புதுக்கோட்டை டூ ஜப்பான்! ஜப்பான் டூ கோடம்பாக்கம்! எல்லாம் அவன் செயல்!
‘மனசே ஒரு மந்திர சாவி… அதை பயன்படுத்த முடியாதவன்தான் படுபாவி’! இந்த ஒரு வரிக்கு உதாரணம் சுரேஷ் நல்லுசாமி. ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்திருக்கும் சுரேஷுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை. படிக்கும்போதே ஹீரோவாகணும் என்று நினைப்பாராம். ‘ஒம்மூச்சுக்கெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று கண்ணாடி சொல்லியிருந்தால், அன்றே அந்த எண்ணத்தை மூட்டை கட்டி ஓனிக்ஸ் வண்டியில் எறிந்திருப்பார். ஆனால் மனம் எனும் மந்திரசாவி, ‘ஆகட்டும்டா மாப்ளே…’ என்றது.
அப்படியே தொழில் நிமித்தமாக ஜப்பானுக்கு போனவர், தொழிலதிபர் ஆகிவிட்டார். வெளிநாட்டில் வசிக்கும்போதுதான் தாய் மொழியின் அருமை புரியும். யு ட்யூபில் மேய்ந்து கொண்டிருந்தபோதுதான் அசரீரி என்ற குறும்படத்தை பார்த்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு ‘ராடம் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’. அந்த படத்தை இயக்கிய ஜி.கே வின் நட்பு எப்படியோ கிடைக்க…. அதே ஜி.கே வின் இயக்கத்தில் காதலின் தீபம் ஒன்று என்ற குறும்படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார்.
தன்னை காதலித்தவள் வேறொருவனை கல்யாணம் செய்து கொண்டு போனாலும், அவளை நம்மை மாதிரி எவனும் நல்லா வச்சுக்க முடியாது என்று நினைப்பதுதான் மனுஷ மனசு. (உள் மனசு நாசமா போகட்டும் என்று சபிப்பதும் கூட உண்டு) ஆனால் கதை அப்படியே உல்டாவாக மாறி, அவள் இவன் நினைத்ததை விட நன்றாக வாழ்ந்தாலென்றால் மனசு வெட்கப்படுமல்லவா? அதைதான் இந்தப்படத்தின் மையக்கருத்தாக வைத்திருக்கிறாராம் ஜி.கே.
“இன்னும் கொஞ்ச நாளில் இந்த குறும்படத்தை வெளியிடப் போகிறோம். எனக்கு முன்னாள் காதலி ஒருத்தியும் இல்ல. ஆனால் அடுத்த மாதம் கல்யாணம். புது மனைவி பார்த்துட்டு என்ன சொல்லப் போறாங்களோ?” என்று குறுகுறுப்போடு காத்திருக்கிறார் சுரேஷ். ஒருவேளை பெரிய திரையில் நடிக்க சொல்லலாம்.
உங்க மனசு எனும் மந்திரசாவி, இனி பொண்டாட்டி கையில்தானே?