தமிழுக்கு வரப்போகும் தங்க வயல் கதை! விஷாலின் வியாபார யுக்தி!


அஜீத்தையும் விஜய்யையும் அப்படியே போட்டு பிசைந்து ஒரு அதிரடி ஹீரோவை தயாரித்தால் அவர் யாஷ் மாதிரி இருப்பார். அதுக்கு எதுக்கு தனியா பண்ணணும்? அவரே இருந்திட்டு போகட்டுமே என்று நினைத்தார்களோ என்னவோ? இங்கு தமிழில் அஜீத் விஜய்க்கு தருகிற அத்தனை மரியாதையும் இந்த கன்னட ஹீரோவான யாஷுக்கு தரப்படுவதாக கூறுகிறார்கள் பெங்களூர் தமிழர்கள்.

இப்போ எதுக்குய்யா ஒரு கன்னட ஹீரோவை பற்றி இங்க வந்து பேச்சு?

இருக்குதே! இந்த யாஷ் நடிப்பில் நான்கு வருடங்களாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘கே.ஜி.எஃப்’ என்ற படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார் விஷால். தமிழில் மட்டுமா? இந்தி மற்றும் தென்னக மொழிகள் அத்தனையிலும் வெளியாகிறது இந்த கே.ஜி.எஃப். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை திணற திணற கொண்டாடினார்கள் பெங்களூரில்! நிகழ்ச்சிக்கு தன் பொன்னான நேரத்தையும், புதுசு புதுசான பஞ்சாயத்துகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு வந்திருந்தார் விஷால். கூடவே அவரது அன்பு அப்பா ஜி.கே.ரெட்டியும் வந்திருந்தார்!

ஆல் இண்டியா மீடியாக்காரர்கள் அப்படியே விஷாலை சூழ்ந்து கொண்டு பிளாஷ் மழையில் நனைத்தார்கள். (அடிச்ச வெளிச்சத்துல மனுஷன் கொஞ்சம் வெள்ளையாவே மாறிட்டாரு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்)

இது கோலார் தங்க சுரங்கத்தில் நடக்கிற கதையாக இருக்கக் கூடும். கோலார் வயல் என்றாலே அங்கு தமிழர்களின் பங்கு அதிகம் இருக்கும் அல்லவா? அதனால் இந்தப்படமும் தமிழுக்கு பொருத்தமாக இருக்கும் என்று விஷால் நினைத்திருக்கலாம். என்.ஜி.கே படத்தை தமிழில் வெளியிடுவதை பெருமையாக நினைப்பதாக கூறினார்.

வெளியிடப்பட்ட ட்ரெய்லரில் ரத்தம் தெறித்தது. ஆக்ஷன் காட்சிகளில் குடல் நடுங்குகிற அளவுக்கு ரவுடிகளை போட்டு புரட்டிக் கொண்டிருந்தார் யாஷ். இவர் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ஒன்று வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் கதை மீது இம்ப்ரஸ் ஆனாராம். அதற்கப்புறம் நான்கு வருடங்கள் இந்த படத்திற்காக மெனக்கெட்டிருக்கிறார் யாஷ். ராக்கிங் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து இவரை கொண்டாடி வருகிறார்கள் கன்னட ரசிகர்கள். இந்த ராக்கிங் ஸ்டாரின் எல்லை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி வரைக்கும் நீளும் என்று நம்ப வைக்கிற அளவுக்கு இருக்கிறது அந்த ட்ரெய்லரும் எதிர்பார்ப்பும்.

பிரஷாந்த் நீல் இயக்கியிருக்கும் இந்தப்படத்தை, விஜய் கிரகந்தர் என்ற படா படா தயாரிப்பாளர் உருவாக்கி வருகிறார். அதென்ன படா படா தயாரிப்பாளர்? கன்னடத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இதற்கு முன் படம் வந்ததில்லை என்கிற அளவுக்கு கொட்டி செலவு செய்து கொண்டிருக்கிறாராம்.

தங்க வயலுக்குள் நடக்கிற கதை. கைக்கு அடக்கமாக செலவு செய்தால் அந்த தங்கத்துக்கே பொறுக்காதல்லவா? (நமக்கெல்லாம் முத்தூட்தான் முனீஸ்வர சாமி!)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அதிமுகவைக் குறிவைக்கிறாரா விஜய்? விஜயைக் குறிவைக்கிறதா அதிமுக?

https://www.youtube.com/watch?v=30KAFusCsVU

Close