கூட்டத்தில் ஒருத்தன் விமர்சனம்
ஒரு கொட்டாங்குச்சி, பட்டாம்பூச்சியை லவ் பண்ணினால் எப்படியிருக்கும்? அதுதான் இந்தக் கதையின் ஒன் லைன்! அடுத்தடுத்து எழுதப்பட்ட அடிஷனல் லைன்கள், தமிழ்நாட்டின் அறுபது சதவீத இன்பீரியாரிடி பசங்களின் சின்சியாரிடி சிலபஸ்! ‘அட என்னை மாதிரியே எல்லாத்துக்கும் தயங்குறான்ப்பா இவன்….’ என்று நம்புகிற ஒவ்வொருவரும் உள்ளே வந்தாலே கூட்டத்திற்கு குறைச்சலிருக்காது!
மிடில் பெஞ்ச் மாணவனான அசோக் செல்வன், “நீ எந்த கிளாஸ்ப்பா?” என்று கிளாஸ் டீச்சரே கேட்கிற அளவுக்கு அடக்க ஒடுக்கமான ஜீரோ. இருக்கிற இடம் தெரியாத அவருக்குள்ளும் ஒரு காதல். அவள்? மாநிலத்திலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற ப்ரியா ஆனந்த். இவர் படிக்க விரும்பும் ஜர்னலிசத்தையே தானும் படிக்க விரும்பும் அசோக், எப்படியோ பாடுபட்டு ப்ரியா வகுப்பிலேயே சேர்ந்து கொள்கிறார். நினைத்த மாதிரியே அசோக் தன் காதலை சொல்ல, “அதிருக்கட்டும்… உன் பெயரென்ன?” என்கிறார் ப்ரியா. “நீ எதையாவது சாதிச்சுட்டு வா. அப்புறம் யோசிக்கலாம்” என்று இவர் சொல்ல, சாதிக்கக் கிளம்பினாரா அசோக்? சந்தோஷப்பட்டாரா ப்ரியா ஆனந்த்? இதெல்லாம்தான் படத்தின் டிராவல்.
க்ளைமாக்சில் ஒரு அழுத்தமான மெசெஜ் சொல்லி அனுப்பி வைக்கிறார் டைரக்டர் த.செ.ஞானவேல்!
திக்கு தெரியாத மக்குப் பசங்களின் லுக்குக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கிறார் அசோக் செல்வன். தடி பிரேம் கண்ணாடி போட்டு, நடக்கும்போதே தட்டு தடுமாறினால் அவன் மக்கு பையனா என்ன? இவரை பார்த்தால் மென்ட்டலி ரிட்டாடட் போல இருக்கிறார். குடித்துவிட்டு குளோஸ் அப்பில் உளறும் அந்த காட்சியில், அசோக் செல்வனை பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள நேர்கிற அளவுக்கு இரிட்டேட்டிங் பேஸ்கட்டு.
ப்ரியா ஆனந்தை ஸ்கூல் யூனிபார்மில் பார்க்க நேரும் அந்த நிமிஷம், இதயம் ஒரு கணம் ஸ்தம்பித்து இயங்குகிறது. நல்லவேளை… அடுத்தடுத்த காட்சியிலேயே கல்லூரிக்கு இடம் மாற்றுகிறார் டைரக்டர். தப்பித்தோம்… தன் கேரக்டரை அப்படியே உணர்ந்து அதற்குள் கரைந்திருக்கிறார் ப்ரியா ஆனந்த். எல்லாமே செட்டப் என்று தெரியவருகிற போது ப்ரியா காட்டும் எக்ஸ்பிரஷன்கள் அவ்வளவு துல்லியம். மில்லி மீட்டர் தாண்டாத நடிப்பு. இவரது கேரியரில் இது சொல்லிக் கொள்கிற மாதிரியான படம்.
சமுத்திரக்கனிக்கு லோக்கல் ரவுடி கேரக்டர். ஆனால் தனக்கென ஒரு இமேஜ் இருக்கிறது. அதை கெடுத்துடாதீங்க என்று கதறினாரோ என்னவோ? கமர்கட் தடவிய கத்தியாக காண்பிக்கிறார்கள் அவரை. அவரது பேச முடியாத மகனை அசோக் செல்வன் காப்பாற்றும் அந்த காட்சியும், அதன் பின்னடக்கமும் ரியலி ஜோர். அடுத்தடுத்து கனியின் உதவியோடு விஸ்வரூபம் எடுக்கும் அசோக்கையும் அந்த சில காட்சிகளில் மட்டும் ரசிக்க முடிகிறது.
பிறந்ததிலிருந்தே வலிமையான வஜ்ஜிரம் கஞ்சியை குடித்தது போல முறைப்பாகவே திரிகிறார் அப்பா மாரிமுத்து. வழக்கம் போல ஒட்டாமல் துருத்திக் கொண்டு நிற்கிறார் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்.
நாட்டில் சாதிக்கிற ஒவ்வொருவனும், தன் வாழ்வில் நடந்த ஏதோவொரு சிறு பொறியால் உந்தப்பட்டவர்கள்தான் என்பதை சொல்லும் அந்த க்ளைமாக்ஸ் மட்டும் நெகிழ்ச்சி.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் இனிமை.
காம்ப்ளக்சில் மாட்டிக் கொண்ட பசங்களுக்கான ‘காம்ப்ளான்’ இது! ஆளுக்கொரு சிப் அடிங்க!
-ஆர்.எஸ்.அந்தணன்