அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! நன்றிக்கடன் காட்டும் கமல்!
ஏ.வி.எம் தயாரித்த ‘களத்தூர் கண்ணம்மா’தான் கமல் அறிமுகமான முதல் படம். சிறுவன் கமல் பாடும் ‘அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே’ பாடலை இப்போது பார்த்தால் கூட, ‘கொழந்தே என்னமா இருக்கான்?’ என்று நெட்டி முறித்து கன்னத்தில் வைத்துக் கொள்ளும் உலகம்!
பேபி கமல் வளர்ந்து பெரிய கமல் ஆன பிறகும் கூட, அவருக்கும் ஏ.வி.எம்முக்குமான அன்பும் மரியாதையும் அப்படியேதான் இருக்கிறது. கமல் மார்க்கெட்டில் அதே பலத்தோடு இருக்கிறார். ஆனால் ஏ.வி.எம்தான்… ‘இந்த கொடூரமான கால கட்டத்தில் படம் எடுப்பதைவிட, பில்டிங் கட்டி வாடகைக்கு விடலாம்’ என்று புளோர்களை இடித்துக் கொண்டிருக்கிறது.
இப்படி கமல் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில், விரக்தியோடு வேறு தொழில் பார்க்கலாமா ஏ.வி.எம்? கமலே இந்த நிறுவனத்தை அழைத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார். கமல்ஹாசனை வைத்து காமெடி படங்களாக எடுத்து, அதை மார்க்கெட்டில் ஆஹா ஓஹோவென ஓட வைத்த டைரக்டர் மௌலிதான் இந்தப்படத்தை இயக்கப் போகிறார். படத்திற்கு ‘மெய்யப்பன்’ என்று பெயர் வைக்கப் போகிறார்களாம்.
அந்த ஐயப்பன் இந்த மெய்யப்பனை நல்லா வளர்த்து நல்லபடியா ஓட வைக்கட்டும்!