30 Minutes திணறத் திணற அடித்த படக்குழு!

கால் கட்டு நல்ல சகுனம். அதுவே கட்டை விரல்களை மட்டும் இணைத்துக் கட்டினால்… சங்கு என்று அர்த்தம். ஆனால் எடுப்பது ஆவிக்கதை. அதில் சென்ட்டிமென்ட்டாவது ஒண்ணாவது? ஒரு பிணத்தின் கால் கட்டை விரல் கட்டப்பட்டிருக்கும் ஸ்டில்லை மட்டுமே விளம்பரங்களில் போட்டு திகில் கிளப்பி வருகிறது ‘பயம் ஒரு பயணம்’ பட கோஷ்டி. இந்தப்படத்தை இயக்கியிருப்பவர் மணிஷர்மா.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது எல்லாருக்கும். பொதுவாக இத்தகைய நிகழ்வுகளில் ஒரு பாடலையோ, அல்லது ட்ரெய்லரையோ மட்டும் வெளியிடுவார்கள். ஆனால் இங்கு படத்தின் அரை மணி நேர காட்சியை அப்படியே ஓட விட்டார்கள். அந்த அரை மணி நேரமும் குலை நடுங்க, குப்புற பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஒரு சில பயந்தாங்கொள்ளிகள். காட்சியும், பின்னணி இசையும் அப்படியொரு எபெக்ட்.

ஏங்க இப்படியொரு ரணகளம்? என்று இயக்குனரை கேட்க நினைத்தால், அவரே படம் பற்றி விலாவாரியாக பேச ஆரம்பித்தார்.

“விஜய் சேதுபதி நடித்த ‘பீட்ஸா’ படத்திற்கு முன்பு நான் இந்த பயம் ஒரு பயணம் படத்தின் கதையை எழுதினேன். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு தான் அந்த கதையின் மூலம் நான் முழு திருப்தி அடைந்தேன்…தற்போதைய காலத்தில் உள்ள திகில் படங்கள் எல்லாம், திகில் என்ற மைய கருத்தை விட்டுவிட்டு வேறொரு பாதையில் பயணிக்கிறது…எங்களின் பயம் ஒரு பயணம் திரைப்படம் அப்படி இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு திகில் படமாக மட்டும் தான் இருக்கும். பொதுவாகவே மூன்று பரிமாணத்திற்குள் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. ஆனால் எங்களின் திரைப்படமானது ரசிகர்களை நான்காவது பரிமாணத்திற்குள் பயணிக்க செய்யும்…’ என்றார் மணிஷர்மா.

தயாரிப்பு துறையில் பயம் ஒரு பயணம் படம் மூலம் அடியெடுத்து வைக்கும் இளம் தயாரிப்பாளர்கள் துரை மற்றும் சண்முகம் கூறுகையில், “வெறும் பயம் மட்டும் எங்கள் படத்தில் இல்லை..அதையும் தாண்டி ஒருவித முக்கிய சிறப்பம்சம் இதில் இருக்கிறது. படம் பார்த்த பிறகு அதை ரசிகர்கள் உணர்வார்கள்…” என்றனர்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸ். எதுக்கும் அரண்ட சுபாவம் கொண்டவர்கள், தியேட்டருக்கு எலுமிச்சம் பழம் ஊதுவத்தியோடு வந்து போவது நல்லது!

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தர்மதுரை விமர்சனம்

திசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு! சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது?...

Close