எவனோ ஒருவன் தனுஷை என் மகன் என்கிறான்! இயக்குநர் கஸ்தூரிராஜா வருத்தம்!

வாசவி பிலிம்ஸ் சார்பில் வி.கே.மாதவன் தயாரித்துள்ள படம் ‘ பார்க்க தோணுதே’. புதுமுகங்கள் நடிப்பில் ,மணிஸ் இசையில், ஜி.ரமேஷ் ஒளிப்பதிவில் இப்படத்தை ஜெய். செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் கஸ்துரிராஜாவின் பேச்சுக்காக காத்திருந்தது விருந்தினர் கூட்டம். காரணம்? தனுஷை தன் மகன் என்று ஒரு தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் அல்லவா? அது குறித்து விளக்கம் தருவார் என்பதற்காகாதான். அதை புரிந்து கொண்டவர் போல பேசிவிட்டார் கஸ்தூரிராஜா.

“இந்த மாதிரி சிறியபடங்கள் ஒடினால்தான் சினிமா நன்றாக இருக்கும்.மேலும் 10 படங்கள் வரும். இதுதான் சினிமா. எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான் . ஸ்ரீகாந்த்தேவா இங்கே இருக்கிறார்.ஒருகாலத்தில் தேவாவின் இசையில் 5 படங்கள் இயக்கினேன். ஐந்தும் வெற்றி. அவர் மகன் இந்த ஸ்ரீகாந்த்தேவா அப்போது கீபோர்டு பிளேயர். சாப்பாடு கூட அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில்தான். அவர்கள் வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவேன். அவ்வளவு சுதந்திரம் இருக்கும். இளையராஜாவிடம் சுதந்திரமாக இருக்க முடிமா? பேச முடியுமா? மூச்சுக் கூட சத்தமாக விடமுடியாது. அவரை வைத்து பெரிய ஆளானவர்கள் பல பேர். நானும் அவரால் வளர்ந்தவன். அவர் என்னிடம் நீ ஆசீர்வதிக்கப் பட்டவன் என்பார். இப்போது காலம் மாறிவிட்டது.

என் மூத்தமகன் செல்வா “என்னை ஏன் கதாநாயகனாக்கவில்லை?” என்கிறான். “தனுஷ் என்னை ஏன் நடிக்க விட்டே?” என்கிறான்.

இங்கு வந்துள்ள நட்டியிடம் நான் ஒரு கதை சொன்னேன். நடிக்க மறுத்துவிட்டார். இது பெரிய கதாநாயகர்கள் செய்யவேண்டிய கதை எனக்குச் சரிப்பட்டு வராது என்றார். அவர் எடுத்த முடிவு சரியானது. சிலவற்றைச் சொல்ல சில முகம் தேவை. அதுதான் முகப் பொருத்தம் என்பது .அவர் ‘சதுரங்க வேட்டை’யில் நன்றாக நடித்திருப்பார். அதுதான் அவரது முகப் பொருத்தம்.

நான் முதல்படம் இயக்கியபோது ராஜ்கிரண் பெரிய கதாநாயகர்களிடமெல்லாம் என்னை அழைத்துச் சென்றார் .விஜயகாந்திடம் கதை சொன்னேன். மறுத்துவிட்டார். அது ‘இரவுப்பூக்கள்’ சமயம் சத்யராஜிடம் கதை சொன்னேன். மறுத்துவிட்டார். அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை. சத்யராஜ் இதெல்லாம் ஒரு கதையா என்றார். சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன் என்றார்.

பாரதிராஜா எடுக்கிறாரே என்றேன் அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? என்றார். நான் புதுமுகம் என்பதால் யாரும் நம்பவில்லை. இப்படிப் பலவற்றை கடந்துதான் முதல் படம் எடுத்தேன். எல்லா அறிமுகங்களும் இப்படிப்பட்ட அவமானங்களும் வலிகளும் போராட்டங்களும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார்.

அப்போது எனக்குள் ஈகோ எப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம் என்று. ஆனால் அவர்கள் நடிக்காததால் முடிவு நல்லதாகவே முடிந்தது. இயக்குநர் ஒருவர் கற்பனையில் ஏதேதோ நினைக்கலாம். மற்றவர் வேறு மாதிரி உணரலாம். அதுவே திசையை மாற்றி விடும் . ‘என் ராசாவின் மனசிலே’ வுக்கு நான் நினைத்த கதையில் ‘பெண் மனசு ஆழமுன்னு ‘ என்கிற அந்தப் பாட்டெல்லாம் கிடையாது. காட்சியிலும் இல்லை. ஆனால் இளையராஜா அந்தப் பாடலைப் போட்டார். காட்சிகள் இல்லை. எடுக்கவில்லை என்றேன். போய் எடு என்றார். அப்போது என்னவோ நம் கனவு சிதைக்கப் பட்டதைப் போலத் தெரியும் நம் கனவு மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைப்போம். அப்படித்தான் அன்றும் நினைத்தேன். ஆனால் அவர் பாடல் பெரிய பலமானது.

தயாரிப்பாளர் அமைவது சிரமம். இயக்குநர் என்னென்னவோ கற்பனை செய்யலாம். கப்பல் வருவது போலக் கற்பனை செய்யலாம். கப்பல் கொண்டுவர ஒரு கிறுக்கன் தயாரிப்பாளர் பணத்துடன் வரவேண்டும். தயாரிப்பாளர் மனசு தாயின் வயிறு போல. என் படப்பிடிப்பு திம்மம் என்கிற ஊரில் நடந்து கொண்டிருந்தது.இரவு சாப்பிடும் போது ஆச்சிக்குத் தொண்டைக்குள் மீன் முள் சிக்கிக் கொண்டுவிட்டது. அருகில் மருத்துவமனை இல்லை. 100 கி.மீ. தூரம் கோபி செல்ல வேண்டும். நேரமோ இரவு ஒருமணி ஆகிவிட்டது. அதற்குப்பிறகு போய் சிகிச்சை எடுத்தோம் எல்லாமே செலவு செய்தது தயாரிப்பாளர்தான்.

இன்று கேரவான் கலாச்சாரம் வந்திருக்கிறது. என் படத்தில் நடித்த ஒரு நடிகைக்கு தாஜ் ஒட்டலில் அறை எடுக்கச் சொன்னார்கள். அதில் அவர் 9 நாட்கள் தங்கவே இல்லை. தங்காமல் இருந்தை சொல்லித் தவிர்த்து இருந்தால் 2 லட்சம் மிச்சம்தானே?

பெரியபடம் எடுப்பது சுலபம் . இன்று ஒழுங்காக வருகிறவர்களைக்கூட திசைதிருப்பி விடுகிறார்கள். இப்படிக் குழப்பிப் பூஜையோடு நின்று போன படங்கள் எத்தனை ?பாதிப் படத்தோடு நின்று போன படங்கள் எத்தனை ?

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி இல்லாமல் படமெடுக்க முடியாது. அவ்வளவு பிரச்சினைகள் வரும். ‘பார்க்க தோணுதே’ என்கிற இந்தப் படத்தின் தலைப்பைப் பார்க்கும் போது எனக்கு நான் காதலித்த காலம் நினைவுக்கு வருகிறது. காதலில்லாதவன் கலைஞனே கிடையாது. சிறுவயதில் தாலாட்டிய அம்மாவைப் பார்க்கத் தோணுது, தோளில் சுமந்த அப்பாவைப் பார்க்கத் தோணுது, பள்ளி நண்பனைப் பார்க்கத் தோணுது, காதலியைப் பார்க்கத் தோணுது. ஆமாம் ,காதலியைப் பார்க்கத் தோணுது. சத்தியமாக நான் ஒரே ஒரு பெண்ணைத்தான் காதலித்தேன். ஆனால் திருமணம் செய்யவில்லை. இது என் மனைவிக்கும் தெரியும்.

மதுரையில் 1974–ல் மெஜுரா கோட்ஸ் நிறுவனத்தில் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த போது இருந்த சுதந்திரமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் இப்போது இல்லை. அப்போது முதல்மகன் செல்வா பிறந்தது தனுஷ் பிறந்தது எல்லாமே சுதந்திரமும் மகிழ்ச்சியும் தந்தவை. இப்போது தனுஷை எவனோ ஒருவன் என் மகன் என்கிறான். எனக்கு எவ்வளவு பிரச்சினை பாருங்கள். இன்று வசதிகள் இருந்தும் சுதந்திரமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. இன்று சினிமா எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது. இன்று சினிமா சூதாட்டத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறது.

‘துள்ளுவதோ இளமை’யில் நடித்தபோது அப்போது . ப்ளஸ் ஒன் படித்த தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை, ஈடுபாடில்லை. பைனான்சியர் பணம் கொடுத்துவிட்டு ‘அப்பனும் புள்ளையும் கேமரா வச்சிட்டு விளையாடறாங்க’ என்றார் கிண்டலாக. ‘என் ராசாவின் மனசிலே’ சமயத்தில் கூட என்னையும் ராஜ்கிரணையும் ‘கோடம்பாக்கத்தில் ரெண்டு லூசுங்க சுத்துது’ என்றார்கள். இப்படி எல்லாரும் அவமானங்களைத் தாண்டித்தான் வர வேண்டும்.இந்த சிறிய தயாரிப்பாளர் வெற்றிபெற வேண்டும் ” என்று வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான ‘ நட்டி’ நட்ராஜ். தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் ஏ வெங்கடேஷ்,அப்துல் மஜீத்,பத்திரிகையாளர் சங்கத்தலைவர் டி.எஸ் .ஆர் சுபாஷ் ,நடிகர் காதல் சுகுமார், பாடகர் வீரமணிதாசன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,ஆகியோருடன் ,நாயகன் அர்ஷா, நாயகி தாரா, இயக்குநர் ஜெய் செந்தில் குமார் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டார்! விஜய் ஆன்ட்டனி செய்து முடித்தார்!

‘ரெமோ’ படத்தில் சத்யம் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு அந்த பிரமாண்டமான ‘கபாலி’ பட பேனரையே பார்த்துக் கொண்டிருப்பார் சிவகார்த்திகேயன். “எப்படியாவது இந்த இடத்துல நம்ம பேனர்...

Close