‘ மீன் குழம்பு ’ படத்தில் விவேகானந்தர் கெட்டப்பில் கமல்? கெஸ்ட் ரோலா, கெட்ட ரோலா?
கமல் ஒரு படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணுகிறார் என்றால் அது அவ்வளவு சாதாரணமாக நடந்துவிடாது. எல்லாம் நண்பரின் மகனுக்காகதான்! உப்பு பெறாத விஷயத்திற்கெல்லாம் நட்பை இழுக்கும் உலகத்தில், உப்பு மாதிரி சேர்ந்து நட்புக்கு ருசி சேர்த்திருக்கிறார் கமல். நடிகர் ஜெயராமுக்காக அவரது மகன் காளிதாஸ் நடிக்கும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் ஒரு காட்சியில் தோன்றி தியேட்டரை பரவசப்படுத்தப் போகிறார் அவர். அமுதேஷ்வர் இயக்கும் இப்படத்தில் பிரபுவும் காளிதாசும் அப்பா மகனாக நடிக்கிறார்கள். காளிதாசுக்கு ஜோடியாக ஆஸ்னா சவேரி நடிக்கிறார்.
இந்தப்படம் ‘வய்ஸ் வெர்ஷா’ என்ற ஹாலிவுட் படத்திலிருந்து சுடப்பட்டதாகவும் ஒரு டாக் இருக்கிறது கோடம்பாக்கத்தில். கதையே கொஞ்சம் ஏடாகூடமாகதான் இருக்கிறது. மகனுக்கும் அப்பாவுக்கும் திடீரென மூளைக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. அப்பா மகனாவும், மகன் அப்பாவாகவும் மனதளவில் மாறி விடுகிறார்கள். அப்பாவின் கம்பெனிக்கு போய் வேலை பார்க்க ஆரம்பித்துவிடுகிறார் மகன் காளிதாஸ். அப்பா பிரபுவுக்கு இன்னும் சிக்கல். மகனின் காதலியான ஆஸ்னா சவேரியிடம் ஜொள்ளுவிடுவாராம். வீட்டிலிருக்கும் மகனோ, அம்மாவையே மனைவி என்று நினைத்து ரொமான்ஸ் மூடுடன் பார்ப்பாராம்!
இந்த தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு சாமியாரிடம் அழைத்துப் போகிறார்களாம் இருவரையும். அந்த சாமியார்தான் கமல். தனக்கான சாமியார் கெட்டப்பை கமலே தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆண்டவன் கட்டளை படத்தில் சிவாஜி வருவது போல காஸ்ட்யூம் அமைக்க சொன்னாராம். அது கிட்டதட்ட விவேகானந்தரின் உடையமைப்பு போலவே இருக்கும். கமல் வருகிற அந்த ஒரு சில நிமிஷங்களுக்காக நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து அழகூட்டியிருக்கிறாராம் டைரக்டர் அமுதேஷ்வர்.
கமல் சாதாரணமா பேசுனாலே புரியாது. அதுவும் சாமியார் கெட்டப்பில் வந்து பேசினால் என்னாகுமோ?