பிரசவங்கள் வலி மிக்கவைதான்! விழித்திரு இயக்குனருக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாராட்டு
பிரசவங்கள் வலி மிக்கவைதான். சுமப்பது வீர்யமிக்க குழந்தையென்றால் அது இன்னும் உதைக்கும்… புரளும்… எல்லாம் செய்யும். அந்த வகையில் இயக்குநர் மீராகதிரவன் சுமந்திருப்பது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கக்கூடிய ராஜக்குழந்தைதான். என்ன? “விழித்திரு” என்ற ராஜக்குழந்தையைப் பெற்றெடுக்க மீரா தனது உயிர் எல்லையின் நுனிவரை போராடி மீண்டிருக்கிறார்.
ஒரு இயக்குநருக்கு தயாரிப்பு பொறுப்பும் தலையில் விழும்போது குழந்தையை அவனால் கருணைக்கொலை கூட செய்யமுடியாமல் போய்விடுகிறது.
ஆனால் போராடி தன்னை நிரூபித்திருக்கும் மீரா கதிரவனுக்கு வாழ்த்துகள்!
விழித்திரு பார்த்தேன். பார்க்கப் பார்க்க உள்ளிழுக்கப் பட்டிருந்தேன். திரைக்கதையோட்டம் நான்கு கோணங்களில் தனித்தனி புள்ளிகளாக ஆரம்பித்து, இறுதியில் அதை ஒரு அழகிய கோலமாக்கும் கோடுகளை படம் முழுக்க திகைக்க விட்டிருந்தார்.
விதார்த், கிருஷ்ணா, சாய் தன்ஷிகா, வெங்கட் பிரபு, பேபி சாரா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா ஃபெர்ணான்டஸ் என எல்லோரும் பாத்திரங்களுக்குள் தங்களை பாந்தமாக்கியிருந்தனர்.
அண்ணன் T. ராஜேந்தர் ஒரு பாட்டுக்கு அதகளம் பண்ணியிருந்தார்.
அதிகார வர்க்கம் தீர்மானிக்கும் முடிவுகள் சாதாரணனை எப்படி ஓடவைக்கிறது என்பதை படம் முழுக்க பதைபதைப்புடனே பார்க்க நேர்ந்தது.
நியாயத்தை வெளிக்கொணர நினைக்கும் ஒவ்வொரு நேர்மையாளனுக்கும் பரிசாக என்ன கிடைக்கிறது இந்த அராஜக அதிகார வர்க்கங்களால் என்பதை நல்ல அழுத்தமாகவே ஒலித்திருக்கிறார் மீரா.
பணம் மட்டும் இருந்துட்டா போதாது. மனதைப் பிடிக்க, இன்னொருவருக்கு உதவுதலும் உதவலாம் என்ற புள்ளி,
ஆதரவற்றவர்கள் தங்களோடிருக்கும் சிறு உயிர்களுக்காக எப்படி பரிதவிக்கிறார்கள் என்பதும் அவர்களை இந்த இரவு சமூக கிரிமினல்கள் எப்படி வதைக்கிறார்கள் என்பது ஒரு புள்ளி,
பர்ஸ் திருடு போவதால் ஒரு சாதாரணனுக்கு நேரப்போகும் கற்பனைக்கெட்டாத அதிர்ச்சிகள் ஒரு புள்ளி,
அதே பர்ஸை அடித்தவன் பரிதவித்துக் கடக்கும் இரவு மற்றொரு புள்ளி என இந்த நாலு புள்ளிகளிலும் நம்மை அழுத்திவைக்கும்போது ஒரு இரவு இவ்வளவு அபாயகரமானதா என கலங்க வைக்கிறது.
போஸ்டர் ஒட்டுபவன் சாராவுக்கு ஜெராக்ஸ் எடுத்து உதவுவதும், ரிக்ஷாக்காரர் ரோட்ல அடிபட்டுத்தான் சாவே என யதார்த்தமாக சொல்வதும் அதன் தொடர்புக்காட்சியும், அவ்வளவு பெரிய பணக்காரன் ஒரு ரூபாய்க்காக தவிப்பதும், முத்துக்குமாரின் மரணத்தை வைத்து போராட்டம் எனக் கோர்ப்பதும் நிறைய உழைத்திருக்கிறார் இயக்குநர் மீராகதிரவன்.
கடின உழைப்பு வெற்றி மாலையாகட்டும்!
விழித்திரு நேற்றைய இரவை அப்படியே விழித்திருக்கச் செய்தது.
-சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்