அழவிட்டார் தாணு! அழுதார் பாடலாசிரியர்?
வெறும் புளி சாதம் கேட்டால், டிபன் பார்க்சில் ‘புலி’யையே வைத்து பார்சல் பண்ணித் தருகிற அளவுக்கு காஸ்ட்லி தயாரிப்பாளர் தாணு என்பது உலகறிந்த ஒன்றுதான்! கடந்த முப்பது வருஷங்களுக்கும் மேலாக அவரது விளம்பர யுக்தியை அடித்துக் கொள்ள இன்னொரு ஆள் பிறக்கவேயில்லை என்பதுதான் ரெக்கார்டு. எல்லா விஷயங்களிலும் பிரமாண்டம் காட்டும் தாணு, ஒரு விஷயத்தில் ஆத்மார்த்தமாக செய்த நற்காரியம் ஒன்று, இன்று இன்டஸ்ட்ரியில் வியப்பாக நோக்கப்படுகிறது. அது?
கபாலி படத்தில் ‘வீரத்துறந்தரா’ என்றொரு பாடல். அந்த பாடலை எழுதியவர் உமா தேவி என்ற பெண் கவிஞர். தமிழ்சினிமாவில் அறிமுக நிலையில்தன் இருக்கிறார் இவர். சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித் காம்பவுண்டில் மெல்ல வளரும் இந்த செடி, இன்னும் கிளைவிட்டு இலை பரப்பவில்லை. அதற்குள் ரஜினி படத்திற்கு பாட்டு. அதுவும் மிக முக்கியமான ஒரு பாட்டு. (இந்த வயிற்றெரிச்சலில்தான் கவிப்பேரரசர் வாளை சுற்றியிருப்பாரோ என்னவோ?)
இந்த பாடல் எழுதியதற்காக சம்பளம் வாங்க, தாணுவின் அலுவலகத்திற்கு வந்திருந்தாராம் உமாதேவி. அவரிடம், இதுக்கு முன்னாடி நீங்க எழுதுன பாட்டுக்கு எவ்ளோம்மா வாங்கியிருக்கீங்க என்று கேட்டிருக்கிறார் தாணு. பதினைந்தாயிரம் சார்… என்றாராம் அந்த கவிஞர்.
சிரித்துக் கொண்டே தன் செக் புக்கை எடுத்தவர், ஒரு தொகையை எழுதி அவரிடம் கொடுக்க, ஸ்பாட்டிலேயே கண்கள் சொய்ங்க் என்றாராகிவிட்டதாம் உமாதேவிக்கு. அதில் எழுதப்பட்டிருந்த தொகை, இரண்டு லட்சம்!
நல்லவேளை… பால் பாயின்ட் பேனாவால் நிரப்பப்பட்டிருந்தது அந்த தொகை. இல்லையென்றால், உமாதேவியின் ஆனந்த கண்ணீர் பட்டு, சில இலக்கங்கள் கரைந்து போனாலும் போயிருக்கும்!
https://www.youtube.com/watch?v=RxYUAwoiLQw