மனுஷனா நீ விமர்சனம்

‘பல்லி விழுந்த பஞ்சாமிர்தம் இனிப்பாயிருந்தா என்ன? புளிப்பாயிருந்தா என்ன? தலைப்பே செவுட்டுல அடிக்குது. படம் எப்படியிருந்தா எனக்கென்ன?’ இப்படியொரு மூடு வராமல் தியேட்டருக்குள் நுழைகிற ஆள் ஒரே ஒருவராகதான் இருப்பார். அவர்? இப்படத்தின் இயக்குனர் கஸாலி. இருந்தாலும் பொறுத்துக் கொண்டு உள்ளே போனால் ஒன்று புரிகிறது. ‘மனுஷனா நீ’ என்று இந்தப்படம் கேட்பது ஒருவரை அல்ல. ஒரு கூட்டத்தை. அந்த கூட்டம்…. மனுஷனை காப்பாற்றும் மருத்துவர் கூட்டம்!

இந்தப்படத்தை எந்த மருத்துவர் பார்த்தாலும் ‘எரிச்சலோபியா’வுக்கு ஆட்படாமல் தப்பிக்கவே முடியாது!

ஊரில் அடிக்கடி இளைஞர்கள் காணாமல் போகிறார்கள். விசாரிக்கக் கிளம்பும் போலீசுக்கு வில்லனே ஒரு மருத்துவர்தான் என்று தெரியவர…. ஏன் கடத்தல்? எதற்காக கடத்தல்? என்கிற விபரம் க்ளைமாக்ஸ் நெருக்கத்தில்! கதை, அது சொல்ல வந்த உண்மைக்காக பொறுத்துக் கொண்டாலும் அந்தக் கதையை சொன்ன விதத்திற்காக நாலு ஊசியை ஒரே நேரத்தில் ‘புட்டத்தில்’ ஏற்றலாம்.

கதை திரைக்கதை இயக்கம் மியூசிக் என்று நாலாபுறமும் நின்று மேய்ந்திருக்கிறார் கஸாலி. ஆங்காங்கே பளிச். ஆங்காங்கே புளிச்!

படத்தின் ஹீரோ இதற்கு முன் ஏதேதோ படங்களில் நடித்தவராம். பிளாஸ்டிக் சர்ஜரி, ஆபரேஷன், ஆள் மாறாட்டம் என்று எப்படி துவைத்தாலும் எரிச்சலூட்டும் முகம். நல்லவேளை… அவர் முகத்தில் விசேஷ மேக்கப்புகளை போட்டு ஒரிஜனலுக்கு இந்த டூப்ளிகேட்டே தேவலாம் ஆக்கியிருக்கிறார் டைரக்டர்.

கஸாலியே முக்கிய வில்லன் ரோலையும் ஏற்றுக் கொண்டிருப்பதால், குறைந்த பட்சம் சொந்த தோட்டத்துக்காவது உரம் வேலை செய்ததே… என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

படத்தின் ஹீரோயின் அனு கிருஷ்ணா. பப்ளிமாஸ்சுக்கு பவுடர் போட்டது போல இருக்கிறார். நள்ளிரவிலும் புல் மேக்கப்போடு திரிவதுதான் படு பயங்கர ஷாக்.

நெல்லை சிவா, கிரேன் மனோகர் போன்றவர்களெல்லாம் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். படத்தில் பிளசன்ட் முகங்களாக தென்படுகிறவர்களில் முதல் பளிச் அந்த போலீஸ் அதிகாரிக்கு. பஞ்சு சுப்புவுக்கு பலே ரோல். கிடைத்த வாய்ப்பை கேட்ச் பண்ணியிருக்கிறார் அவரும்.

மலேசியாவில் நடக்கிற காட்சிகளில் மட்டும் நல்ல ரிச் நஸ். அதிலும் பிரம்மன் அளந்த தங்க சிலை போல நீச்சல் குளத்தில் முங்கி எழும் அந்த தேவதையை, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டாவது கோடம்பாக்கத்திற்கு இறக்குமதி செய்யலாம்.

கஸாலி இசையில் பாடல்கள் தப்பிவிட்டன. குறிப்பாக அந்த அரபிக் ஸ்டைல் பாட்டு…. அசத்தல்!

படத்தில் எல்லாருமே சீரியஸ் ஆக நடித்திருக்கிறார்கள். ஆனால் படம்தான் ….?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அப்படிதான் விற்போம்! விஷால் கேட்கக் கூடாது! தியேட்டர் அதிபர்கள் அட்டூழியம்!

Close