தர்மதுரை விமர்சனம்
திசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு! சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது? இந்த எண்ணத்தை, அவநம்பிக்கையை முற்றிலும் ஒழித்திருக்கிறது தர்மதுரை. மருத்துவத்தின் புனிதத்தையும், காதலின் வலிமையையும், தாய்மையின் மகத்துவத்தையும் ஒரு படத்தில் குழைத்து, வண்ணம் தீட்டியிருக்கிறார் சீனுராமசாமி. வெறும் ரசிகனாக உள்ளே நுழைந்து, விஜய் சேதுபதியின் அண்ணனாகவோ, தம்பியாகவோ ஒவ்வொருவரையும் மாற்றி அனுப்புகிற வித்தை இப்படத்தில் ஒளிந்திருக்கிறது. படத்தில் வந்து போகிற எல்லாருக்கும் வணக்கம். ஒரிரு காட்சிகளில் வந்து போகிற அந்த கோவில் மாட்டுக்கும் கூட ஒரு கும்பிடு!
வில்லேஜில் எந்நேரமும் குடித்துக்கொண்டே திரிகிற ஒரு டாக்டர் விஜய்சேதுபதி. அலப்பறை தாங்காத அண்ணன் தம்பிகளே, “அவனை போட்டுத் தள்ளிடணும்டா” என்று பிளான் போட, பெற்ற தாயான ராதிகா பிள்ளையை காப்பாற்ற செய்யும் தந்திரத்தால், எப்படியோ தப்பிக்கிறார் அவர். ஊரைவிட்டு ஓடுகிற அவசரத்தில், அண்ணன் வைத்திருக்கும் எட்டு லட்ச ரூபாய் பையோடு அவர் கிளம்பிவிட, சீட்டு பணத்தை திருப்பி செலுத்த முடியாத குடும்பமே நடுத்தெருவுக்கு வருகிறது. ஒரு கட்டத்தில் தன் பையிலிருக்கும் பணத்தை அறிந்த விஜய் சேதுபதி, மனம் மட்டுமல்ல உடல் நலமும் திருந்தி திரும்பி வருகிறார். வந்த இடத்தில் என்ன நடக்கிறது? கிளைமாக்ஸ்! நடுநடுவே வரும் விஜய் சேதுபதியின் கல்லூரி பிளாஷ்பேக், கவிதை ஊறும் காதல்கள் என்று இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்ப விடாத தென்றல் காற்றாய் ஒத்தியெடுக்கிறது படம்.
விஜய் சேதுபதியின் நடிப்பை ‘அற்புதம்’ என்று ஒரு வார்த்தையில் எழுதி விட முடியாது. அதையும் தாண்டி… அதையும் தாண்டி… என்று படம் முழுக்க பிரமிப்பூட்டிக் கொண்டேயிருக்கிறார். அநேகமாக அவர் வருகிற எல்லா காட்சிகளுமே விஜய் சேதுபதிக்கு மட்டுமல்ல, பார்க்கிற நமக்கும் விசேஷமான நிமிஷங்கள்தான். ஊரையே அலப்பறை பண்ணுகிற ஒரு குடிகாரன், மருத்துவக் கல்லூரியின் டாப் கிளாஸ் ஸ்டூடன்ட் என்பதும், இவருக்கும் சிருஷ்டி, தமன்னா, ஐஸ்வர்யா தினேஷ் ஆகியோருக்குமான காதலும், அப்படியே சொக்க வைக்கிறது. அதுவும், அதிகம் படிக்காத கிராமத்து ஐஸ்வர்யாவிடம் மனம் பறிகொடுக்கும் ஒரு டாக்டரின் பியூர் லவ், அத்தனை அழகு! ‘மக்கள் செல்வன்’ விருதுக்கு மிக மிக தகுதியானவர்தான் விஜய் சேதுபதி.
தமன்னா சிருஷ்டியெல்லாம் கிடக்கட்டும். நம்ம ராதிகா? அடேயப்பா… என்னவொரு நடிப்பு! நன்றாக படித்த மகன் இப்படி குடிகாரன் ஆகிவிட்டானே. அவன் வாழ்க்கை வீணாகிப் போச்சே என்கிற டயலாக் ஏதும் இல்லை. ஆனால் அத்தனை டயலாக்கையும் அந்த வெற்று முகத்தில் சுமக்கிறார் ராதிகா. எல்லா பிள்ளைகளையும் விட, அவர் விஜய் சேதுபதி மீது வைத்திருக்கும் அந்த அன்பு வெளிப்படுகிற இடமே அந்த போலீஸ் ஸ்டேஷன்தான். “எனக்கென்னவோ என் இளைய மகன்ங்க ரெண்டு பேர் மேலதான் சந்தேகம். அவங்களை விசாரிக்கிற விதத்தில் விசாரிங்க” என்று ராதிகா சொல்கிற காட்சிக்கு விசில் பறக்கிறது தியேட்டரில். ‘போலீஸ் ஸ்டேஷனை கொளுத்திப்புட மாட்டேன்’ என்று ஒரு இடத்தில் ராதிகா சொல்ல, கிராமத்து தாய்களின் வீரமும் துணிச்சலும் மின்னலாய் வெட்டிவிட்டு போகிறது. (சீனு ராமசாமி படங்களில் வரும் அம்மாக்கள் விசேஷமானவர்கள்)
கொஞ்சம்தான் வருகிறார் முனியாண்டி அலைஸ் காமராஜ் என்கிற நடிகர் ராஜேஷ். இப்படியெல்லாம் ஆசிரியர்கள் இருந்தால், பழுதான விதைகள் இருக்கவே இருக்காது. அதுவும், கவர்மென்ட் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் வில்லேஜ்களில் போய் மருத்துவம் செய்யணும் என்கிற அவரது அறிவுரையும், வாத்தியார் சொல்லே வேதம் என்று திரிகிற அவரது ஸ்டூடன்டுகளும் வியப்புக்குரியவர்கள்தான். ஒரு காட்சியில் தன் மாணவனை தேடி ராஜேஷ் வருகிற அந்த காட்சியில் நம்மையறியாமல் குளம் கட்டுகின்றன விழிகள்.
தன் தோழி சிருஷ்டி டாங்கே விஜய் சேதுபதியை காதலிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பதை ஒரு வினாடியில் உணர்த்திவிடுகிற தமன்னா, பிற்பாடு அதே விஜய் சேதுபதியோடு சேர்கையில் மனசு, ‘அப்பாடா’வாகிறது. பாகுபலிக்கு பிறகு வரும் தமன்னா படம். அவருக்கு மேலும் கம்பீரத்தை சேர்த்திருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷின் கள்ளங்கபடமில்லா படபட பேச்சுக்கு ஒரு ஹை! “உங்களை தெரியாம அண்ணன்னு கூப்பிட்டுட்டேன்” என்று பிற்பாடு சங்கடமாகும் போதும், தன் அப்பாவுக்கு கஷ்டம் தரக்கூடாது என்று தன்னையே மாய்த்துக் கொள்கிற போதும், கலங்க விட்டிருக்கிறார்.
அட… ரொம்ப நாள் கழித்து கஞ்சா கருப்பு. பேட்டரி தீராமல்தான் இருக்கிறார் மனுஷன். இதே மாதிரியான டைரக்டர்கள் அமைந்தால் உருப்படுவாரோ என்னவோ? எந்நேரமும் தின்று கொண்டே இருக்கும் அந்த அக்காள் புருஷனும் கலகலக்க விடுகிறார் தியேட்டரை.
விஜய்சேதுபதியின் தம்பிகளில் சௌந்தர்ராஜா கவனம் ஈர்க்கிறார். அதுவும் அரிவாள் வெட்டுக்கு பயந்து ஓடி, ஓட்டுக் கூரையிலிருந்து உருண்டு விழுவதெல்லாம் அர்ப்பணிப்பு!
கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் தன் பொறுப்புணர்ந்து செயல்பட்டிருக்கிறது சீனு ராமசாமியின் பேனா. “புரோட்டாவை கேரளாவுல தடையே பண்ணிட்டான். நாமதான் இன்னும் தின்னுகிட்டிருக்கோம்” என்று ஒரு மருத்துவர் வாயால் சொல்ல வைத்து அபாய மணியடிக்கிறார். காதுள்ளவர்கள் கேட்கக் கடவது!
யுவன் சங்கர் ராஜாவுக்கு இது ‘கம் பேக்’ காலம்! பருத்தி வீரனுக்கு பிறகு வில்லேஜ் இசையில் வானவில் நெய்திருக்கிறார் மனுஷன். பின்னணிதான் ஒரே டொக்கு டொக்கு. சரி பண்ணிக்கோங்க யுவன்.
ஒளிப்பதிவு சுகுமார். தனியாக வேறு சொல்ல வேண்டுமா? ஊரை எந்தப்பக்கம் பார்த்தாலும் ரசிக்க விடுகிறார். படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்தும் இருக்கும் எடிட்டர் காசி விஸ்வநாதன், கச்சிதமான இடங்களில் நச்சென கத்தரி போட்டு, படத்தை வேகம் குறையாமல் காப்பாற்றுகிறார்.
தர்ம துரை! ஏது குறை?
https://www.youtube.com/watch?v=RDPEzxsVVMw&feature=youtu.be
-ஆர்.எஸ்.அந்தணன்
Comment: ஏன் கவிப்பேரரசு வைரமுத்து ஐயா பாடல் வரிகளை பற்றி நீங்கள் எழுதவில்லை , படத்திற்கு அவரின் வரிகளும் பலமே , இனியாவது பாடலாசிரியர்களுக்கு மதிப்பு தாருங்கள்
the movie dharmadurai s about U1’s background score…. bgm s great… so…