அப்படிதான் விற்போம்! விஷால் கேட்கக் கூடாது! தியேட்டர் அதிபர்கள் அட்டூழியம்!
க்யூப், யுஎப்ஓ போன்ற நிறுவனங்கள் தியேட்டர் ஒளிபரப்பு சேவைக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாக்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளன. தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துவிட்டார்.
கொடுமை என்னவென்றால், மேற்படி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தோ அல்லது அவர்களிடம் தவணை முறையிலோ புரஜக்டர்களை வாங்கிப் பொருத்திய தியேட்டர்காரர்கள் பாடுதான் திண்டாட்டம். புது ஒளிபரப்பு நிறுவனம் என்றால் மீண்டும் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். வாங்கி வைத்த புரஜக்டர் வடை சுடக் கூட பயன்படாது. அப்படியிருக்க எப்படி ஸ்டிரைக்கில் கலந்து கொள்வார்கள்?
இந்த நிலையில்தான் தியேட்டர் அதிபர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே ‘இந்த ஸ்டிரைக்கில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்’ என்பதுதான். எடுத்த படங்களை கொடுத்தால்தானே படத்தை போடுவே? நாங்க தர மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் முரண்டு பிடித்தால் கூட எத்தனை நாளைக்கு தாக்குப்பிடிக்க முடியும்?
அதிருக்கட்டும்… இந்த கூட்டத்தில் போடப்பட்ட இன்னொரு தீர்மானம்தான் அந்த பொறுத்தார் பூமியாழ்வாருக்கே அடுக்காது. ‘நாங்கள் விற்கிற பாப்கார்ன், கூல் டிரிங்ஸ் விலை பற்றி விஷால் பேசக் கூடாது. பேசியதை கண்டிக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்கள்.
நல்லா இருக்குய்யா உங்க நியாயம்?