போஸ்ட் ஆபிசுக்கே அட்ரசா? திணறிய காக்கா முட்டை மணிகண்டன்!
ரிலீசுக்கு முன்பு வரை வெறும் காக்கா முட்டையாக இருந்த மணிகண்டனை, அதற்கப்புறம் தங்க முட்டையாக கொண்டாட ஆரம்பித்துவிட்டது இன்டஸ்ட்ரி. உலகத்தில் லொட்டு லொஸ்க்கு நாடுகளில் இருந்தெல்லாம் இப்படத்திற்கு கிடைத்த விருதும், மரியாதையும் மணிகண்டனின் எடைக்கு எடை கோடிகளை கொடுத்து கவுரவிக்கும் என்று எதிர்பார்த்தால், அதை கிருமி என்றொரு படம் வந்து காலி பண்ணியது. ஏன்? அப்படத்திற்கு அவர்தான் கதை மற்றும் வசனம்.
க்ளைமாக்ஸ் இப்படியிருந்தா ஒரு பய பார்க்க மாட்டான் என்று சுற்றமும் நட்பும் பதறியடித்து சொன்ன போதும், எல்லாம் என் பெயருக்காக பார்ப்பாங்க என்று கூறி அதையெல்லாம் அலட்சியம் செய்தார் மணி. ரிசல்ட்? காக்கா முட்டையின் பெயரிலும் புகழிலும் கிருமியாய் விளைவு செய்தது கிருமி.
கிட்டதட்ட அதே மாதிரியான ஒரு அதப்பில் இருக்கிறாராம் மணிகண்டன். இவர் இயக்கி வரும் ஆண்டவன் கட்டளை படத்தில் ஐந்து பாடல்களாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறாராம் தயாரிப்பாளர். ஆனால் இந்த படத்தில் பாட்டே இல்ல. வெறும் பின்னணி இசைதான் என்று கூறிவருகிறாராம் மணிகண்டன். இத்தனைக்கும் படத்திற்காக பாடல் எழுதப்பட்டு கம்போசிங் செய்யப்பட்டுவிட்டது. அப்புறம் ஏன் இந்த முரண்பாடு?
எந்த பல்லி மண்டைக்குள் நுழைந்து குறி சொன்னதோ? வேண்டவே வேண்டாம் என்று இவர் பிடிவாதம் காட்ட, கண்டிப்பாக படத்தில் நாலு பாட்டு இருக்கு. அதற்கான பாடல் வெளியீட்டு விழாவும் இருக்கு என்று கூறிய தயாரிப்பாளர் அதற்கான இன்விடேஷன், விளம்பரங்கள் என்று களை கட்ட விடுகிறார். மணிகண்டனின் நாலெட்ஜ் இல்லாமலே அவரது பார்வைக்குப் போகும் இந்த விளம்பரங்களை பார்த்தால், போஸ்ட் ஆபிசுக்கே அட்ரஸ் சொல்றாங்க என்று இருக்கிறதல்லவா?
அதான்… அதேதான்!