விஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட்! மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி!

எங்கே புயல் கிளம்பினாலும், அது மையம் கொள்ளும் இடம் கடலூர் மற்றும் விசாகப்பட்டினமாகதான் இருக்கும். அப்படிதான் கலெக்ஷன் என்ற எண்ணம் வந்தால் போதும். மலேசியாவையும் சிங்கப்பூரையும் மையம் கொள்வார்கள் சினிமாக்காரர்கள். நடிகர் சங்க கட்டிட நிதிக்காக இன்று மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விடவும் எக்கச்சக்க சந்தோஷத்தில் முடிந்திருக்கிறது.

அஜீத் விஜய் இருவரும் வர மாட்டார்கள் என்று முன்பே தெரிந்தாலும், மலேசிய ரசிகர்கள் ரஜினி கமலுக்காக ஆர்வத்தோடு காத்திருந்தார்கள். சிறிது தொலைவிலேயே இருக்கும் ஓட்டலில் இருந்து ஸ்பெஷல் ஹெலிகாப்டரில் விழா நடக்கும் கிரவுண்டுக்குள் வந்திறங்கினார்கள் ரஜினியும் கமலும். மேலேயே அந்தரத்தில் நின்றபடி இரண்டு முறை சுற்றியது ஹெலி. ஏன்? எல்லா ரசிகர்களுக்கும் தரிசனம் முறையாக அமைய வேண்டும் அல்லவா?

இவ்விருவருக்கும் கொடுக்கப்பட்ட பில்டப் ரசிகர்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத பில்டப் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் குட்டி அண்ணாச்சிக்குதான். கடந்த சில மாதங்களாகவே தமன்னா, ஹன்சிகாவுடன் டூயட் ஆடாத குறையாக விதவிதமாக வந்து போகும் இந்த குட்டி அண்ணாச்சி, மீம்ஸ் கிரியேட்டர்களின் மொத்த மற்றும் சில்லரை வியாபாரக் கிடங்காக இருக்கிறார். இவரது விளம்பர கரம் மலேசியா வரைக்கும் நீளும் என்று கனவிலும் நினைத்திருக்கப் போவதில்லை யாரும்.

இந்த விழா நடக்க காரணமானவர், முக்கியமானவர், பரந்த உள்ளம் கொண்டவர் என்றெல்லாம் மைக்கில் ஒரு குரல் வர்ணித்துக் கொண்டிருக்க… ஸ்டேடியத்தின் ஓரத்திலிருந்து ஒரு கருப்பு நிற ஆடிக் கார் கிளம்பியது. திறந்த காரில் இரு கைகளையும் உயர்த்தி கும்பிட்டபடியே வந்தது சாட்சாத்… நம்ம குட்டி அண்ணாச்சிதான். கிரவுண்டின் ஒரு முனையில் இறங்கி, மறுமுனையை நோக்கி விளம்பரத்தில் வருவது போலவே நடக்க ஆரம்பித்தார் நம்பிக்கை நட்சத்திரம். ஆனால் ஐயகோ, ஒருவர் கூட கைதட்டவில்லை. அட…பிஸ்கோத்துகளா, டம்மியாக கூச்சல் போடுகிற ஆடியோவையாவது எழுப்பித் தொலைத்திருக்கக் கூடாதா? அண்ணாச்சி கொஞ்சம் அப்செட்தான்! இந்த அலப்பறைக்காக அண்ணாச்சி கொடை வழங்கியது இரண்டரை கோடி ரூபாய்!

கபாலி படப்பிடிப்புக்குப் பின் நான் இரண்டு வருடம் கழித்து இப்போதுதான் வருகிறேன். என் இரண்டாவது தாய் வீடு மலேசியா என்றார் ரஜினி. மலேசியா மக்களுக்கு நன்றி சொன்ன கமல், ஓயாமல் உழைத்த நடிகர் சங்க இளைஞர்களை பாராட்டினார்.

அவர் பாராட்டியதில் சற்றும் மிகையில்லை. விழா நடந்த அரங்கத்தில் காலையிலிருந்தே உட்கார நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள் விஷாலும் கார்த்தியும். கூட்டத்திலிருந்து ரசிகர்கள் கொடுக்கிற தண்ணீரை குடித்துக் கொண்டு, அவர்கள் தந்த கர்சீப்பால் முகம் துடைத்துக் கொண்டு இவ்விருவரும் உழைத்த உழைப்பை அவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட முடியாது.

டிக்கெட் ரேட் குறைந்த அளவே வைக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள் தருகிற பணம் அஸ்திவாரத்திற்கு கூட தாங்காது என்ற முணுமுணுப்பு இருந்தது. ஆனால் மலேசிய நிறுவனங்களின் விளம்பர வருவாய், ஒளிபரப்பு உரிமையை பெற்ற சன் தொலைக்காட்சி தரப்போகிற பணம், இவற்றுடன் சரவணா ஸ்டோர்ஸ் வழங்கிய இரண்டரை கோடி இவற்றையெல்லாம் கூட்டினால், கட்டிடம் கம்பீரமாக எழுவது நிச்சயம்.

விஜய், அஜீத், நயன்தாரா, சிம்பு போன்ற முக்கிய நட்சத்திரங்கள் விழாவை புறக்கணித்தது சோகம்தான்.

முக்கிய வேண்டுகோள்- கல்வெட்டில் யார் பெயர் இருக்கிறதோ இல்லையோ…. விஜய் அஜீத் பெயரை மட்டும் தப்பி தவறி கூட போட்றாதீங்க மவராசனுங்களா…!

– மலேசியாவிலிருந்து மல்கோத்ரா

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கீர்த்தி சுரேஷை பார்த்து ஏன் அப்படி சொன்னார் விக்னேஷ் சிவன்?

முயற்சி இருந்தால் எந்த பூவையும் பறித்துவிடலாம் என்பதற்கு விக்னேஷ் சிவனை விட்டால் சிறந்த உதாரணம் உலகத்தில் இருக்கவே முடியாது. ஒரு காலத்தில் நடிகை சோனாவின் வீட்டில் கைப்பிள்ளையாக...

Close