சங்கடப் படுத்தும் சண்டக்கோழி! சரியான்னு சொல்லுங்க லிங்குசாமி?

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுக்கிற ஏரியாதான் சினிமா! இங்குதான் கரும்பு சக்கையைப் போல கன்னா பின்னாவென நசுக்கி இன்னொரு படைப்பாளிக்கு இஞ்சி மரபா கொடுத்தனுப்பியிருக்கிறார் லிங்குசாமி!

மிஸ்டர் லிங்கு. இப்படியே போனீங்கன்னா உங்க வாழ்க்கையில் இன்னும் ஏழெட்டு அன்புச்செழியன்களை மீட் பண்ண வேண்டியிருக்கும் என்கிற சாபத்தோடு இந்தக்கட்டுரையை துவங்குவதுதான் சரியாக இருக்கும்!

வி.கே.சுந்தர். தமிழ்சினிமாவிலிருக்கிற முக்கால்வாசி படைப்பாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும் நன்கு தெரிந்த பெயர். பல வருஷ பத்திரிகை பணி, பல வருஷ சினிமா பணி என்று தன் பயோ டேட்டாவை பலமாக வைத்திருப்பவரும் கூட! அடிஷனல் தகவல்… லிங்குவின் காம்பவுன்ட்டில் வி.கே.சுந்தர் முக்கியமான நபர். ஏன்? இவரும் லிங்குசாமியும் ஆரம்பகாலங்களில் சைக்கிளில் ஒன்றாக சுற்றிய நட்பு சுனாமிகள்.

தற்போது லிங்குசாமி இயக்கி வரும் சண்டக்கோழி பார்ட் 2 படத்திற்காக டயலாக் எழுதிக் கொண்டிருக்கிறார் அவரது நெருங்கிய நண்பரான பிருந்தசாரதி. எல்லாம் திருப்தி. ஆனால் ஏதோ ஒண்ணு குறையுதே… என்று நினைத்த லிங்கு, ‘ஆங்… கண்டுபிடிச்சுட்டேன். மதுரை ஸ்லாங் மிஸ்சிங்’ என்றாராம். மதுரை தேனி பகுதிகளில் பிறந்து வசித்த வி.கே.சுந்தர், ‘நான் வேணா எழுதித் தர்றேன். பாருங்க’ என்று கூற, அங்கேயே ஸ்பாட் அப்ரூவல் அளித்திருக்கிறார் லிங்கு.

இவரும் அங்கேயே உட்கார்ந்து இரண்டு சீன்களை எழுதிக் கொடுக்க, எல்லார் முகத்திலும் ஏக திருப்தி. ‘முழு டயலாக்கையும் இதே ஸ்லாங்ல எழுதிக் கொடுங்க’ என்று கூறிவிட்டார் லிங்குசாமி. சம்பளமும் 3 லட்சம் பேசப்பட்டுவிட்டது. ‘ஒன் லைனை கொடுங்க. வீட்ல உட்கார்ந்து எழுதிட்டு வர்றேன்’ என்று சொன்ன சுந்தரிடம், ‘கதை வெளியில போக வேண்டாம். இங்கேயே எழுதிக் கொடுங்க’ என்றாராம் லிங்குசாமி.

அதற்கப்புறம் ஆபிசுக்கு போகிற பேங்க் ஊழியர் போல காலை ஒன்பது மணிக்கு போய், மாலை ஆறு மணிக்கு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார் வி.கே.சுந்தர். சுமார் ஒரு மாத காலம் அங்கேயே உட்கார்ந்து மொத்த வசனத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பிவிட்டார். ஒரு முறை ஷுட்டிங் ஸ்பாட்டுக்குப் போன சுந்தரை படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷிடம் காட்டி, ‘இவர் யாரு தெரியுதா? நீ பக்கம் பக்கமா மதுரை டயலாக் பேசுறேல்ல. அதை எழுதினவர் இவர்தான்’ என்றும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். எல்லாம் சுபிட்சமாக போய் கொண்டிருந்தது ஒருகட்டம் வரை. அந்த கட்டம் கஷ்டமாக மாறியது எப்போ?

‘லிங்கு… பேமென்ட் தர்றேன்னு சொன்னீங்க. இன்னும் வரலையே?’ என்று வி.கே. சுந்தர் கேட்கும் வரை. அதற்கப்புறம் அங்கு ஒருவர் முகத்திலும் சுபிட்சம் இல்லை. இப்போது நடுநடுவே வாங்கிய 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று வாங்கிய 50 ஆயிரத்தை சொல்லி, அதோடு சரியாப்போச்சு என்று கூறிவிட்டார்கள்.

என்னங்க இப்படி பண்றீங்க என்று கேட்ட சுந்தருக்கு, மிஸ்டர் லிங்கு சொன்ன பதில்தான் ஷாக்கோ ஷாக். ‘உங்க டயலாக்கை நாங்க பயன்படுத்தல. அதனால் இதோடு சரியாப்போச்சு. இனிமே முடியாது’ என்பதுதான் அது.

எழுதிய பக்கங்கள் எல்லாவற்றையும் படித்து பாராட்டியது கூட மறந்து போய்விட்டதா? ‘சரி… அவர் சொன்னபடியே கூட இருக்கட்டும். ஒரு மாத உழைப்பு. அதற்கான கூலியை தரலாமே?’ என்கிறார் சுந்தர்.

சண்டக்கோழியின் கூறிய மூக்கு இப்போது வி.கே.சுந்தரின் குழம்பிய முகத்தை நோக்கி….!

சினிமாவை விட, சினிமாவின் பின் கதைகள்தான் வக்ரமாகவும் விவகாரமாகவும் இருக்கும் போல!

-ஆர்.எஸ்.அந்தணன்

பின்குறிப்பு- இந்தப்படத்திற்காக ஏழு கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம் லிங்குசாமிக்கு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அருவி திருட்டுக் கதையா? ரொம்ப தப்பா பேசுறீங்க!

கடந்த இரண்டு நாட்களாகவே சேறு சகதியுமாக வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள் சோஷியல் மீடியாவில். அத்தனையும் அருவி மீது. பேரிறைச்சலுடனும் பெரு மகிழ்வோடும் குதித்தோடும்அருவி முன் இதெல்லாம் எடுபடப் போவதில்லை...

Close