எனக்கு படிக்கிற பழக்கம் இல்ல! ஓப்பனாக பேசும் சுசீந்திரன்!
மிஷ்கின் மாதிரி இயக்குனர்களுக்கு புத்தகம்தான் உலகம். சுசீந்திரன் மாதிரி இயக்குனர்களுக்கு உலகமே புத்தகம். இரண்டுக்குமான வித்தியாசத்தை அவரே சொல்லி கேட்கும் போது அழகுடா… இன்னும் அழகுடா!
இந்த வாரம் 10 ந் தேதி வெளியாகிறது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப்கிஷன் ஹீரேவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் நடித்திருக்கிறார். விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தொடர்பாக சந்திக்க போன இடத்தில்தான் புத்தக வாசிப்பு பற்றிய பேச்சும் வந்தது.
“எனக்கு படிக்கிற பழக்கம் இல்ல…” என்று எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டார் சுசீந்திரன். அப்புறம்? அதைவிட பெரிய விஷயமா நான் நினைக்கிறது மனிதர்களை படிக்கறதுதான். இப்பவும் யாரை சந்திச்சாலும் மணிக்கணக்கா பேசுறது என்னோட வழக்கம். அதுவும் ஊருக்கு போயிட்டேன்னா நானும் அப்பாவும் வாசல்ல சேரை போட்டு உட்கார்ந்துக்குவோம். கிட்டதட்ட நாலு மணி நேரத்துக்க மேலே பேசுவோம். அவர் வாழ்க்கையில் நடந்தது. அவருடைய நண்பர்கள் வாழ்க்கையில் நடந்ததுதுன்னு பேச்சு செயின் மாதிரி போயிட்டே இருக்கும். அதுல இல்லாத சம்பவங்களா? கதைகளா? திருப்பங்களா?”
“இன்னமும் எனக்கான சினிமா கதைகளை இதுபோன்ற சம்பாஷனைகளில்தான் எடுக்கிறேன். மனிதர்கள்ட்ட கதைகள் நிறைஞ்சு கிடக்கு. அவர்கள்தான் எனக்கு புத்தகம்” என்றார் சுசீந்திரன்.
அதுவும் சரிதான்!