு கலவரம் ஆகிவிட்டதை சடக்கென புரிந்து கொண்டாராம் கேமிராமேன். இந்த நிஜத் தாக்குதல் முயற்சி அவருக்கே சொல்லப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததோ என்னவோ? கட் கட் என்று தன்னையறியாமல் குரல் கொடுத்து தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தினாராம். அதற்கப்புறம் பெரிய ரகளையே நடந்ததாம் ஸ்பாட்டில். என்னை திட்டமிட்டு அடிக்கிறீங்க, இதுக்கு நியாயம் கிடைக்கணும் என்று ஆவேசமானாராம் ஹீரோ.
படம் இன்னும் முடியவேயில்லை… அதற்குள் கை கால் உடம்பு வலியை விட, மன வலியை அதிகம் சுமந்து கொண்டு அல்லாடுகிறார்களாம் ஹீரோ உள்ளிட்ட படக்குழுவினர். எல்லாரையும் கூப்பிட்டு வச்சு நல்லா கவுன்சிலிங் கொடுக்கணும். இல்லேன்னா மிச்ச நாளில் யாரு எலும்பை யாரு உடைக்கிறாங்கன்னே தெரியாது என்று கதறுகிறார் படத்தில் பணியாற்றும் ஒரு பங்கு!
வீங்குற அளவுக்கு குத்திட்டு, விசும்புற அளவுக்கு ஆறுதல் சொல்லக் கிளம்பியிருக்கும் இந்த விவகாரத்தில் ஹீரோவுக்கு ஆறுதலாக பேச வருமா நடிகர் சங்கம்?
நடிகர்கள் செய்யும் அலப்பரையும் தெனாவட்டும்… என் சாய்ந்தாடு படத்தில் அனுபவித்தவன் நான். காசு செலவு செய்பவனுக்குத்தான் தெரியும் வலி.
I support producer, especially new & budget film producer.