போபர்ஸ் ஊழல் பற்றிய கதைதான் இரும்புத்திரையா? டவுட்டு டவுட்டு!
எப்போது அரசியலுக்காக ஆர்.கே.நகரில் குதித்தாரோ, அப்போதிலிருந்தே வேஷ்டி துண்டு போடாத பேண்ட் சர்ட் அரசியல்வாதியாகிவிட்டார் விஷால். அவர் எப்போது கட்சி தொடங்குவார் என்று விஷாலின் ரசிகர்கள் ஆர்வமாகிக் கிடக்கிற நேரத்தில், ஊழல், ராணுவம் என்றெல்லாம் பேசி பெரிய ஆர்வத்தை தூண்டியிருக்கிறார் நம்ம ஹீரோ.
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் பிரபலமாக பேசப்பட்ட ஊழல்தான் போபர்ஸ் ஊழல். ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் என்று புயல் கிளம்பியது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இல்லாத இந்த நேரத்தில் ‘ராணுவத்தில் நடைபெறும் ஊழல் குறித்த படம்தான் இரும்புத்திரை’ என்று விஷால் முன்னறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி மெர்சல் படத்தை பி.ஜே.பியின் தமிழக தலைவர்கள் ஓட வைத்தார்களோ, அதே ஃபார்முலாவில் இரும்புத்திரையும் ஓடினால், விஷாலின் மொட்டை மாடியில் ஒரே பண மழைதான்…
சரி அப்படி என்னதால் பேசினார் விஷால்? எங்கு பேசினார்? இரும்புத்திரை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இப்படியொரு பரபரப்பு பேச்சு.
சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன். இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம் அதற்கு மனிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படம். இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார். என்னுடைய தந்தை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இந்த படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான். இரும்புத்திரை என்னுடைய 24வது திரைப்படம் என்றார் விஷால்.
கழுத்தை சுற்றி கத்தியோடு திரிகிற மனுஷன் என்றால் அது விஷால்தான் போலிருக்கு! தமிழிசைக்கு ரெஸ்ட்டு… திருநாவுக்கரசருக்கு ட்யூட்டி… லைட்ஸ் ஆன்!