என் படம் எந்த ஷோ? தியேட்டர் வாசலில் அலைந்து திரிந்த ஹீரோயின்!
நல்ல தரமான படங்களாக இருந்தால் கூட, குப்புற போட்டு கொள்ளிக்கட்டையால சொறியுற வழக்கத்தை கொண்டிருக்கின்றன தியேட்டர்கள்! இன்னும் கொஞ்ச நாட்களில் நல்ல படைப்பாளிகளையெல்லாம் மியூசியத்தில் போட்டோவாகதான் பார்க்க முடியும் போலிருக்கிறது. “படம் எடுக்கறதெல்லாம் கூட ஈசிதான்ப்பா. ஆனா எடுத்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வருவதற்கு பதிலா, மே மாத வெயிலில் வெறும் உடம்போடு உருண்டுடலாம் போலிருக்கு” என்று அலறாத குறையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள் புதுமை படைக்க நினைக்கும் இயக்குனர்கள்.
ஏதோ ஒன்றிரண்டு ஹீரோக்களின் புண்ணியத்தில் அவ்வப்போது நல்ல சினிமாக்கள் வருகிற சூழ்நிலையில் பட்ஜெட் குறைவான படங்களுக்கு பட்டை நாமம் விழ ஆரம்பித்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த ‘கோடை மழை’ படத்திற்கு விமர்சகர்களின் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்க, இந்த படம் எங்கே, எப்போது, எந்த ஷோ ஓடுகிறதென்றே தெரியாமல் அலைந்து திரிந்து, “அடப் போடா ” ஆகியிருக்கிறார் அப்படத்தின் ஹீரோயின் ஸ்ரீபிரியங்கா.
பாண்டிச்சேரி தமிழச்சியான இவர் இந்த படத்தில் கொடுத்திருக்கும் நடிப்பு, சந்தேகமேயில்லை… ஆஹா ஓஹோதான்! “நல்லா நடிச்சுருக்கேம்மா” என்று கவிப்பேரரசு வைரமுத்துவே இவரை பாராட்டினாராம். எல்லாம் ஓ.கே. தன் பிரண்ட்ஸ்களுடன் தான் நடித்த படத்தை பார்க்க சென்னையிலிருக்கும் முக்கியமான அந்த மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு போயிருந்தாராம் இவர். ஏழு தியேட்டர் இருக்கு. எதிலேயாவது நம்ம படம் ஓடும். அதுவும் இந்த தியேட்டர்ல நம்ம படம் ஒடுவதா இயக்குனரும், தயாரிப்பாளரும் சொன்னதை நம்பி போனால், “உங்க படத்தோட ஷோ இப்ப இல்லம்மா. ராத்திரி பத்து மணிக்குதான்” என்றார்களாம் அங்கே.
“அடப்பாவிகளா?” என்று அங்கிருந்து வேறு வேறு தியேட்டர்களுக்கு அலைந்தாலும், ஒரு இடத்திலும் உருப்படியான பதில் இல்லை. இத்தனைக்கும் சென்னையில் மட்டும் 12 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ். “அருமையான படம்ங்கிறாங்க. நல்ல நடிப்புங்கிறாங்க. சென்னை பிலிம் பெஸ்டிவல்ல எழுந்து நின்று கைதட்டுனாங்க. ஆனால் தெருவா தெருவா திரிஞ்சும் நான் நடிச்ச படத்தை நம்மால போர்க்க முடியலையே?’ என்று வேதனைப்படுகிறார் ஸ்ரீபிரியங்கா.
இப்படியெல்லாம் சிஸ்டம் இருந்தா, நல்ல சினிமா எப்படி வரும்? நாசமா போங்கடா!