ஐட்டம் டான்ஸ் விஷயத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் எரிச்சல்?
குடும்பநல கோர்ட்டுகள் செய்ய வேண்டிய வேலையை, ஒரு ஸ்பீட் போஸ்ட்டை விடவும் வேகமாக செய்து கொண்டிருக்கிறார் லட்சுமிராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம், ஆலமரம் இல்லாமல் அவர் நடத்தும் பஞ்சாயத்துகள் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானாலும், பலன் பெற்ற குடும்பங்கள் “பகவதியே…” என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றன அவரை. இந்த நேரத்தில் அவரே இயக்கும் படம் எப்படியிருக்க வேண்டும்?
பொறுப்புணர்ந்து ஒரு பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார் அவர். எண்பது வயது பாட்டி சுப்புலட்சுமி ஒரு கேரக்டரிலும், சாலம்மாள் என்ற இன்னொரு கேரக்டரில் லட்சுமி ராமகிருஷ்ணனும் நடிக்க, விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘அம்மிணி’ திரைப்படம் இவருக்கு என்ன மார்க் கொடுக்கப் போகிறதோ? ஆனால் பேச்சில் பிசறடிக்காத கான்பிடன்ஸ் இருக்கிறது அவரிடம்.
“28 நாளில் இந்த படத்தை எடுத்திருக்கேன். மிக மிக லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம், சொசைட்டியில் பெண்கள் மீதிருக்கும் மரியாதையை மேலும் அதிகமாக்கும். அதில் டவுட்டே இல்லை” என்றார். அப்புறம் அவர் சொன்னதுதான் ஷாக். “இப்ப வர்ற படங்களில் பெண்களை ஐட்டம் டான்சுக்கு யூஸ் பண்ணுறாங்க. நம்ம படத்திலேயும் ஒரு ஐட்டம் டான்ஸ் இருக்கு. ஆனால் ஆடுறது பெண் இல்ல. நம்ம ரோபோ சங்கர். ஒரு ஆணை ஐட்டம் ஆட வச்சுருக்கேன்னு நினைக்கும்போது கொஞ்சம் திருப்தியா கூட இருக்கு” என்றார்.
நடுவில் இவருக்கும் தயாரிப்பாளர் வெண் கோவிந்தாவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு, படத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். எப்படியோ… இறங்கி வந்த தயாரிப்பாளர், “இத்தனை நாள் படத்தை சும்மா போட்டு வச்சிருந்ததற்கு மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்குறேன். அடுத்த மாதம் ரிலீஸ் பண்றோம்” என்றார்.
உலக படவிழாக்கள் அத்தனையிலும் கலந்து கொள்ளவும் ஏற்பாடாகி வருகிறதாம். அள்ளுங்க அள்ளுங்க…
To listen audio click below :-