இனியா ஏன் வரல…? எரிச்சலில் படக்குழு!
‘சதுர அடி 3500’ என்றொரு படம். (எப்படியெல்லாம் பெயர் வைக்கிறாங்கப்பா?) நிகில் மோகன் என்பவர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். ஒரு முக்கிய ரோலில் ரகுமான் நடிக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு இனியா, ரகுமான் இருவருமே மிஸ்சிங். கோவம் வரதானே செய்யும்? வச்சு சுளுக்கு எடுத்துவிட்டார்கள் நேற்று.
(இது நியாயம்தான்)
இந்த படத்திற்கு சம்பந்தமேயில்லாத பாக்யராஜ், தாணு இருவரும் வந்திருக்காங்க. ஆனால் சம்பந்தப்பட்ட இனியாவும் ரகுமானும் வரலையே? என்று வருந்தினார் நிகில் மோகன். அதற்கப்புறம் இதே விஷயத்தை மைக்கை பிடித்த எல்லாரும் வலியுறுத்த, நடுவில் பேச வந்தார் வளர்ந்து வரும் ஹீரோ அபி சரவணன். “நான் நடிச்ச பட்டதாரி படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. என்னை கூப்பிடவே இல்ல. ஆனால் கூப்பிடுவாங்கன்னு விழா நடந்த சத்யம் தியேட்டர் வாசலிலேயே நின்றேன். கடைசி வரைக்கும் கூப்பிடவேயில்ல. அதுமாதிரி இந்த படத்தின் ஹீரோயினான இனியாவுக்கும் உங்களுக்கும் என்ன மனஸ்தாபமோ? அது தெரியாமல் அவங்களை கண்டிக்கறது சரியா படல” என்றார்.
(அட இதுவும் நியாயம்தான்)
ஆனால் எல்லாரையும் பேலன்ஸ் செய்கிற விதத்தில் பேசிய கே.பாக்யராஜ், “இனியா இப்படவிழாவில் வராதது குறித்து கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால், அவர் வராததால் நஷ்டம் அவருக்குதான் ஒழிய படக்குழுவிற்கு இல்லை. ‘சுவர் இல்லாத சித்திரங்கள் ’ படத்தில் நான் ஒரு வசனம் எழுதியிருப்பேன். ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று எழுதியிருப்பேன். அவர்களுக்கு தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டும். அவர்கள் வராத விசயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
(அட… இதுவும் சரியாதானப்பா இருக்கு?)